நரசிம்ம ராவ்

PV Narasimha Rao: இந்தியாவின் முதல் `Accidental Prime Minister’ பி. வி.நரசிம்ம ராவ் பிரதமரானது எப்படி?

இந்தியாவின் பத்தாவது பிரதமராக 1991-96 வரை பதவி வகித்த பி.வி.நரசிம்ம ராவ், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக இருந்தவராகக் கருதப்படுகிறார். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமரான நரசிம்மராவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பி.வி.நரசிம்ம ராவ்

நரசிம்ம ராவ்
நரசிம்ம ராவ்

இன்றைய தெலங்கானாவின் வாராங்கல் மாவட்டத்தில் ஜூன் 8, 1921-ல் பிறந்தவர் பரமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ். 1991 பொருளாதர சிக்கலில் இருந்து இந்தியாவை அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் துணையோடு மீட்டெடுத்த பெருமைக்குரியவர். மத்திய அரசில் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, வணிகத் துறை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், ஆந்திர மாநில முதலமைச்சராக 1971-73 வரை இருந்தவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானது ஒரு விபத்து என்றே சொல்லலாம். மைனாரிட்டி அரசை வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த அவர், தனது அரசியல் செயல்பாடுகளுக்காக `சாணக்கியர்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு.

நரசிம்ம ராவ் பிரதமரானது எப்படி?

1991 ஜூனில் 70-வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த பி.வி.நரசிம்மராவ், தேசிய அரசியலை விட்டு வாராங்கல் மாவட்டத்தில் இருக்கும் சொந்த ஊருக்குக் கிளம்பத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1980-களின் இறுதியில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருந்தார் அவர். இதற்காக, தான் புதிதாக வாங்கி அதிக எடை கொண்ட கம்ப்யூட்டரைக் கூட டெல்லியில் இருந்து தன்னுடன் எடுத்துச் செல்ல அவர் திட்டமிட்டு, அதற்காக இளம் இன்ஜினீயர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார். இதற்கான பணிகள் வேகமெடுத்துக் கொண்டிருந்தன.

நரசிம்ம ராவ் - சோனியா காந்தி
நரசிம்ம ராவ் – சோனியா காந்தி

அதேநேரம், 1991 மக்களவைத் தேர்தலுக்காக நாடு பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தது. காங்கிரஸின் ராஜீவ்காந்தி, அக்கட்சிக்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மாநாட்டில் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்ட அதிர்ச்சியான செய்தி காங்கிரஸ் தொண்டர்களின் தலையில் இடியாக இறங்கியது. நிச்சயம் வென்றுவிடுவார் என்று கருதப்பட்ட ராஜீவ் காந்தியின் அகால மரணம் காங்கிரஸில் வேறுவிதமான பிரச்னைகளைக் கிளப்பியது. ராஜீவுக்குப் பிறகு நம்பர் 2 என யாருமே அந்தக் கட்சியில் இல்லாததால், ஒருவித குழப்பமான நிலை ஏற்பட்டது. ராஜீவ் கொல்லப்பட்டு 18 மணி நேரத்திக்குப் பிறகு 12 உறுப்பினர்கள், 2 நிரந்தர மற்றும் 4 தற்காலிக சிறப்பு அழைப்பாளர்களை உள்ளடக்கிய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டதால், எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.

