`பத்து தல’ கிருஷ்ணா

இயக்குநர்… UBER டிரைவர்… பத்து தல இயக்குநர் கிருஷ்ணா கதை!

பத்துதல ஆடியோ பங்க்‌ஷன்ல எல்லோரையும் கவனிக்க வைச்ச பேச்சா சிம்பு பேசுனது இருந்தது. அதைத் தாண்டி கவனிக்க வைக்கப்பட்டவர், இயக்குநர் கிருஷ்ணா. பத்துதல படம் பாதியில டிராப் ஆக வேண்டியிருந்தது. சிம்பு மனசு வச்சதாலயும், ஞானவேல் மனசுவச்சதாலயும்தான் படம் முடிஞ்சிருக்குனு நெகிழ்ச்சியோட சொன்னார். கேட்க நமக்கும் ஒருபக்கம் அதிர்ச்சியாவும் இருந்தது. அப்போ டிராப் பண்ணிடலாம்னு ஃரொடியூசர் சொன்னதைக் கேட்ட அந்த இயக்குநருக்குள்ள மனசு எவ்ளோ வலிச்சிருக்கும். ஏன்னா இது அவரோட செகண்ட் இன்னிங்க்ஸ். முதல் இன்னிங்க்ஸ்ல சரியா விளையாடியும் அடுத்தடுத்து சான்ஸ் கிடைக்காமலே இருந்த இயக்குநருக்கு, ரெண்டாவது இன்னிங்ஸ்ல ஃபயரோட சிம்பு, ஏ.ஆர் ரகுமான் இசைனு கிடைச்சா அதை எப்படி விட மனசு வரும். ஒருவேளை டிராப் ஆகிட்டா அவர் மனநிலை என்னவா இருக்கும். அப்படி என்ன தமிழ்சினிமாவுல சாதிச்சிட்டார்னு நீங்க நினைக்கிறது புரியுது. அவரோட 20 வருஷ ஜர்னியத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

பத்து தல
பத்து தல

கெளதம் மேனனின் அசோசியேட்!

கேமராமேன் ஆர்.டி ராஜசேகர்தான் இயக்குநர் கிருஷ்ணாவை கெளதம் மேனன்கிட்ட அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணாவை பார்த்த உடனே பிடிச்சுப்போக, மின்னலே படத்துல உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டார். மின்னலே படம்தான் உதவி இயக்குநரா அவருக்கு முதல்படம். அடுத்து காக்க காக்க படத்துல அசோசியேட் இயக்குநரா வேலை பார்த்தார். அப்போ ஒரு நண்பர்கிட்ட பேசிட்டே இருக்கும்போது, அவர் ஒரு கோவில்பட்டியில நடந்த சம்பவத்தைச் சொல்றார். அந்த சம்பவம் என்னன்னா, ஒரு கணவன் - மனைவி குழந்தைனு ஒரு குடும்பம். கணவனுக்கு கல்யாணத்துக்கு முன்னால காதலி இருந்ததை கேள்விப்படுறாங்க மனைவி. அதனால கணவனுக்கு தெரியாம காதலியை வரச் சொல்லி கணவனுக்கு சர்ப்ரஸ் தர்றாங்க.
இயக்குநர் கிருஷ்ணா
இயக்குநர் கிருஷ்ணா

