நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பத்திரிக்கையாளர், பாடி பில்டர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களை உடையவர், சரத்குமார். இவர் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி பிறந்தார். 1990-கள் முதல் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். இன்றும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை ஈர்ப்பவர். `உங்களுக்கு வயசே ஆகாதா?’ என்று கேட்கத் தோன்றும் நடிகர்களில் சரத்குமாரும் முக்கியமானவர். சூர்ய வம்சம், நாட்டாமை, சூரியன், சமுத்திரம், ஐ லவ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு படங்களில் அட்டகாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரத்குமார் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள், சில வசனங்கள் மற்றும் சில பாடல்கள் இங்கே…
மூன்று வசனங்கள்…
* பழகுறப்ப ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்துக்குற அன்பளிப்புதான் பிரிஞ்சதுக்கு அப்புறம் சேர்றதுக்கு ஆரம்பமாகவும் இருக்கும் ஆதாரமாகவும் இருக்கும். தயவு செஞ்சு அந்த தடயங்களை அழிச்சுறாதீங்க.
* உளி விழும்போது வலினு அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது. ஏர் உழும்போது கஷ்டம்னு நினைக்கிற எந்த நிலமும் விளைஞ்சு நிக்காது. அதே மாதிரிதான். அப்பா கோபப்படுறதையும் திட்றதையும் தப்புனு நினைக்கிற எந்த புள்ளையும் முன்னுக்கு வர முடியாது.
* முதல்ல பொண்டாட்டினா என்னனு தெரிஞ்சுக்க. நமக்கு ஏதாவது ஒண்ணுனா அம்மா அழுவுறதுலேயும் அம்மாவுக்கு ஏதாவது ஒண்ணுனா நாம அழுவுறதுலேயும் ஆச்சரியம் இல்லைடா. ஏன்னா.. ஒரே இரத்தம்.. அந்த உணர்வு இருக்கும். எங்கயோ பொறந்து எங்கயோ வளர்ந்து பாதிலயே நம்ம குடும்பத்துக்கு வந்து நமக்கு ஏதாவது ஒண்ணுனா நம்ம கால்மாட்டுல உட்கார்ந்து `ஓ…’னு ஒப்பாரி வச்சி அழுவுறாளே. அவதாண்டா பொண்டாட்டி.
மூன்று பாடல்கள்…
“நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது.. சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்” – வாழ்க்கைல எப்பயாவது எனர்ஜி கொஞ்சம் கம்மியா ஃபீல் பண்ணோம்னா இந்தப் பாடலைக் கேட்டால் போதும். நாமளும் வாழ்க்கைல முன்னுக்கு வரணும்ன்ற எண்ணம் தானா வரும். அவ்வளவு பவர்ஃபுல்லான பாடல் இது. எஸ்.ஏ.ராஜ்குமார் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். கவிஞர் மு.மேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார். மனோ மற்றும் சுனந்தா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
நண்பர்களுக்கான பாடல்னு சொன்னா.. `காட்டுக்குயிலு’, `முஸ்தபா முஸ்தபா’ போன்ற பாடல்கள் உடனே நினைவுக்கு வரும். இந்த வரிசையில் சரத்குமார் நடிப்பில் வெளியான நட்புக்காக படத்தில் இடம்பெற்ற `மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா’ பாடலும் முக்கியமான இடத்தைப் பிடிக்கும். இந்தப் பாடலைக் கேட்கும்போது பால்யகாலத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியுள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `நாட்டாமை’. நாட்டாமை என்ற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு முதலில் வருவது `நாட்டாமை பாதம் பட்டா’ பாடல்தான். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இன்றும் ஃபேமஸாக இருக்கும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு சிற்பி இசையமைத்துள்ளார். வைரமுத்து வரிகளை எழுதியுள்ளார்.
