ஒரு ஆளுக்கு இவ்வளவு அன்பு இருக்க முடியுமானு இன்னைக்கு பலரும் திகைச்சுப்போய் இருக்காங்க. சினிமா பிரபலங்கள, அரசியல்வாதிகள், சின்ன சின்ன ஆர்டிஸ்ட், ஏன்.. சாதாரண மக்கள்கூட சோஷியல் மீடியால மயில்சாமி பத்தி எழுதுற படிக்கும்போது கண்ணு கலங்குது. இந்த மனுஷனை மாதிரி ஒருநாளாவது நம்ம வாழ்க்கைல வாழ்ந்திடணும்னு பலரையும் பொறாமையே பட வைச்சிட்டாரு. இவ்வளவு பேர் உணர்ச்சிவசமா மயில்சாமி பத்தி எழுதுறாங்களே.. ஏன்?

மயில்சாமி, சிறந்த காமெடியன், நடிகர்னு எல்லாருக்கும் தெரியும். அவரோட பெஸ்ட் படங்கள், காமெடிகள், அரசியல் எல்லாத்தையும் கடைசில பார்ப்போம். முதல்ல அந்த மனுஷனோட குணத்தைப் பத்தி தெரிஞ்சுப்போம். நடிகர் விவேக் தான் மறையுறதுக்கு முன்னாடி ஒரு மேடைல மயில்சாமி பத்தி பேசும்போது, “இவன் கேரக்டர் இருக்கே அற்புதமான கேரக்டருங்க. பாரதிராஜா சார்ட்ட இவன் பண்ணதையெல்லாம் ஒருமணி நேரம் சொன்னேன்னு வைங்க. இந்த ராஸ்கல் இவ்வளவு நாளா எங்க இருந்தான்? அவனைப் பத்தி படம் எடுக்கணும்னு சொல்லுவாரு. இவனைப் பார்த்தா இளிச்சவாயனா? இல்லை, நல்லவானு தோணும். ஏன்னா, படத்துல நடிச்சு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு கைக்கு வந்ததும், அவனுக்கு பத்தாயிரம், இவனுக்கு பத்தாயிரம்னு கொடுத்து முடிச்சிடுவான். ஒருநாள் பணக்காரனா இருப்பான். இன்னொரு நாள், பிச்சைக்காரனா இருப்பான். இப்படிதான் மயில்சாமி வாழ்க்கை ஓடுது”னு பேசுவாரு. இந்த வீடியோ சோஷியல் மீடியால செம வைரல் ஆகிட்டு இருக்கு. அதை கேட்கும்போதே யார்யா நீ, நீ இருக்கும்போது இந்த சமூகம் உங்களை இன்னும் கொண்டாடி இருக்கணுமேனு தோணுச்சு. அதே போல, விவேக் மேல இருந்து, “நீயும் வந்துட்டுயா?”னு கேக்குற மாதிரி ஒரு மீம், அதையும் பார்த்து பலரோட கண்களும் கலங்கிட்டுச்சுனுதான் சொல்லணும். சரி, விவேக் அவருக்கு தெரியும். அதுனால உதவு பண்றதுலா மேடைல சொல்றாருனு நீங்க நினைக்கலாம். ஆனால், ஃபேஸ்புக்ல, ட்விட்டர்லனு ஏகப்பட்ட முகம் தெரியாத நபர்கள் மயில்சாமி அப்படி பண்ணாரு, இப்படி பண்ணாரு, அவ்வளவு கொடுத்தாரு, இவ்வளவு கொடுத்தாருனு கதைகளை ஷேர் பண்ணி கண்ணீர் விட்டுட்டு இருக்காங்க.
இன்னைக்கு இருக்குற 90’ஸ் கிட்ஸ் எல்லாத்துக்கும் மயில்சாமியை காமெடியனா தெரியுறதுக்கு முன்னாடி காமெடி டைம் ஸ்டாரா, மிமிக்ரி ஆர்டிஸ்ட்டா தெரியும்னு சொல்லலாம். மனுஷன் தன்னோட வாய்ஸ்ல பண்ணாத சேட்டைகளே இல்லை. ஃபைட் சீனுக்கு சவுண்ட் கொடுக்கிறதுல இருந்து சிவாஜி படத்துல நிஜ ரஜினிக்கே டப்பிங் பேசுனது வரை ஏகப்பட்ட தரமான சம்பவங்களை மனுஷன் பண்ணியிருக்காரு. கேசட்கள் பிரபலமாக இருந்த சமயத்துல சிரிப்போ சிரிப்புன்ற ஆடியோ கேசட் 80’ஸ் கிட்ஸ் மத்தில செம ஃபேமஸ். அந்த நிகழ்ச்சியை கலக்கிட்டு இருந்தவரு மயில்சாமிதான். சினிமாக்கு வர்றதுக்கு முன்னாடி மேடை நாடகங்கள் நிறைய நடிச்சிருக்காரு. அப்புறம் பாக்யராஜோட தாவணிக்கனவுகள் படம் மூலமா சினிமால அறிமுகமாகுறாரு. சின்ன சின்ன கேரக்டர்ஸ்தான் ஆரம்பத்துல கிடைக்குது. சொல்லப்போனால், அடையாளம் தெரியாத, கிரவுட்ல நிக்கிற கேரக்டர்ஸ்.

