சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே மாதத்தில் 15 இடங்களில் கொள்ளை, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள் போலீஸில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?…
தொடர் கொள்ளை
சென்னையில் சிந்தாதிரிப் பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் கடந்த மாதத்தில் அதிகரித்தது. சென்னை எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் காவல் பணியில் இருந்த கவிதா என்ற பெண் போலீஸ் பைக்கில் சென்றபோது அவரிடமிருந்து 9 பவுன் தங்க நகையை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அதேபோல், சிந்தாதிரிப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 சவரன் நகையையும் பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்த நிலையில், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, இந்த சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் கொள்ளையர்கள் பயணித்த பாதையைக் கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மட்டும் வெள்ளை செருப்பு அணிந்திருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதைவைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, குமரன் நகர் போலீஸில் சிக்கிய 17 வயது சிறுவன் இந்தக் கும்பலைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.
கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்
தொடர் விசாரணையில் அந்த சிறுவன் கொடுத்த தகவலின்படி அத்திபட்டு பகுதியில் கூவம் ஆற்றின் நடுவே குடிசைப் பகுதியில் தங்கியிருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அத்திபட்டு பகுதியைச் சேர்ந்த கிருபாநந்தன், சிவக்குமார், அயனாவரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், எழும்பூர் பகுதிகளில் கடைகளை உடைத்துத் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது.
செயின் பறிப்பு, வழிப்பறி, மொபைல் போன் திருட்டு, கடைகளில் திருட்டு, கார் பேட்டரி திருட்டு என எல்லாவகையான திருட்டுகளிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள் போலீஸார். போலீஸில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு திருட்டுக்கும் திருட்டு வாகனங்களையே இவர்கள் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வாகனத்தைத் திருடியதும், அதில் பயணித்து திருட்டை முடித்து விட்டு, அந்த வாகனத்தை அங்கேயே விட்டுச் செல்வது இவர்களின் பாணி என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
அவர்களிடமிருந்து 16 சவரன் தங்க நகைகள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர், ஒன்றாக ஒரு இடத்தில் கூடி அந்தப் பொருட்களைப் பிரித்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால் இவர்களைக் கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள் என்று போலீஸார் அழைக்கிறார்களாம். திருடிய செயினை 4 துண்டுகளாக வெட்டி, அவற்றை வெவ்வேறு இடங்களில் விற்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.