மூன்று சம்பவங்கள்…
* சரத்குமார் தன்னுடைய திரைப்பயணம் பற்றி பேசும்போது, “எனக்கு எப்போதுமே மக்கள் திலகம், புரட்சி தலைவர் மாதிரி ஆகனும்னு ஒரு ஆர்வம். அதனாலதான், அவர் கட்சித் தொடங்குவதற்கு முன்னாடியே, கவர்னரிடம் மனு கொடுக்க செல்லும்போது அந்த ஊர்வலத்தில் `இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று கூச்சலிட்டு அதிமுக உருவாகுவதற்கு முன்பே புரட்சி தலைவருடன் பயணித்தவன் நான். அந்த அளவுக்கு தீவிரமான ரசிகன் நான். என்னுடைய அரசியல் வாழ்க்கை அங்கேயே தொடங்கிவிட்டது. அதனால, அவரப்போல வரனும்னு எண்ணம் இருந்துச்சு. ஆனால், எப்படி சினிமா உலகத்துக்குள்ள வரனும்னு தெரியல. சினிமாவுக்குள் வர படிப்படியாக அடிப்படையான விஷயங்களைக் கற்றுக்கொண்டு, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் பேப்பர் போடுபவனாக இருந்து, ரிப்போர்ட்டராக மாறி, விளம்பர பிரதிநிதியாக இருந்து பின்னர் சென்னை வந்து டிராவல் ஏஜென்ஸி நடத்தினேன். அதன் பின்னர் நடிக்க வாய்ப்பு கிடைத்து படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்” என்றார்.
* சூரியன் படத்தில் சரத்குமார் நடிக்கும்போது அந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கர் உதவி இயக்குநராக இருந்தார். சூரியன் படத்தை பவித்ரன் இயக்கினார். இதுதொடர்பாக சரத்குமார் சாய் வித் சித்ராவில் பேசும்போது, “இரவு நேரங்களில் பவித்ரனுக்கும் ஷங்கருக்கும் பயங்கரமான ஆர்கியூமெண்ட் நடக்கும். சண்டை போடுறாங்களா அளவுக்கு இருக்கும். ஷங்கரிடம் ஒரு ஃபயர் இருந்துச்சு. அதை நோட் பண்ணி ஜென்டில்மேன் படம் பண்றதுக்கு குஞ்சுமோன்கிட்ட பேசினது நான்தான். அதுல நான் பெருமைபடுறேன். பவித்திரனுக்கும் குஞ்சுமோனுக்கும் இடையில் சின்ன மனக்கசப்பு ஏற்பட்டது. ஜூலை 14 என்னோட பிறந்தநாள். ஐ லவ் இந்தியாவும் அப்போதான் ரிலீஸ் ஆகனும். அதுல ஜென்டில்மேனும் அப்போதான் ரிலீஸ் ஆகனும்னு சொன்னாங்க. பவித்ரன் மீசையை வைனு சொன்னாங்க. ஷங்கர் மீசையை எடுங்கனு சொன்னாங்க. இந்தப் போராட்டத்துல, எனக்கு சூரியன் கொடுத்தது பவித்ரன்.. அதனால, பவித்ரன் பக்கம் நின்னுட்டேன். ஜென்டில்மேனில் இன்விடேஷனில் போடுவதற்கான ஸ்டில்ஸ் எல்லாம் எடுத்தாச்சு. ஸ்டில்ஸ் ரவிதான் போட்டோ எடுத்தாரு. போட்டோஷூட்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் அந்தப் படத்துல அர்ஜூன் நடிச்சாரு. இயக்குநர் ஷங்கருக்கும் எனக்கும் சின்ன நெருடல் இருந்துச்சு. அதை பின்னாளில் பேசி தீர்த்துகிட்டோம். அதுக்கப்புறம்தான் `ஐ’ படத்தில் விக்ரமுக்கு அவார்ட் கொடுக்குற கேரக்டர் நான் பண்ணேன் ” என்றார்.
* கோச்சடையானில் ரஜினிகாந்துடன் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி சரத்குமார் பேசும்போது, “ஒருநாள் என்னைக் கூப்பிட்டு படத்தில் நடிப்பதற்கென ஒரு கதையே சொன்னாரு. ரஜினி எழுதிய கதை. சூப்பர் ஸ்டார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் நடிக்கும் – அப்டினு சொல்லி கதை சொன்னாரு. ஓப்பனிங் ஷார்ட்ல இருந்து ஞாபகம் இருக்கு. சுரேஷ் கிருஷ்ணாவைக் கூப்பிட்டு பேசியிருக்காரு. நாங்க ரெண்டு பேருமே அதுல போலீஸ் ஆஃபீஸர்” என்று கூறினார்.
Also Read : `இதெல்லாம் கேக்கும்போது தலையே சுத்துது… விட்ருங்க!’ -`கொங்கு நாடு’ கேள்விக்கு வடிவேலு பதில்
Jahmali Sureda