நடிகர் சிவகுமார்கிட்ட ஒருநாள் எனக்கு சினிமாலாம் செட் ஆகாது. நான் திரும்பவும் ஊருக்கேப் போறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு சினிமா, படங்கள் கிடைக்க மாட்டேங்குதுனு பயங்கரமா பொலம்பியிருக்காரு. அதைக்கேட்ட சிவக்குமார் எனக்கு ஆரம்பத்துல அப்படிதான் இருந்துச்சு. வெயிட் பண்ணு கரெக்டான ஒரு கேரக்டர் உன்னை தேடி வரும்னு ஆறுதல் சொல்லியிருக்காரு. இப்போ, நீ ஊருக்கு போனால் உன்னை ஒரு பயலும் மதிக்க மாட்டான், நல்ல நிலைமைக்கு வந்துட்டு போனும் சொல்லியிருக்காரு. நான் வரும்போதும் எவனும் என்னை மதிக்கலைனு திரும்பவும் பொலம்பியிருக்காரு. ஆனால் கொஞ்சம் நாள்ல சிவக்குமார் சொன்ன மாதிரி நிறைய கேரக்டர்ஸ் அவருக்கு கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. சிவக்குமாருக்கு அவர் பெயர் சொல்லும்படி கிடைச்ச கேரக்டர் முருகன். அதுக்கு அவரைத்தவிர யாரும் செட் ஆக மாட்டாங்க. எனக்கு பாருங்க, குடிகாரன் கேரக்டரா வருதுனு கொஞ்சம் ஃபீல் பண்ணியே சொல்லுவாரு. இப்போ, அதிகப்படியா போலி சாமியார்கள் கேரக்டர்கள்தான் வருது. ஏன்னா, நல்ல சாமியார் எவனும் இங்க இல்லைனும் மனுஷன் போற போக்குல ஒரு தக் லைஃபை சொல்லிட்டு போவாரு.
தமிழ் சினிமால எவ்வளவோ காமெடியான கேரக்டர்ஸ் வந்துருக்கு. ஆனால், தமிழ் சினிமா இருக்குற வரை கொண்டாடக்கூடிய பல நல்ல காமெடி கேரக்டர்களை மயில்சாமி கொடுத்துருக்காரு. முதல்ல அவர் காமெடி அப்டினாலே, பாளையத்து அம்மன் காமெடிதான் நியாபகம் வரும். அந்த இன்டர்வியூ சீன்ல விவேக், மயில் ரெண்டு பேரும் சாமியாரா வருவாங்க. போட்டிப்போட்டு நம்மள சிரிக்க வைப்பாங்க. என் வயசு 2000-ம்னு விவேக் ஒரு பக்கம் காமெடி பண்ணா, வாட் ஆர் யூ டாக்கிங்னு சிரிச்சே விவேக்கை காண்டேத்துவாரு. ஒரு உண்மையை சொல்லவா, மயில்சாமிக்கு படிப்பறிவு இல்லை. விவேக் சொல்ற மாதிரிதான், மயில்சாமிகிட்ட யாராவது இங்கிலீஷ் பேசுனா, அவரு யார்கிட்ட பேசுறாரோ, அவருக்கு இங்கிலீஷ் மறந்து போகும். ஆனால், மனுஷன் நிறைய படத்துல பீட்டர் விட்டுட்டுதான் வருவாரு. அடுத்து தூள் படம். விவேக் – மயில்சாமியோட எக்ஸ்ட்ரீம்னு சொல்லலாம். “இதை வைச்சுட்டு கீழ் திருப்பதி வரைக்கும்தான் போக முடியும், திருப்பதில பட்ஜெட் இடிக்குதாம். அதுனால ஜிலேபியை கொடுங்கனு சந்திரபாபு நாயுடு சட்டம் போட்ருக்காரு”னு சில வசனங்கள்லாம் அல்டிமேட்.
