ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றியும், இப்போது சபரிமலையில் உள்ள வசதிகள் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம், வாங்க…
* அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம். மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது.
* சில வழிமுறைகளை கடைபிடித்து விரதம் முடிந்து மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும்.
* காலை வேளையிலும் மாலை வேளையிலும் ஐயப்பனை 108 சரணம் சொல்லித்தான் பூஜை செய்ய வேண்டும். ஐயப்பன் விரதத்தை சாப்பிடாமல் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் எந்த கட்டாயமும் இல்லை. காலையில் பூஜையை முடித்துவிட்டு உணவு அருந்தலாம். இதேபோன்று மாலை பூஜையை முடித்துவிட்டு இரவு உணவு அருந்தலாம்.
* மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்களும் மாலை அணிந்தபின் இவைகளைத் தவிர்த்துவிட வேண்டும். எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் அதனை ஒரு மண்டலம் கஷ்டப்பட்டு கடைப்பிடித்து விட்டோமேயானால் அது நமக்கு பழகிவிடும். தீய பழக்கத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவே இந்த விரத முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் அந்த ஐயப்பனை வழிபடச் செல்வதற்கு முன்பு சில கடுமையான விரதங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மலைக்குச் செல்வதற்கு முன்பு, உங்களால் முடிந்தவரை, வீட்டில் ஒரு ஐயப்ப பூஜை செய்து, பத்து ஐயப்ப சுவாமிகளுக்காவது அன்னதானம் அளிப்பது மிகவும் சிறந்தது.
* குழந்தை இல்லாதவர்கள் தென்னங்கன்று அல்லது மணி இவைகளை செலுத்துவதாக பிரார்த்தனை செய்துகொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகு இந்த பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். 48 நாட்கள் கடுமையாக விரதமிருந்து சபரிமலைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு பிறந்த, நிறைய குழந்தைகளுக்கு அந்த ஐயப்பனின் நாமத்தையே பெயராக சூட்டுவார்கள்.
* இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு இந்த வசதிகள் பயன்படுத்தும் வகையில் எருமேலி, நிலைக்கல், குமிளி மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயம், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் ஆலயம், வைக்கம் மகாதேவர் ஆலயம், கொட்டா ரக்கர ஸ்ரீ மஹா கணபதி கோவில், பந்தளம் வலிய கோயிக்கல் ஆலயம், பெரும்பாவூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், கீழில்லம் மகாதேவர் கோவில் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக தரிசனத்துக்கு பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதார் கார்டு, அரசு அடையாள அட்டைகள் ஏதேனும் ஒன்று அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கைவசம் வைத்திருக்க வேண்டும்
* வழக்கமாக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படும். இந்நிலையில், அதிகமான கூட்டத்தைக் கருத்தில் கொண்டு மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்யலாம்.
* சபரிமலையில் மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் நிலையில் சின்னம்மை பரவி வருகிறது. இதன் காரணமாக, 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் உறுதி செய்யப்பட்டுள்ள 5 போலீசாரும் அவர்களுடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீஸ் குடியிருப்பு அமைந்து உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கைவசம் மாஸ்க் வைத்துக் கொள்வது நல்லது. நோய் தீவிரமாக இருந்தால், மாஸ்க் பயன்படுத்திக் கொள்ளலாம்.