தமிழகத்தில் தாலிபான்கள் ஆதரவு கருத்துகளைப் பதிவிடுவோரை மத்திய உளவுத் துறை போலீஸார் கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் 1996-2001 வரை ஆட்சியில் இருந்த தாலிபான்கள், அமெரிக்கப் படைகளால் துரத்தியடிக்கப்பட்டனர். இந்தநிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், சண்டையே இல்லாமல் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்கள் போர் முடிவுற்றதாக அறிவித்திருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் தாலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் காபூலை விட்டு வெளியேற ஏராளமான ஆப்கானிஸ்தான் மக்கள் முயற்சித்து வருகிறார்கள். காபூல் விமான நிலையத்தில் மீட்புப் பணிக்காக சென்ற அமெரிக்க விமானப் படை விமானத்தின் டயரில் தங்களைக் கட்டிக் கொண்டு பயணித்த 3 பேர் வானில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். அதேபோல், ஒரே விமானத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கத்தார் சென்ற புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்திருக்கும் நிலையில், பாகிஸ்தானை அடுத்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தாலிபான்களை அங்கீகரிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கின்றன. இந்தியத் தூதர், தூதரக அதிகாரிகள் உள்பட இந்தியர்கள் 120 பேரை இந்திய விமானப் படை விமானம் மீட்டு குஜராத் வந்தடைந்திருக்கிறது.
தமிழகத்தில் தாலிபான் ஆதரவு?
தாலிபான்களுக்கு ஆதரவாகக் கருத்துப் பதிவிடும் கணக்குகளை முடக்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் தாலிபான்கள் ஆதரவு நிலைப்பாடு கொண்ட சமூக வலைதளக் கணக்குகளை மத்திய உளவுத் துறை போலீஸார் கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் கொண்ட 5 சமூக வலைதள கணக்குகளில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருப்பதற்கு ஆதரவாகக் கருத்துகள் பதிவிடப்பட்டிருப்பதை உளவுத் துறையினர் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிகிறது. தாலிபான்களுக்கு ஆதரவாக அவர்கள் தொடர்ந்து பதிவிட்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கும் உளவுத் துறையினர், குறிப்பிட்ட சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சேகரித்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, தமிழகத்தில் இருக்கும் அந்த 5 சமூக வலைதளக் கணக்குகள், அவற்றைப் பின்தொடர்வோர் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழகத்தில் இருக்கும் மத்திய உளவுத் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உளவுத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Also Read –