AR Rahman

`காத்துல பியானோ வாசிக்குற கில்லாடி…’ டெக்னாலஜி ரசிகன் ரஹ்மான்

ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ரஹ்மான் இசைத்துறையில் நடக்கும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கவணிக்கிறார், அல்லது அந்த மாற்றங்களைக் கொண்டு வர்றார். அப்படி அவர் பயன்படுத்த ஆரம்பித்த சில வித்தியாச இசைக்கருவிகளும் அவற்றின் தாக்கத்தையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.

  • கடல் படத்தின் “அடியே” பாடலில் “மீனைத் தூக்கி றெக்க வரைஞ்ச, வானம் மேல வீசி எறிஞ்ச… பறக்கப் பழக்குனியே…” என்ற வரிகள் ஒலிக்கும் போது ஒரு பியானோ சின்ன நோட் வரும். உண்மையாவே ஒரு மீன் எப்படித் துள்ளுமோ, அப்படி பியானோ மேல துள்ளினா என்ன சப்தம் வருமோ அதையே இசையாக்கி வச்சிருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்.
  • “இது பொண்ணுங்களுக்காக நான் சேத்து வச்சிருக்க தங்கம். ஆனா, நீ இந்த கீபோர்ட் வாங்குறதுக்காக இதைத் தரேன். இதை வீணாக்காம பத்திரமா சம்பாதிச்சு கொடுத்துரு…” இது ரஹ்மானோட அம்மா ரஹ்மான் சின்ன வயசுல கீபோர்ட் வாங்க பேசும் போது அவர்கிட்ட சொன்ன வார்த்தைகளாம்.
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானின் யூ-ட்யூப் சேனலில் அமீனும் ரஹ்மானும் சேர்ந்து ஒரு Jam Session, Continum fingerboard-ல் வாசித்தார்கள். ரஹ்மானே 30 ஆண்டுகள் கழித்து கொஞ்சம் பேச ஆரம்பித்திருக்கிறார். அமீன் பேச இன்னுமொரு 30 ஆண்டுகள் ஆகும் போல… வாசித்த பிறகு “it’s fun right?” என ரஹ்மான் கேட்க, யாருக்கும் கேட்காமல் Yeah என அமீன் முனகுகிறார்.
  • ரஹ்மான் சில வருடங்களாகவே Drone ஆப்பரேட் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். “சின்ன வயசுல பட்டம் விட்டோம்ல, அது மாதிரி தான் இதுவும்” என சிரிக்கிறார்.
  • மரியான் படத்தில் “நெஞ்சே எழு”, “எங்க போன ராசா” பாடல்களை குட்டி ரேவதியுடனும் “இன்னும் கொஞ்ச நேரம்” பாடலை கபிலனுடனும் சேர்ந்து எழுதியிருக்கிறார் ரஹ்மான்.
  • ஓகே கண்மனி படத்தில், “ஆட்டக்காரா” பாடலை ADK உடனும், “மெண்டல் மனதில்” பாடலை மணிரதனமுடனும் சேர்ந்து ரஹ்மான் எழுதி இருக்கிறார்.
AR Rahman
AR Rahman

இந்த வீடியோவுக்கான தலைப்பைத் தேர்ந்தெடுத்தது முதல், என்ன எழுதலாம்னு ஐடியா கொடுத்து, அதற்கான குறிப்புகளையும் ஒரு Artificial Intelligence கருவி. இதற்கு முன்பு சோதனை முறையில் சில வீடியோக்களில் அதைப் பயன்படுத்தினோம். இந்த வீடியோவில் அதன் பங்களிப்பு கொஞ்சம் அதிகம். ரஹ்மான் மாதிரியான ஒரு தொழில்நுட்ப விரும்பிக்கு அந்த தொழில்நுட்பம் கொண்டு செய்யும் ஒரு சின்ன ட்ரிப்யூட் இது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் Consumer Electronic Show நிகழ்ச்சியின் மேடைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். அவர் கைகள் இரண்டிலும் வெள்ளை நிற வாட்ச் போன்ற ஒன்றை கட்டி இருந்தார். அவருடைய வலது காலிலும் அதே போல ஒரு வாட்ச். கால்களால் தாளம் போட்டுக்கொண்டே கையை அசைக்க இசை ஒலிக்கிறது. இது என்ன மாயம் என பார்த்தால், இன்னொரு வரை அழைத்தார், அவருடைய கையிலும் காலிலும் அதே போன்ற கருவி. மத்தளம் அடிப்பது போல வலது கையை அவர் அசைக்க மத்தளம் ஒலிக்கிறது. இடது கையில் ஒரு தந்திக்கருவியை மீட்டுவது போல சைகை செய்ய அழகான இசை ஒலிக்கிறது. அடுத்ததாக டிரம்ஸ் சிவமணி மேடைக்கு வருகிறார் அவர் உடலிலும் அதே போன்ற கருவிகள். மேடைக்கு ஒவ்வொரு இசைக்கலைஞராக வருகிறார்கள். எல்லோர் கைகளிலும் அதே போன்ற கருவிகள். காற்றிலேயே கையசைக்கிறார்கள். கால்களால் தாளமிடுகிறார்கள். அங்கே ஒரு இசைக்கச்சேரியே அரங்கேறுது. சில நிமிடங்கள் இது போன்ற ஒரு Free flow இசை வாசிப்புக்குப் பிறகு சில நொடிகள் அமைதி. ஒவ்வொரு கலைஞரும் கைகளை அசைக்க ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்த “ஜெய் ஹோ” ஒலிக்கிறது. Intel-ன் தொழில் நுட்பம் அது, Intel Curie Based Technology. நம்முடைய Gesture அதாவது கையைசைப்புகளால் ஏற்படும் அதிர்வுகளை டிஜிட்டல் அதிர்வுகளாக மாற்றி கனிணியின் துணை கொண்டு இசையாக ஒலிக்கும் தொழில்நுட்பம் அது. ரஹ்மானுடைய பல மேடை நிகழ்ச்சிகளில் இந்தக் கருவியை நாம் பார்க்கலாம். இன்னும் சில ஆண்டுகள் மேலும் பல இசையமைப்பாளர்கள் காற்றில் இசையமைப்பார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானோட இசையைப் பத்தி உலகம் முழுக்கவே எவ்வளவோ பேர் பேசிட்டாங்க… நாமளே போன வருஷம் ஒரு வீடியோவும் போட்டிருந்தோம். தலைவன் கிட்ட புதுசு புதுசா பேச நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல ஒரு விஷயம் வித்தியாசமான புதிய புதிய இசைக்கருவிகள், தொழில்நுட்ப அதிசயங்கள், புதுமையான கருவிகள் என கடந்த முப்பது ஆண்டுகளாகவே அவர் பல புதுமைகளை செய்திருக்கிறார். 10-15 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய அதிசயத்தோட அவர் வந்துகிட்டே இருக்கார். அவர் விரல்கள் அதிசயம் புரிந்த சில இசைக்கருவிகளையும் அந்த அதிசயங்களையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.

AR Rahman
AR Rahman

சில மாதங்கள் முன்பு அமெரிக்காவில் இருக்கும் MIT பல்கலைகழகத்தில் ஒரு கோர்ஸ் படிக்க போயிருக்கார் ரஹ்மான். இசையில் என்ன புதுமையான ஒரு விஷயம் பண்ணலாம்னு கத்துக்குறதுக்காக அவர் படிக்கப் போய் இருக்கார். அப்படி என்ன படிக்க போனார்..? இசைத்துறையில் Artificial Intelligence பற்றிய அவரோட பார்வை என்ன தெரியுமா..?

“எல்லாப் புகழும் இறைவனுக்கே” தமிழ்ல பேசி ஆஸ்கர் மேடையை கலக்கிய சில வருடங்கள் கழித்து 127 Hours -னு இன்னொரு ஹாலிவுட் படத்துக்கு தலைவன் தான் இசைனு அறிவிப்பு வந்தது, முதல் பாடலா If I Rise… பாடல் வீடியோ வெளியானது. “இன்னொரு ஆஸ்கர் குடுறா ஒபாமா!” அப்படின்னு இங்க கத்தாத குறை தான், அந்தப் பாடல் பின்னாடி ஆஸ்கருக்கு நாமினேட் ஆனது தனிக்கதை. அந்த வருஷம் டாய் ஸ்டோரி படத்தில் இடம்பெற்ற We Belong Together பாடல் விருதை தட்டிகிட்டுப் போச்சு. இப்போ அந்தக் கதை நமக்கு முக்கியமில்ல. அந்த பாடலோட வீடியோ வந்ததுன்னு சொன்னேன்ல அதுல தலைவன் ஒரு வித்தியாசமான இசைக்கருவியை வாசிப்பார். அடுத்த வருஷம் கோக் ஸ்டூடியோ அன்ப்லக்ட்ல “என்னிலே மகா ஒளியோ…” பாடல்லயும் “Jagao Mere Des” பாடலிலும் சில நிமிடங்கள் தலைவன் அந்த வித்தியாசமான இசைக்கருவியை வாசிப்பார். இது என்னடா புதுசா இருக்கேன்னு தேடிப்பார்த்தா அந்தக் கருவியோட பெயர் Harpeiji.

இந்த ஹார்பேய்ஜி இசைக்கருவியை அமெரிக்க ஆடியோ என்ஜினியர் Tim Meeks அப்படிங்குறவர் 2007-ம் ஆண்டு கண்டுபிடிக்கிறார். பரவலா சில இண்டிபெண்டட் இசையமைப்பாளர்கள் மத்தியில் அந்தக் கருவி பிரபலமாகுது. 2010-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் இசை சுற்றுப் பயனம் போனப்போ, அவர் தங்கி இருந்த அறைக்கே டிம் அந்தக் கருவியைக் கொண்டு போய் கொடுக்கிறார். அடிப்படையான விஷயங்களைக் கேட்கிறார், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அந்தக் கருவியை அவர் வாசிக்க ஆரம்பிச்சிடுறார். அந்த வீடியோவில் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நம்ம ஊர் இசை மட்டுமில்லாம ஜேஸ் வாசிக்குறாரு, வேற என்னமோ வாசிக்க டிரை பண்ணும் போது சொதப்பிருது, ரொம்ப சீக்கிரமா experiment பண்ணக்கூடாதுன்னு சிரிச்சுகிட்டே சொல்வார். அடுத்த சில மாதங்களில் தான் மேலே சொன்ன பாடல்களை அவர் வாசிச்சது.

AR Rahman
AR Rahman

ரஹ்மான் ஒரு எலக்ட்ரானிக் இசைக்கலைஞர், அது கம்ப்யூட்டர் இசைனு பொத்தம் பொதுவா ஒரு குறையை என் அப்பா காலத்து ஆட்கள் சொல்வாங்க. ஆனா, அந்த தொழில்நுட்ப இசைஞன் மிழவு, ருத்ர வீனை மாதிரியான இந்த மண்ணின் தொன்மையான இசைக்கருவிகளைத் தேடிப்போய் அவற்றைக் கொண்டு ஒரு இசையை உருவாக்கும், “Harmony With AR Rahman” என்ற மியூஸிக்கள் டாக்குமெண்ட்ரியின் இறுதி எபிஸோடில் இந்தியாவின் அத்தனை இசை மரபுகளிலிருந்தும் சில மாநிலங்களின் ஆதி இசைக்கருவிகளையும் கலைஞர்களையும் கொண்டு வாசித்து உருவாக்கிய பாடல் “man mauj mein”. இந்தப் பாடலை இது வரை நீங்கள் கேட்காமல் இருந்தால் இந்த வீடியோ முடிந்ததும் மறக்காமல் கேட்டுப்பாருங்கள். இந்தப் பாடலில் ரஹ்மானும், அமீனும் Continum Fingerboard என்ற கருவியை வாசிப்பார்கள். இந்தப் பாடலில் மேலே சொன்ன Harpeiji கருவியையும் ரஹ்மான் வாசிப்பார்.

அது என்ன Continum Fingerboard? அமெரிக்காவின் “இலினாய் பல்கலைக்கழக”த்தின் பத்தாண்டு கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட ஒரு கருவி தான் Continum Fingerboard. 1999-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த அந்தக் கருவியின் முதல் வெர்ஷன் அவ்வளவு பிரபலமாகவில்லை. அது அளவில் பெரியது, எக்கச்சக்க வயர் கனெக்‌ஷன்களும் தேவைப்படும். அதே பல்கலைக்கழகத்தின் Electrical and Computer Engineering பேராசிரியர் Lippold Haken இந்தக் கருவியில் பெரிய மாற்றங்களை செய்து மிகச்சிறிய பயன்படுத்த சிக்கலில்லாத ஒரு வடிவத்தில் அக்கருவியை மாற்றியமைக்கிறார். இந்த மாற்றங்களுடன் 2006-ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமான கருவி Haken Continum fingerboard என்றே அழைக்கப்படுகிறது.

அறிமுகமான புதிதில் இக்கருவியை சில Early adopter இசையமைப்பாளர்கள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். Western Music, Rock, Progressive Rock போன்ற இசைவடிவங்களுக்கு இக்கருவி கச்சிதமாகப் பயன்படுகிறது ரஹ்மான் விரல்கள் அதில் படும் வரை. இந்துஸ்தானி, கவ்வாலி, கர்நாடக சங்கீதம்னு அத்தனையையும் அந்தக் கருவியால் வாசிக்க முடியும்னு உலகம் அதற்குப் பிறகுதான் தெரிந்துகொண்டது.

இன்னும் 7 நிமிடம் 32 நொடிகளுக்கு மட்டும் தான் உனக்கு காது கேட்கும், அதுக்கப்புறம் காது கேக்காதுன்னு சொன்னா, ஒரு நொடி கூட வீனாக்காம நான் கேக்குற ஒரு பாட்டா Delhi 6 படத்தில் வந்த Rehna Tu பாட்டைத்தான் கேப்பேன். அந்தப் பாடலில் இந்தக் கருவியை ரஹ்மான் பயன்படுத்தி இருப்பார். 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெற்ற “Acid Darbari”, OK Kanmani படத்தில் “ஹே சினாமிகா!”, கடல் படத்தின் “சித்திரையே நிலா”, மரியான் படத்தின் “நேற்று அவள் இருந்தால்” சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தின் “தும்பி துள்ளல்” வரைக்கும் ரஹ்மான் இந்த Continum Fingerboard-ல் பல அற்புதங்களைப் படைத்துக்கொண்டு இருக்கிறார். உலகளவில் இக்கருவியை அதிகமாகவும் திறம்படவும் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் ஒரு நூறு வருடங்களுக்காவது ரஹ்மானின் பெயர் இருக்கும்.

இப்போ இணையமும், அவருடைய வளர்ச்சியும் இந்தக் கருவிகளை அவருக்கு எளிதா கிடைக்க வைக்குது. ஆனா, அவரோட சின்ன வயசுல அதாவது Pre Internet Era-வில் இந்த புதிய புதிய இசைக்கருவிகளைப் பத்தியும் அவர் எப்படித் தெரிஞ்சுக்கிட்டாருன்றது ஆச்சர்யமாவே இருந்தது. சில மாதங்கள் முன்னாடி ஒரு பேட்டியில் அதற்கான பதிலை சொல்லி இருப்பார்.

“சென்னை அன்னா சாலையில் அப்போது ‘கென்னடி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் இருந்த புத்தகக் கடையில் Music Maker, Keyboard போன்ற இசை தொடர்பான இதழ்கள் கிடைக்கும். அப்பப்போ அந்தக் கடைக்குப் போவேன், மொத்தமா அந்தப் புத்தகங்களை வாங்கிட்டு வருவேன், புதுப் புது தொழில்நுட்பங்கள் கருவிகள் பத்தியெல்லாம் அதுல தான் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.

ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ரஹ்மான் இசைத்துறையில் நடக்கும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கவக்குறார், இல்ல அந்த மாற்றங்களைக் கொண்டு வர்றார். அப்படி சில மாதங்கள் முன்பு அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகத்தில் AI மற்றும் Cluster Computers தொடர்பாக ஒரு கோர்ஸை படித்திருக்கிறார். இந்த மனுஷனோட தேடல் ஓயவே இல்லை.

Artificial Intelligence மூலமாக இசைத்துறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றால், “மனிதனோட கிரியேட்டிவிட்டி AI-க்குத் தேவை. அது தனிச்சு செயல்பட முடியாது. ஆனா, மனிதர்கள் செய்ய அதிக காலம் தேவைப்படுற விஷயங்களை அது சுலபமா முடிச்சுரும். உதாரணமா ஆடியோ சாம்பிள்களை ஒழுங்குப்படுத்த மனிதர்களுக்கு அதிகமான நேரம் தேவைப்படும். ஆனா ஒரு AI engine அதை சில நிமிடங்களில் அழகா அடுக்கிக் கொடுத்துடும். மனிதர்களுக்குக் கேட்காத சில அலைவரிசைகளை (Frequecny) நம்முடைய இசையில் கண்டுபிடிக்கவும், அவற்றில் ஏற்பட்ட சில சிக்கல்களை சரி செய்யவும் நமக்கு AI ஒரு வரப்பிரசாதம்.”

சிந்தசைஸர், ஆடியோ சாம்பிள்கள் வந்தப்போவும் பல பேர் இனி இசைக்கலைஞர்களோட வேலை போயிடும், அவ்வளவுதான்னு சொன்னாங்க. ஆனா, அப்படி நடக்கல, அதெல்லாம் நம்ம கலையை இன்னும் வளப்படுத்துச்சு, அதுபோல தான் ‘செய்யறிவு’னு ரொம்பவே பிராக்டிலா ரஹ்மான் பேசிகிட்டிருக்கார். அதுதான் நிஜமும் கூட.

ரஹ்மானோட இசையில் நீங்க கேட்ட வித்தியாசமான சப்தம் எது? அவருடைய கான்சர்ட்டுகளில் நீங்கள் வியந்து பார்த்த ஒரு டெக்னாலஜி என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top