ஸ்வீட் பாக்ஸ், வழக்கறிஞர் நியமனம், சாதி – அமைச்சர் ராஜகண்ணப்பன் சந்தித்த 4 சர்ச்சைகள்!

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சிக்கிய சர்ச்சைகள் என்னென்ன?

ராஜகண்ணப்பன்

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜகண்ணப்பன் 1972-ம் ஆண்டே அ.தி.மு.க-வில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டு கட்சிப் பணியாற்றினார். படிப்படியாக வளர்ந்த அவர், 1991-ம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார். பின்னர், அ.தி.மு.க-வில் இருந்து விலகி மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் தொடங்கினார். பின்னர், தி.மு.க-வில் இணைந்து 2006 தேர்தலில் எம்.எல்.ஏவானார். அதன்பின்னர், 2009-ல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க-வில் ஐக்கியமான அவர், 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019-ல் மீண்டும் தி.மு.கவுக்கு வந்த அவர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சராகியிருக்கிறார்.

ஸ்டாலினுடன்
ஸ்டாலினுடன்

ராஜகண்ணப்பனும் சர்ச்சைகளும்!

தி.மு.க ஆட்சி அமைத்த இந்த 10 மாதங்களில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர் என்றால் அது ராஜகண்ணப்பன்தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய இவரைத்தான் போக்குவரத்துத் துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றியிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு. துறை மாற்றம் என்பது தண்டனை அல்ல பரிசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார். அதேபோல், தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு நடக்கும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுதான்.

ஸ்வீட் பாக்ஸ் சர்ச்சை

போக்குவரத் துறை அமைச்சராக இருந்த அவர், கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுக்க முடிவு செய்து, அதற்காக துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. அரசு நிறுவனமான ஆவின் இருக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இனிப்பு வகைகள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும், டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், போக்குவரத்துத் துறை சார்பில் ஆவினில் ஸ்வீட் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

Rajakannappan
Rajakannappan

வழக்கறிஞர் நியமனம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான வழக்கறிஞர்கள் நியமனத்திலும் அமைச்சரின் பெயர் சர்ச்சையில் சிக்கியது. மொத்தம் 199 பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் பெயரை போக்குவரத்துக் கழகத்தின் Panel Lawyers பணிகளுக்காக அமைச்சர் பரிந்துரை செய்திருந்தார். அவர்களில் பெரும்பாலானோர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவரது சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் என்றும் சர்ச்சை எழுந்தது. இதனால், அவர் பரிந்துரைத்த பட்டியலை தமிழக அரசு நிராகரித்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

போக்குவரத்துத் துறைக்கு உட்பட்ட போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். எழிலகத்தில் இருந்த அவரது அலுவலகத்தில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதன் பின்னணியிலும் அமைச்சரின் பெயர் அடிபட்டது.

Rajakannappan
Rajakannappan

சாதி சர்ச்சை

இந்தசூழலில், முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக அமைச்சர் சர்ச்சையில் சிக்கினார். பணம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிவந்த அவர், சாதிரீதியாக அரசு அலுவலர் ஒருவரை அவமதித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அரசு அலுவலர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில், அமைச்சர் வேறொரு துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

Also Read – எம்.ஜி.ஆருக்கே முதலாளி; கருணாநிதி ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வரலாறு #MrMinister

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top