அதைக்கேட்டு அவருக்கு பொறிதட்ட ஒரு கதையா டெவலப் பண்றார். அப்போ நடிகர் மாதவனை சந்திச்சு கதையும் சொல்றார். ஆனா குழந்தையை மட்டும் எடுத்துடுங்க, நான் பண்றேன்னு சொல்ல, குழந்தை கேரெக்டர்தான் முக்கியம்னு அந்த வாய்ப்பை ஏத்துக்கலை. அந்த நேரத்துல காக்க காக்க செட்ல இருந்த சூர்யாகிட்ட அந்தக் கதையை சொல்றார். குழந்தைக்கு அப்பாவா வேற கதை பண்ணலாம் கிருஷ்ணானு சொல்ல, வேற ஹீரோக்கள்கிட்ட கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனா, கோடம்பாக்கத்துல இவர் கதை சொல்லாத நடிகர்களே இல்லைனு சொல்ற அளவுக்கு லிஸ்ட் பெருசா போச்சு. ஆனா, யாருமே ஒத்துக்கலை. கையில ஸ்கிரிப்டோட ரெண்டு வருஷம் அலையுறார். ஒருநாள் கெளதம் மேனன், கிருஷ்ணாகிட்ட கதையில இருக்க லேடி கேரெக்டரை யாரை மனசுல வச்சு எழுதியிருக்கனு கேட்க, ஜோதிகானு கிருஷ்ணா சொல்ல, அப்போ அவங்ககிட்ட மொதல்ல சொல்லுங்கனு யோசனை சொல்றார். அப்படி ஜோதிகாகிட்ட கதை சொல்றார். கேட்ட உடனே அவருக்கு பிச்சும்போச்சு. யார் ஹீரோனு கேட்க, தெரியலை சுத்திட்டிருக்கேன்னு சொல்றார். அதுக்கப்புறம் தயாரிப்பாளர் தாணு உள்ள வர, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அகமிட் ஆகுறார். அஃபீசியலா கமிட்டான முதல் நபரே ஏ.ஆர் ரகுமான்தான். அதுக்கப்புறம் தயாரிப்பாளரா இருந்த தாணு விலக, ஞானவேல் உள்ளவர, முன்பே வா, நியூயார்க் நகரம் பாட்டுக்கள் கம்போஸ் பண்ணி முடிச்சாச்சு. ஆனா, ஹீரோ இன்னும் முடிவாகலை. அடுத்து சூர்யா கிருஷ்ணாவை மீட் பண்ணி மறுபடியும் கதை கேட்குறார். உடனே ஓகே சொல்லிவிட்டார் சூர்யா. அப்படித்தான் சூர்யா-ஜோதிகா உள்ளே வர படம் ஆரம்பிச்சது. அடுத்ததா காத்திருந்தது அதிர்ச்சி.

‘சில்லு’னு ஒரு காதல் – கிருஷ்ணா

பூமிகா கேரக்டருக்கு ஆள் கிடைக்கல. ஜோதிகா அப்போசிட்ல இன்னொரு ஹீரோயினானு யாருமே ஒத்துக்கல. கடைசியா பூமிகா கேட்ட உடனே ஓகே சொல்லிட்டாங்க. கதை சொல்ல அலைஞ்சதுல இருந்து 3 வருஷம் கழிச்சுதான் படமே ஆரம்பிக்குது. அடுத்தடுத்து வடிவேலு, சந்தானம்னு உள்ளே வர கவிஞர் வாலி பாடல்கள் எழுதுனார். படமும் சக்ஸஸா முடியுது. ரிலீஸூம் ஆகுது. அங்கதான் சிக்கல் ஆரம்பிக்குது. முன்னாடியே ப்ரஸ் ஷோ போட்டதால, படம் வெளியாகுற அன்னைக்கு காலைல தினசரி பத்திரிக்கையில இந்த படம் சமூகத்துக்கே கேடுங்குற லெவல்ல, ரிவ்யூ வெளியாச்சு. இன்னும் தியேட்டர்ல படம் ஆரம்பிக்கல. ஆனா ரிவ்யூ மட்டமா வந்திருக்குனு நெறய மக்கள் ஆர்வம் காட்டலை. ஆனா பார்த்தவங்க எல்லோரும் பாராட்டவே செஞ்சாங்க. கொஞ்சம் பிசகினாலும், பெரிய விவாதமாகிடுற கதையை சுவாரஸ்யமா படமாக்கியிருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. பாடல்கள் எல்லாமே அப்போவே செம வைரல். முன்பே வா இன்னைக்கு வரைக்கும் பேமஸா இருக்கு. ஏ.ஆர். ரகுமான் வேணாம்னு சொல்லியும், முன்பே வா பாட்டை படத்துல வச்சதும் கிருஷ்ணாதான். தான் நினைச்ச படத்தை கச்சிதமாவும், சரியாவும் பண்ணியிருந்தார். இதுல கதை இன்னொருத்தர் பெயர்தான் இருக்கும். அந்த கதையை சொன்னவரோட பெயர்தான் அதுல இருந்தது. அது தனக்கு நியாயமா இருக்காதுனு கிருஷ்ணா மறுத்துட்டார். இதுவே வேற யாராவது இருந்தா கதைக்கும் இயக்குநர் பெயரையே பயன்படுத்தியிருப்பாங்க. சில்லுனு ஒரு காதலுக்கு கடைசி வரை நியாயமாவே நடந்துக்கிட்டார், கிருஷ்ணா.