Accidental Prime Minister

இப்படியான சூழல்தான் பி.வி.நரசிம்மராவை இந்தியப் பிரதமர் பதவியில் அமர்த்தியது. அவர் பிரதமரானது ஒரு விபத்து என்றே சொல்லலாம். ராஜீவ் மரணத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1991 மே 22-ல் காங்கிரஸ் தலைமையகமான 24, அக்பர் ரோடு விலாசத்தில் கூடிய அக்கட்சியின் செயற்குழு, அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்தது அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் ஷர்மாவைத்தான். ஆனால், தனது வயது மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, பிரதமர் ரேஸில் முன்னணியில் இருந்தவர்கள் மூன்று பேர். அரசியல் நிபுணத்துவம் பெற்றிருந்த மகராஷ்டிராவைச் சேர்ந்த ஷரத் பவார். உ.பியைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியான என்.டி.திவாரி. ராஜீவ் காந்திக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருந்த மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜூன் சிங் ஆகியோர்தான் அந்த மூவர். அதேபோல், கர்நாடக முதல்வர் வீரேந்திர படேல், ஆந்திர முதல்வர் சென்னா ரெட்டி ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. முன்னணியில் இருந்த மூவரும் ஒருவருக்கொருவர் செக் மேட் வைத்துக் கொண்டனர். என்.டி.திவாரியின் பெயர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் தீவிர பரிசீலனையில் இருந்தாலும், அவர் 1991 தேர்தலில் வெற்றிபெறவில்லை.

நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் - பிரணாப் முகர்ஜி
நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் – பிரணாப் முகர்ஜி

யார் பிரதமர் என்ற முடிவெடுக்க முடியாத நிலையில், நரசிம்மராவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. ராஜீவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பெரும்பாலான வெளிநாட்டினரைத் தனித்தனியே அழைத்துச் சென்று அவர்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தது நரசிம்மராவ்தான். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து உரையாடிய அனுபவம் மிக்க அவரே, அந்தத் தலைவர்களை காங்கிரஸ் தலைமையகத்துக்கு உடனிருந்து அழைத்துச் சென்றார்.

கோஷ்டிகளைக் கடந்த மரியாதை

கோஷ்டிகளாகப் பிரிந்துகிடந்த காங்கிரஸார் மத்தியில் அதிக எதிர்ப்புகளைச் சம்பாதிக்க நரசிம்மராவின் பிம்பம் எடுபட்டது. அதேபோல், அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமனும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவே, அவர் பெயர் டிக் அடிக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த அனுபவம், வெளியுறவுத் துறை தொடங்கி பாதுகாப்புத் துறை என பல முக்கியப் பொறுப்புகளை வகித்த நரசிம்மராவ், ராஜீவ்காந்தி உயிரிழந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் பத்தாவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். எந்தவொரு அரசியல் அனுபவமும் இல்லாத மன்மோகன் சிங்கின் நிதித்துறை ஞானத்தின் மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமித்தார். அதேபோல், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட விசுவாசிகளை உடன் வைத்துக் கொண்ட அவர், வெளியுறவுத் துறை செயலாளராக ஜே.என்.தீக்‌ஷித்தை நியமித்தார். இந்தக் கூட்டணி இந்தியா கடினமான ஒரு சூழலை எதிர்க்கொண்டு வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டு வர உதவியது.

Also Read:

ஜேம்ஸ் பாண்ட் 007: `கிளைமேக்ஸ் எப்போதும் ஒண்ணுதான்… ஆனா..!’ James Bond படங்கள் – ஒரு பார்வை Part – 001

ஊழல் மலிந்திருந்த லைசென்ஸ் ராஜ் நடைமுறையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்தது அவரது பதவிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு சாதனை. அதேபோல், 1994-ல் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவின் அணுஆயுதக் கொள்கையை உருவாக்கியதும் இவரது ஆட்சிக் காலத்தில்தான். அப்துல் கலாம் தலைமையில் பொக்ரான் அணு ஆயுத சோதனை நடைபெற விதை போடப்பட்டது நரசிம்மராவ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோதுதான். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொக்ரான் சோதனை வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்தபோது நடந்தது. இதுகுறித்து வாஜ்பாயிடம் நேரடியாகவே நரசிம்மராவ் விளக்கமளித்திருந்தார். அதேபோல், 1992 பாபர் மசூதி இடிப்பு அதன்பிறகான மதக்கலவரங்கள் இவரது ஆட்சி மட்டுமல்லாது இந்திய வரலாற்றின் கறுப்புப் புள்ளியாகிப் போனது.

Also Read – Babri Masjid: இந்திய வரலாற்றின் கறுப்பு நாள்… பாபர் மசூதி இடிப்புக்கு முன் என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top