கொரோனா இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்தியாவின் மூன்றாவது அலை பாதிப்பு தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கொரோனா பாதிப்பு தரவுகள் என்ன சொல்கின்றன.
உலக அளவில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஸ்பெயினில் ஒரு வார கொரோனா பாதிப்புகள் 64% அதிகரித்திருக்கின்றன. அதேபோல், நெதர்லாந்தில் 300% கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் 50% அதிகரித்திருத்துள்ள நிலையில், மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசத்திலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதுகுறித்து கவலை தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், கொரோனா ஒழிந்துவிட்டதாகக் கூறி மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கூட்டமான இடங்களைத் தவிர்ப்பதோடு தங்கள் முறை வரும்போது நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை?
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையைப் பொறுத்தவரை அடுத்த 100 முதல் 125 நாட்கள் ரொம்பவே முக்கியமானவை என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறையும் விகிதம் குறைந்திருப்பதும் எச்சரிக்கை மணி அடிக்கும் முக்கியமான விஷயங்கள் என்கிறார்கள். இதனால், மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. சில மாநிலங்கள், மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால், தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு தடுப்பூசி போடப்படும் பணிகளையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
டேட்டா என்ன சொல்கிறது?
55 நாட்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 7-ல் இந்தியாவில் கொரோனா வைரஸின் ஆக்டிவ் லோட் எனப்படும் தொற்று பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை உயர்ந்தது. அன்று கூடுதலாக 784 கேஸ்கள் அதிகரித்தன. மொத்தமாக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,60, 704 ஆக உயர்ந்தது. அதற்கடுத்தபடியாக ஜூலை 14-ல் அடுத்த அதிகரிப்பு இருந்தது. அன்றைய நிலவரப்படி 2,095 பேருக்குக் கூடுதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டின் 73 மாநிலங்களில் தொற்று பாதிப்பு 10% ஆக அதிகரித்திருந்தது.
மே, ஜூன் மாதங்களில் ஆக்டிவ் கேஸ் லோடு இந்திய அளவில் குறைந்திருந்தது. மே 27-ம் தேதியோடு முடிந்த வாரத்தில் கேஸ் லோடு 22.61% அளவு குறைந்திருந்தது. ஜூன் 24-ம் தேதி முடிந்த வாரத்தில் இந்த கணக்கு 23.26% ஆக இருந்தது. ஜூலை ஒன்றாம் தேதி நிறைவடைந்த வாரத்தில் இது இன்னும் குறைந்து 16.84% ஆக இருந்தது. ஜூலை 17 நிலவரப்படி கேஸ் லோடு எனப்படும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,30,422 ஆகும். தினசரி தொற்று பாதிப்பைப் பொறுத்தவரை கடந்த மே 8-ல் அதிகபட்சமாக 3,91,292 ஆகப் பதிவானது. இதுவே ஜூலை 12-ல் 36,369 ஆகக் குறைந்தது. தற்போதைய நிலையில் தினசரி சராசரியாக 39,125 ஆக இருக்கிறது. தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை பாதிப்பை விட அதிகமாக இருப்பது பாசிட்டிவான விஷயம் என்கிறார்கள்.
கொரோனா மரணங்களைப் பொறுத்தவரை 84% இறப்புகள் நிகழும் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் மட்டும் தேசிய அளவில் மொத்த பாதிப்பில் பாதியளவு பாதிப்புகள் இந்த இரண்டு மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன. இதுபோன்ற இக்கட்டான சூழல்களை சமாளிக்க தடுப்பூசிதான் இப்போதைய நிலையில் ஒரே தீர்வு என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் இன்னும் 88 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறார்கள் என்கிறது மத்திய அரசின் தரவு. இதனால், முடிந்தவரை உஙகள் வாய்ப்பு வரும்போது மறக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.