டைட்டில் பார்க்கை தமிழ்நாடு முழுக்க பிரபலமாக்குனது மயில்சாமிதான். திருவிளையாடல் படத்துல, “ஐ எம் வேணுகோபால். ஃப்ரம் டைட்டில் பார்க்”னு சொல்லி அறிமுகமானதுல இருந்து, அந்த டயலாக்கை திரும்ப திரும்ப சொல்லி சிரிக்க வைச்சிட்டே இருப்பாரு. ரியல் லைஃப்ல மட்டுமில்ல, படங்கள்லயும் சில கேரக்டர் மூலமா, இவரை மாதிரி வாழணும்னு நினைக்க வைச்சிருப்பாரு. உத்தமபுத்திரன் படம் நியாபகம் இருக்கா. சந்தோஷ் கேரக்டர்ல வருவாரு. “சார், எங்க போறீங்க?”, வீக் எண்ட எஞ்சாய் பண்ண் போய்ட்டு இருக்கேன். “அப்போ வீக் டேஸ்ல என்ன பண்ணுவீங்க?”, வீக் எண்டுக்காக வெயிட் பண்ணுவேன்னு அல்டிமேட் டயலாக் ஒண்ணு போடுவாரு. இன்னைக்கும் நிறைய பேரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல இந்த டயலாக்கை பார்க்க முடியும். அதுலயே அவருக்கு சாண்டி, சாண்டினு பி.ஜி.எம்லாம் போட்ருப்பாங்க. இப்படி கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல நடிச்சிட்டாரு. காமெடியனா மட்டுமில்ல சில படங்கள்ல நல்ல கேரக்டர் ரோலும் செம மாஸா பண்ணியிருப்பாரு. எக்ஸாம்பிள்க்கு, கவலை வேண்டாம்னு ஜீவாவோட படம் இருக்கு. காமெடியான படம். ஆனால், அதுல ஜீவாவுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி டயலாக் ஒண்ணு பேசுவாரு. அவ்வளவு இதமா அந்த நடிப்பு இருக்கும். “ரொம்ப புடிச்சவங்களை விடுறது வேதனையான விஷயம்தான். ஆனால், உன்னை விட்டு போறேன்னு சொல்றவங்களை புடிச்சு வைக்கிறது அதைவிட ஜாஸ்தி வேதனையை தரும்டா” அப்டினு அவர் சொல்ற டயலாக் நம்மளுக்கே சொல்ற மாதிரி இருக்கும்.
Also Read – ஒரு கதை சொல்லட்டா சார்… ஜெய் பீம் மணிகண்டன் செம சினிமா ஜர்னி!
எம்.ஜி.ஆரோட மிகப்பெரிய ஃபேனா இருந்தாரு. அவரோட ஃபேனா இருந்ததாலதான், இவ்வளவு நல்ல விஷயங்களை அவர் பண்ணாருனு சொல்லுவாங்க. தன்னோட குணம் மக்களுக்கு பயன்பட்டுட்டே இருக்க வேண்டும்னு நினைச்சு அரசியல்லயும் இறங்குனாரு. பல விஷயங்களை காட்டமா விமர்சிச்சு பேசியிருக்காரு. மக்களுக்கு உதவுறது மட்டுமில்ல, அவங்களுக்கு ஒண்ணுனா குரல் கொடுக்கவும் தயங்க மாட்டாரு. கடந்த தேர்தல்ல விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருந்தாலும், உதவுறது அவர் குணம்ன்றதால, அந்த தோல்வி அவரை பாதிக்கலை.
கடைசியா அவர் அடிக்கடி சொல்ற கதையவே சொல்லி முடிக்கலாம்னு நினைக்கிறேன்..

கடவுள் ஒருதடவை ஒருத்தரோட வீட்டை எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தாராம். என்னை அப்டினு கேட்டதுக்கு, அந்த வீட்டுல ஒரே கூட்டமா இருக்கு. என்னனு விசாரிக்கணும்னு சொல்லியிருக்காரு. கடவுளே இன்னொரு வேஷத்துல போய் விசாரிச்சுருக்காரு. அப்போ, பசுனா சோறு போடுவாரு, ஸ்கூல் ஃபீஸ்னா காசு கொடுப்பாரு, கஷ்டம்னா உதவுவாருனு சொல்லிருக்காங்க. அப்படியானு சொல்லிட்டு கடவுளே நேர்ல போய், உனக்கு மூணு வரம் தறேன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு அவரு, “எனக்கு எதுக்கு வரம்லா? நானே புடிச்சத செஞ்சுட்டு போய்டுறேன்”னு பதில் சொன்னதும், கடவுள்.. “இல்லையா நான் வரம் என்னனு சொல்றேன். நீ புடிச்சா வாங்கிக்க. பசினு வந்தா, நீ அவங்க வயித்துல கை வைச்சா பசி போய்டும். கஷ்டம்னு வந்தா, மனசுல கை வைச்சா சரியாயிடும், உடம்பு சரி இல்லைனு வந்தா, தலைல கை வைச்சா சரியா போய்டும்” – இப்படி சொன்னதும் சூப்பரா இருக்கே.. அப்போ, இன்னொரு வரமும் வேணும்னு கேட்ருக்காரு. உடனே கடவுள், “மூணு வரமும் வேணாம்னு சொன்ன, இப்போ இன்னொன்னு கேக்குற. கேளு”னு சொன்னதும், “இந்த உதவிலாம் நான் தான் செய்தேன்னு அவங்களுக்கு தெரியக்கூடாது”னு சொல்லியிருக்காரு. இன்னைக்கு மயில்சாமி பண்ண உதவிலாம் படிக்கும்போது, அந்த கடவுள் வரம் கொடுத்த ஆளே இவர்தானோனு நமக்கு தோணும்.






This parzgraph is actually a pleasant onee it helps new web viewers, who are wishing in favor of blogging. https://glassi-greyhounds.mystrikingly.com/
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp