ஹாரன்

இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருக்க வேண்டும் – மத்திய அரசின் புதிய திட்டம்!

இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஒலி மாசுபாடு

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலான சமயங்களில் சிக்னல்கள், சாலைகளில் வாகனங்களின் இரைச்சல் தாண்டி, அவற்றின் ஹாரன் சத்தம் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தப் பிரச்னைக்குப் புதிய கோணத்தில் முடிவு கட்ட மத்திய அரசு யோசனை செய்திருக்கிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகனங்களில் இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது பற்றி யோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

நிதின் கட்கரி

இந்திய நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் ஒலி மாசுபாடு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. தேவையற்ற சமயங்களில் ஒலிக்கப்படும் ஹாரன் சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் உடல், மனரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, `போலீஸ், ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் சத்தங்களையும் மாற்றுவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆல் இந்தியா ரேடியோவின் ஆகாஷ்வாணியின் இசைக்கலைஞர் ஒருவரால் இசையமைக்கப்பட்ட டியூன் ஒலிபரப்பப்படுகிறது. அதேபோன்றதொரு ஒலியை ஆம்புலன்ஸ் சைரனாக்கினால், மக்களுக்கு அது தொந்தரவாக இருக்காது. சைரன் சத்தத்தைக் கேட்பது எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக அமைச்சர்கள் கான்வாய் செல்லும்போது சைரன் சத்தம் காதைப் பிளக்கும். இது காதுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து படித்து வருகிறேன். விரைவில் இந்திய இசைக்கருவிகளான தபேலா, ஃப்ளூட், வயலின், மவுத் ஆர்கன், ஹார்மோனியம் உள்ளிட்டவைகளின் ஒலியை ஹாரன் சத்தமாக வாகனங்களில் பயன்படுத்துவது குறித்து சட்டம் கொண்டுவரப்படும்’’ என்றார்.

ஹாரன்
ஹாரன்

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவின் பெருநகரங்களில் இருக்கும் டிராஃபிக் சிக்னல்களின் ஒலி அளவை (டெசிபல்) கண்காணித்து வந்தது. இதில், சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், உள்ளிட்ட நகரங்களில் ஒலி அளவு அனுமதிக்கப்பட்டதைவிட பெரிய அளவில் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. அரசு அனுமதித்துள்ள விதிமுறைகளின்படி, குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒலியின் அளவு 55 dB (இரவில் 45dB) ஆகும்.

Also Read – தமிழக சுங்கச் சாவடி ஊழல்; குறைக்கப்பட்ட வாகன எண்ணிக்கை – ஃபாஸ்டேக்கால் வெளியான அதிர்ச்சி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top