`கைகொடுக்குமா புதிய கணக்கு’ – தெரிந்தே விஜய் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்..!

தமிழ் சினிமாவின் தற்போதைய காலகட்டத்தை ‘தளபதி’ விஜய்யின் எரா என நிச்சயம் சூடம் அடித்து சொல்லலாம். இப்படி தன் கரியரில் உச்சத்தில் இருக்கும் விஜய், தன்னுடைய திரைப்பயணத்தில் அவ்வபோது மிக கடுமையான சில ரிஸ்க்குகளை எடுத்துதான் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அதில் சில ரிஸ்க்குகள் அவரது காலை வாரியிருந்தாலும் சில ரிஸ்க்குகள் கை கொடுத்து முன்னேற்றவும் செய்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது தெரிந்தே அவர் எடுக்கவிருக்கும் மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றைப் பற்றி இங்குப் பார்க்கப்போகிறோம்.

திருமலை கொடுத்த பிரேக்

திருமலை
திருமலை

2003-க்கு முன்புவரை தன்னுடைய கரியரின் தத்தளிப்பில் ஒரு பிரேக்குக்காக காத்துக்கொண்டிருந்த விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘திருமலை’. அதைத்தொடர்ந்து வந்த ‘கில்லி’, ‘மதுர’ ‘திருப்பாச்சி’ போன்ற படங்களின் கலெக்சனும் வசூலும் விஜய்யை தான் ஆசைப்பட்ட சிம்மாசனத்தில் கொண்டுவந்து உட்காரவைத்தது. அந்த சூழ்நிலையில்தான் எந்தவொரு மாஸ் ஹீரோவும் செய்யத் தயங்கும் காரியத்தை செய்தார். அது ‘சச்சின்’. வில்லன் இல்லாத, மாஸ் டயலாக்ஸ் இல்லாத முழுக்க முழுக்க ரொமாண்டிக் ஜானரில் அவர் நடித்த அந்தப் படம் வெறித்தனமான ரசிகர்களுக்கு வேண்டுமானால் ‘குஷி’ காலகட்டத்துக்குப் பிறகு தங்களது ஆஸ்தான ஹீரோவை இப்படிப் பார்ப்பதில் மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும் படம் என்னவோ பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

காவலன்

அதன்பிறகு அவரின் கரியரில் மீண்டும் இருண்ட காலம் தொடங்கியது. தொடர்ந்து ‘அழகிய தமிழ்மகன்’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’ ‘சுறா’ என அடுத்தடுத்து தோல்விப் படங்களாக வந்தது மட்டுமல்லாமல், அவர் மீது அதுவரை இல்லாத அளவுக்கு நாலாபுறமுமிருந்து கடுமையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. அந்த சூழலில் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்தான் அவரை அன்று காப்பாற்றியது. அது ‘காவலன்’. தொடர்ந்து படு ஹீட்டான ஆக்ஷன் படங்களிலேயே நடித்துவந்த அவர், ‘காவலன்’ படத்தில் அவர் ஏற்று நடித்த சாஃப்டான ‘பூமிநாதன்’ கதாபாத்திரம் விஜய் ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களுக்கும் ஸ்வீட் சர்ப்பரைஸாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது ரசிகர்களைவிட பொதுவான ரசிகர்களுக்குதான் அந்தப் படம் மிகவும் பிடித்த படமாக அமைந்துபோனது.

காவலன்
காவலன்

இந்தப் படம் வந்த அடுத்த ஆண்டே அவர் எடுத்த இன்னொரு மிகப்பெரிய ரிஸ்க்தான் ‘நண்பன்’. ஹிந்தியில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய்யா என ஆரம்பத்தில் ஏளன விமர்சனங்கள் கிளம்பினாலும் அமீர்கானுக்கு சற்றும் சளைக்காமல் ‘கொஸக்ஷி பசப்புகழ்’ பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் விஜய். முழுப் படத்திலும் பெயருக்குக்கூட ஒரு ஃபைட் காட்சி இல்லாமல், மாஸ் டயலாக்குகள் இல்லாமல் ஏன் ஒரு காட்சியில் ஜீவாவும் ஸ்ரீகாந்தும் அவர் மீது செருப்பை வீசி எறிய இடம் கொடுத்து நடித்தது என விஜய் காட்டிய தடாலடி மாற்றம் ‘குருவி’, ‘வில்லு’ டைமில் வைக்கப்பட்ட அனைத்து நெகட்டிவ் விமர்சனங்களையும் துடைத்து க்ளீன் ஆக்கியது. அந்த க்ளீன் இமேஜ்தான் பின்னாளில் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என விஜய் அடுத்தடுத்து மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர்களை கொடுக்க பக்கபலமாகவும் அமைந்தது.

விஜய் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்!

விஜய்
விஜய்

இந்த சூழலில்தான் மீண்டும் ஒரு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தார். தனது குட்டீஸ் ரசிகர்களை மனதில் வைத்து முழுக்க முழுக்க  ஃபேன்டஸி ஜானரான ‘புலி’ படத்தில் நடித்தார். படத்தின் ஜானருக்குப் பொருத்தமேயில்லாத ‘புலி’ எனும் டைட்டிலும் அப்போது பரபரப்பாக இருந்த `பாகுபலி’யின் தாக்கமும் தவறான புரோமோஷனும் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்களை சம்பாதித்துக் கொடுத்து பெரும் தோல்வியடைந்தது. அதன்பிறகு `தெறி, ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ என ஃபுல் மாஸ் காட்டிவரும் விஜய், தற்போது இன்னொரு மிகப்பெரிய ரிஸ்கை எடுக்கவிருக்கிறார். கார்த்தி நடிப்பில் ‘தோழா’ எனும் சாஃப்ட் ஜானர் படம் தந்த வம்சி இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் கதை கடந்த 25 வருடத்தில் இதுவரை நான் கேட்டிராத ஜானர் கதை என விஜய்யையே ஆச்சர்யமாக சொல்லவைத்திருக்கிறது. அதற்கேற்ப, அந்தப் படம் முழுக்க முழுக்க விஜய்யின் தற்போதைய வயதுக்கேற்ற ரொமாண்டிக் அம்சங்கள் நிறைந்த ஒரு சாஃப்டான படமாக உருவாகவிருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தனது படங்களில் சமூக பிரச்சனைகளை எடுத்துப் பேசி அதிரடி காட்டிவரும் விஜய் திடிரென இப்படியொரு படத்தில் நடிப்பது நிச்சயம் ரிஸ்கான ஒன்றுதான்.

வம்சி - தில் ராஜூ - விஜய்
வம்சி – தில் ராஜூ – விஜய்

இப்படியான ரிஸ்கைத் தெரிந்தே அவர் எடுப்பதன் பின்னணியில் சில கணக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. தற்போது தமிழில் ஆல்மோஸ்ட் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜய்க்கு, வம்சி இயக்கத்தில் நடிக்கப்போகும் படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தால் தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் என்னும் இடத்தை நோக்கி நகர உதவிகரமாக இருக்கும் என்பது அவரின் கணக்கு. அந்த அளவுக்கு மொழிகளைக் கடந்து அனைவரையும் கவரும்படியான கதையாகவும் அந்தக் கதை இருப்பதும் இந்த ரிஸ்கை எடுக்கும் தைரியத்தை விஜய்க்குத் தந்திருக்கிறது.

பார்க்கலாம்..!

Also Read – `ஹலமதி ஹபீபோ… ஹலமதி ஹபி வந்தாளே…’ – அப்டினா என்னங்கய்யா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top