நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையைத் தாண்டி மூன்றாவது அலை தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை மணியை நிபுணர்கள் அடித்திருக்கிறார்கள். மூன்றாவது அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று வெளியாகும் தகவல் கவலையளிப்பதாக இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை கொரோனா தாக்குதலில் இருந்து பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
தடுப்பூசி
மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மே -1 முதல் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேநேரம், குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படவில்லை. இந்தசூழ்நிலையில் நம் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
சுத்தம்
முதலில் பெற்றோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத வேலைகளுக்காக வெளியே செல்ல வேண்டிய சூழல் வந்தால், வீட்டிற்குள் வந்த உடன் குழந்தைகளிடம் செல்வதை வேண்டும். முகக்கவசம் அணிவது, சானிடைசர் அல்லது சோப் ஆகியவற்றைக் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். முடிந்த அளவு குளித்துவிட்டு குழந்தைகளை நெருங்குவது பாதுகாப்பானது. அதேபோல், அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். இவற்றை கட்டாயம் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் போது சில அறிகுறிகள் வைத்து அது நிச்சயம் கொரோனா என்று உறுதி செய்ய முடியாது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று உறுதியானால் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமே.
பெரியவர்களை போல இவர்களுக்கும் காய்ச்சல், மிதமான இருமல், உடல் வலி போன்றவை இருக்கும். அதோடு இரண்டாம் அலையில் பலருக்கும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் உடல்நலனையும் மனநலனையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியமானது. குழந்தைகளுக்கு சுத்தத்தின் முக்கியவத்தை உணர்த்துவதோடு, அதை குழந்தைகள் முறையாகக் கடைபிடிக்கின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்கிறது அமெரிக்க சுகாதாரத்துறையின் Center of Diseases Control and Prevention.
முகக்கவசம்
பெரும்பாலும் பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் குழந்தைகளுக்கு மாஸ்க் போடலாமா என்ற கேள்வி தான். உங்கள் குழந்தைக்கு 2 வயதுக்குள் இருந்தால் நீங்கள் மாஸ்க் பயன்படுத்த வேண்டாம். ஆனால் இரண்டு வயது முடிந்த குழந்தைக்கு கண்டிப்பாக மாஸ்க் பயன்படுத்தவது, அவர்களை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.
குழந்தையின் வெப்பநிலையையும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதிப்பது நல்லது. காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு பாரசிட்டமால் மருந்துகள் எவ்வளவு அளவு கொடுக்கலாம் என்பதை மருத்துவரின் அறிவுரைப்படி சரியான அளவில் கொடுக்க வேண்டும். உணவு மென்மையானதாகவும் எளிதில் ஜீரணிக்க கூடியவையாகவும் கொடுக்கப்பட வேண்டும்.
வெளியே குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். காய்ச்சல் இருப்பவர்களுடன் பழக விட வேண்டாம். நீங்கள் தடுப்பூசிக்கு தகுதியானவராக இருந்தால் முதலில் தடுப்பூசி போடுங்கள். இது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு வருவதை 50% வரை தடுக்க வழி செய்யும். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் இல்லை என்பதால் பருவகால தடுப்பூசிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்க்கவேண்டாம். இது பருவ கால காய்ச்சல் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளை உடலுக்கு கொடுக்கிறது.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் போன்ற அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். அமெரிக்க ஆய்வாளர்கள் தரவுகளின்படி, 60 முதல் 70% வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல்தான் இருக்கிறார்கள். 30% குழந்தைக்கு லேசான அறிகுறிகள் இருக்கின்றன. 1 முதல் 2% வரையுள்ள குழந்தைகள் தான் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றபடி குழந்தைகளைக் கவனமாக பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கைகளில் தான் இருக்கிறது. இது முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் என்பதையும் மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு சரியான முன்மாதிரியாக இருந்து கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை நீங்களும் பின்பற்றுங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகள் தாமாகவே முன்வந்து அவற்றைப் பின்பற்றலாம்.
கற்றல் மற்று மன அழுத்தம்
கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், உங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாடுகளுக்கு கூடவே இருந்து உதவுங்கள். ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமாகக் கலந்துகொள்ள ஊக்குவியுங்கள். அதேபோல், அவர்களின் சந்தேகங்களுக்கு முகம் சுளிக்காமல் விளக்கம் கொடுத்து புரியவையுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
வீடுகளிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு இந்தப் பெருந்தொற்று காலத்தில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு கார்டனிங், புதிய விளையாட்டுகள், புத்தகம் படிப்பது என ஆரோக்கியமான புதிய பழக்கங்களைக் கற்றுக்கொடுத்து பெற்றோர்கள் உதவ வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை உடல்ரீதியாகப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களை மனரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை
அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என பல அறிவுரைகளையும் அமெரிக்க சுகாதாரத் துறை வழங்கியிருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு உதடுகள் நீல நிறத்தில் காணப்படலாம். கடுமையான சோர்வு, எதையும் சாப்பிட முடியாத நிலை, சுயநினவை இழப்பது போன்றவையும் அறிகுறிகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் குழந்தையின் ரத்த ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்துக்குக் குறைவாக இருக்கிற நிலை இருக்கலாம். எந்நேரமும் அழுதுகொண்டே கூட இருக்கலாம். இப்போதும் கவனிக்கத் தவறினால், அடுத்ததாக வருவதுதான் மோசமான கட்டம். இதில் குழந்தை மயக்கநிலைக்குச் செல்லலாம், வலிப்பு வரலாம் என்று எச்சரிக்கிறது அந்த அமைப்பு. இதுபோன்ற சூழலில் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Also Read – கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசிகளைத் தவிர்க்காதீர்.. தடுக்காதீர்!