நெடுஞ்சாலை கதை!

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

அடுத்ததா ஏன் இப்படி மயக்கினாய் படத்தை இயக்கினார் கிருஷ்ணா. அதுல திரெளபதி ரிச்சர்ட் ஹீரோவாவும், நடிகை காயத்ரி ஹீரோயினாவும் நடிச்சிருந்தாங்க. காயத்ரியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருந்ததும் கிருஷ்ணாதான். பாடல்கள் ஏ.சி சத்யாங்குற இசையமைப்பாளர் கம்போஸ் பண்ணியிருந்தார். ஆனா, தயாரிப்பு தரப்பு சிக்கலால படம் ரிலீஸ் ஆகலை. எப்படியும் ரிலீஸ் ஆகிடும்னு அடுத்த ரெண்டு வருஷத்துக்கு அந்த வேலைலயே இருந்திருக்கார். ஆனா ஒருகட்டத்துலதான் இவருக்கு தெரிஞ்சிருக்கு. இது இனிமே வேலைக்கு ஆகாதுனு தெரிஞ்சு அடுத்த கதையை தேடி போறார், அப்படி அவருக்கு கையில சிக்குனதுதான் நெடுஞ்சாலை சினிமா. இந்த கதையும் நிஜத்துல நடந்த ஒரு கதை. இதையும் ஹீரோவை மனசுல வச்சுக்காம தயார் பண்றாரு. வழக்கம்போல யாருமே நடிக்க முன்வரலை. அதன்பிறகே ஆரி வந்தார். அந்த கதாபாத்திரத்துக்குனு அளவெடுத்து செஞ்ச மாதிரியான ஒரு தோற்றம். வேற நடிகர் இருந்திருந்தால்கூட கேரெக்டர் இவ்ளோ நல்லா வந்திருக்காதுனு சொல்ற அளவுக்கு ஆரியின் பெர்ஃபார்மென்ஸூம், இயக்குநர் கிருஷ்ணாவோட இயக்கமும் இருந்தது. முக்கால்வாசி நைட்ஷூட்தான். ராஜஸ்தான் வரைக்கும்போய் எடுக்கப்பட்டு முழுமையாக வந்திருந்தது, நெடுஞ்சாலை. ஷிவதா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட்னு இந்தப்படத்துலயும் எல்லாமும் இருந்தது. ஆனா இதுக்கப்புறமும் இவருக்கு பெரிசா படவாய்ப்புகள் வரலை. நல்ல இயக்குநரா இரண்டுமுறை ஃப்ரூப் பண்ணியும் அடுத்து வாய்ப்புகள் இல்லை. அடுத்ததாக ஆரம்பித்த மானே தேனே பேயேங்குற படமும் பாதியோட நிற்குது.

ஊஃபர் டிரைவர்!

இந்த நிலையில குடும்பத்தை நடத்த வேறு வழியில்லாம Uber-ல கார் ஓட்டுற வேலை பார்க்கிறார். இரண்டு படங்களுமே முத்தான படங்கள். அவர் டிரைவ் பண்ற வர்டாக்ஸியிலயே அவர்கூட பயணிகள் வரும்போது, முன்பே வா பாட்டு ஓடினா என்ன நினைச்சிருப்பார் கிருஷ்ணா,… அவர் மனசுக்குள்ள என்னவெல்லாம் ஓடியிருக்கும்னு நினைச்சாலே பயமாயிருக்கு. வீட்ல இருந்து கிளம்பும்போது மனைவிகிட்ட ஆபீஸ் போறேன்னு சொல்லிட்டு வந்து டாக்ஸி டிரைவர் வேலை பார்த்துட்டு மறுபடியும் வீட்டுக்கு திரும்ப போறப்போ ஆபீஸ்ல இருந்து போற மாதிரி போயிடுவாராம். வீட்ல மனைவிக்கு கஷ்டம் தெரியக் கூடாதுக்குறதுதான் இதுக்குக் காரணம். அதுக்கப்புறமா ரொம்ப மாசம் கழிச்சு, தெலுங்குல வலிமை வில்லன் கார்த்திகேயாவை நாயகனா வச்சு ஹிப்பிங்குற படத்தை இயக்குறார். அது தெலுங்குல சுமாரா போக, அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார், கிருஷ்ணா. அப்போதான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கால் பண்ணி ஒரு ரீமேக் படம் இருக்கு பண்ணித் தர்றீங்களானு கேட்க, கதையை பார்த்துட்டு ஒத்துக்கிறார். அப்படித்தான் ஆரம்பமானது பத்து தல படம். ஆனா இதுவும் பாதியில டிராப் ஆகுற நிலையில இருந்ததாலதான் இசைவெளியீட்டு விழாவுல அந்த விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.

