இந்தியாவில் 1991-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பல பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், ஜூலை மாதம் 24-ம் தேதி 1991-ம் ஆண்டு பட்ஜெட் உரையின்போது இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையை மன்மோகன் சிங் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை அடைந்து வந்தது. இதனை நினைவுகூறும் வகையில் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் உரிய வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்களை கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கிள்ள வேண்டும். இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கையை 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியதை இப்போது நினைவுகூர்கிறேன். அப்போது எனது பட்ஜெட் உரையில் விக்டர் ஹியூகோவின், `No power on Earth can stop an idea whose time has come’ புகழ்பெற்ற தத்துவம் ஒன்றை கூறியிருந்தேன். ஆனால், இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கும்போது இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சியை பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன். மிகவும் மோசமான பொருளாதார நிலைமையில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கண்ணியமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதை நோக்கமாகக்கொள்ள வேண்டும். 1991-ம் ஆண்டில் இருந்த நெருக்கடியான சூழலை விடவும் வளர்ச்சி நோக்கிய பாதையானது மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அடுத்தடுத்த வந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் முன்னேறி இருக்கிறது.
இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது. கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பல கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம். இந்த முயற்சியை தொடங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளால் உற்பத்தி, சேவை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள், தொழில்துறைகள் அதிக வளர்ச்சியை கண்டன. அவரது தாராளமய நடவடிக்கையானது இன்று வரையிலும் பலரால் பாராட்டும் விஷயமாக இருந்து வருகிறது.
Also Read : `காதலிக்குறது உண்மைதான்… கல்யாணம் பண்ண மாட்டேன்’ – இளைஞரை மாப்பிள்ளையாக்கிய கடலூர் போலீஸ்!