டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
டெல்லியில் முதல் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. டாஸ் வென்ற மும்பை, ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 41 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் குவித்திருந்த ராஜஸ்தான், இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் போதுமான ரன் குவிக்கத் தவறியது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 171 ஸ்கோர் இது. முதல் நாளில் ஒரு ரன்னில் தோல்வி, இரண்டாவது நாளில் எளிதான சேஸ்.. மூன்றாவது நாளிலும் இரண்டாவது நாளே ரிப்பீட் மோட் ஆனது.
மும்பை அணி பவர்பிளேவில் ரோஹித் ஷர்மா விக்கெட்டை மட்டும் இழந்து 49 ரன் எடுத்தது. ரோஹித் ஷர்மா விக்கெட்டை விரைவிலேயே இழந்தாலும், குயிண்டன் டிகாக் மறுமுனையில் மும்பைக்கு நம்பிக்கை கொடுத்தார். நான்காவது வீரராக புரமோட் செய்யப்பட்ட குர்னால் பாண்டியா, 39 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேன் ஆஃப் தி மேட்ச் டிகாக், 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.3 ஓவர்களில் மும்பை வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. மும்பை அணி விளையாடிய 6வது போட்டியில் இது மூன்றாவது வெற்றியாகும்.
போட்டிக்குப் பின்னர் பேசிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, “தொடர்ந்து இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்று. முதல் பந்தில் இருந்தே வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. தனிப்பட்ட ஒவ்வொரு வீரரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர். டெல்லி மைதானத்தில் விளையாடுவது குறித்து வீரர்களிடம் ஒரு பாசிட்டிவிட்டி இருந்தது. அது சென்னை பிட்சைப் போலல்லாமல், நல்ல பிட்ச் என்பதால், அந்த பாசிட்டிவிட்டி இருந்தது. பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்த நிலையில் கடைசி 7 ஓவர்களில் 50 ரன்கள்தான் விட்டுக்கொடுத்தோம். விளையாடும் சூழல் ரொம்பவே முக்கியமானது. சென்னைக்குப் பிறகு சிறப்பான பிட்சுகளில் விளையாடுவோம் என்பது தெரியும். ஒரு அணியாக அந்த பிட்சின் தன்மைக்கேற்ப எங்களை அடாப்ட் செய்துகொள்ளவில்லை. முன்னரே சொன்னபடி, இதன்பிறகு பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருக்கும்’’ என்றார்.