சில்லுனு ஒரு காதல்
சில்லுனு ஒரு காதல்

மேக்கிங் ஸ்டைல்!

முதல்படமான சில்லுனு ஒரு காதல் கிராமம், நகரம்னு மாறி டிராவல் ஆகும். கெளதம் மேனன் பட்டறையில இருந்து வந்ததாலயோ என்னவோ, இவரோட ஃபிலிம் மேக்கிங்கும் அதே மாதிரி இருந்தது. சூர்யாவோட காலேஜ் போர்ஷன்ல வர்ற செகண்ட் இயர்ல இருந்து காலேஜ் என் கண்ட்ரோல்ல வந்துச்சுங்குற டயலாக்லாம் காலேஜ் இளஞர்கள் கொண்டாடுனாங்க. அதேபோல முன்பே வா, என் அன்பே வா பாட்டுக்கும் அடிக்ட் ஆன இளைஞர்களும் அதிகம். காட்சியமைப்பு, இயக்கம்னு ரெண்டுலயும் முழு திறமையும் போட்டு பண்ணியிருந்தார் கிருஷ்ணா. குறிப்பா, ஜோதிகாவின் நெஞ்சை உருக வைக்கிற பெர்ஃபார்மென்ஸ்லாம் அதுக்கு முன்னால பார்க்காத ஜோதிகாவை பார்க்க வைச்சது. சூர்யாவுக்கும் அது புதுகளம். மிகச் சிறப்பா பண்ணியிருந்தார். அதேபோலத்தான் நெடுஞ்சாலை படத்துலயும் அதிகமான இரவுக் காட்சிகள், லாரிமேல ஃபைட்கள், விறுவிறுப்பான சேசிங் காட்சிகள்னு ரொம்பவே மெனெக்கெட்டிருப்பார். பெரும்பாலும் லாரிக்குள்ள பேசுற சீன்களை எல்லாமே கொஞ்சம் புத்திசாலித்தனமா ஹேண்டில் பண்ணியிருந்தார். அந்த லாரிக்குள்ள டிரைவரா இருந்தது இயக்குநர் கிருஷ்ணாதான். அதேபோல கூட இருந்தது, படத்தோட கேமராமேன். ஈஸியா எடுக்குறதுக்கு என்ன வழினு யோசிச்சிருக்காங்க. அதனால டிரைவரா மாறிட்டா, நாமளே எடுத்துக்கலாம்னு யோசிச்சு, அந்த முடிவை எடுத்தார் கிருஷ்ணா. அந்த அளவுக்கு ஒரு பிலிம் மேக்கிங்க்கு முக்கியத்துவம் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரைக்கும் பட்ஜெட் ரொம்ப முக்கியம். அதுக்குள்ள முடிக்கணும்ங்குறதுதான் கிருஷ்ணாவோட பாலிசி. முதல் படம் எலைட் லைஃப் ஸ்டைல், இரண்டாவது படம் பக்கா க்ரைம் டிராமானு வேரியேசன் காட்டியிருந்தார் கிருஷ்ணா.

Also Read – எஸ்.டி.ஆரின் பத்து தல.. இனிமே எனக்கு என்டே இல்ல.. சிம்பு அட்ராசிட்டீஸ்!

இப்போ மஃப்டி கன்னட படத்தை தமிழ்ல்ல ரீமேக் பண்ணியிருக்கார். இதுல வழக்கமான ரீமேக்கா இல்லாம, கிருஷ்ணாவோட டச் நிச்சயமா இருக்கும்னு நம்பலாம். இயக்குநர் கிருஷ்ணாவோட செகண்ட் இன்னிங்ஸ் எப்படி இருக்கப் போகுதுனு பத்து தல படத்துக்கு பின்னாலதான் தெரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top