மொதல்லயே தெளிவா சொல்லிடுறேன் மக்களே இது பொன்னியின் செல்வன் படத்தோட விமர்சனம் இல்லவே இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஒட்டி மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்கிற பெயரில் இரண்டு பாகங்களாகப் படம் எடுத்திருக்கிறார். முதல் பாகம் வெளியாகியிருக்கும் நிலையில் நாவலில் இடம்பெற்றிருந்தது எதெல்லாம் மிஸ்ஸிங் அல்லது எதெல்லாம் எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கப்போறோம். வாங்க போலாம்…
ஓபனிங் சீன்!
பொன்னியின் செல்வன் படம் ராஷ்டிரகூடர்களுடனான போருடன் தொடங்கும். நாவலில் தஞ்சையை நோக்கிய வந்தியதேவனின் பயணம் வீரநாராயணக்கரை ஏரியில் இருந்து கதை தொடங்கும்.
கடம்பூர் சதித் திட்டம்!
படத்துல கடம்பூர் சம்புவரையர் மாளிகைல ஏதோ சதி நடப்பதாக ஆதித்த கரிகாலன் உளவறிந்து சொல்லச் சொல்லி வந்தியத் தேவனை அனுப்புவார். ஆனால், நாவலில் அப்படியிருக்காது. காஞ்சியிலிருந்து தஞ்சையில் இருக்கும் தந்தை சுந்தரச் சோழருக்கும், பழையாறையிலிருக்கும் சகோதரி குந்தவைக்கும் ஓலை கொடுத்தனுப்புவார் ஆதித்த கரிகாலன். இடையில் தனது நண்பன் கந்தன்மாறனின் அரண்மனையான கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியிருக்கையில், தற்செயலாக சிற்றரசர்களின் சதியைப் பற்றி வந்தியத்தேவன் அறிந்துகொள்ள நேரிடும். நாவலில் ஓலை கொடுக்கப்படுவதுபோல், படத்தில் தனது வாளையே கொடுத்தனுப்பியிருப்பார் ஆதித்த கரிகாலன்.
ஆதித்த கரிகாலன்
படத்தில் ஆதித்த கரிகாலன் போர் புரிவது போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருக்கும். அவரது அறிமுகமே யானை மேல் அமர்ந்து ஒரு கோட்டைக் கதவுகளை உடைத்துக் கொண்டு வரும் காட்சிதான். நாவலில் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் இருக்கும்போதுதான் கல்கி அவரை நமக்கு அறிமுகப்படுத்துவார். அதுபோல், ஆதித்த கரிகாலனின் போர்க்காட்சிகளை மற்ற சம்பவங்கள் போல் விரிவாக விளக்கியிருக்க மாட்டார். அதேபோல், ஆதித்த கரிகாலனை தஞ்சைக்கு அழைத்து வர சுந்தரச் சோழர் குந்தவையை அனுப்புவார். ஆனால், நாவலில் அப்படி ஒரு சம்பவம் இருக்காது. ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு மணிரத்னம் கொடுத்திருக்கும் அழுத்தம், நாவலில் இருக்காது என்றே சொல்லலாம்.
பொன்னியின் செல்வன் படத்துல வர்ற கிளைமேக்ஸ் காட்சி, நாவல்ல எந்த இடத்துல வரும் தெரியுமா… அந்த சீன் எப்படி மாறியிருக்குங்குற சுவாரஸ்ய தகவலைத் தெரிஞ்சுக்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.
குந்தவை – வந்தியத்தேவன் சந்திப்பு
படத்தில் சேந்தன் அமுதன் உதவியோடு வந்தியத்தேவன் குந்தவையை சந்திப்பதாக இருக்கும். அவர்களது முதல் சந்திப்பு பழையாறையில் ஒரு படகில் நடப்பதுபோல் காட்டியிருப்பார்கள். ஆனால், நாவலில் குடந்தை சோதிடர் வீட்டில்தான் இவர்களது முதல் சந்திப்பு நடக்கும். அப்போது, நாம் பேசிக்கொண்டிருப்பது சோழ இளவரசி குந்தவைதான் என்பதை அறியாமலேயே வந்தியத்தேவன் பேசிக்கொண்டிருப்பார்.
சிற்றரசர்களைக் குழப்பும் குந்தவை
பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் மதுராந்தகருக்கு ஆதரவாக சிற்றரசர்கள் ரகசியமாகக் கூடி ஆலோசனை செய்வார்கள். இதற்காக அவர்கள் தஞ்சை அரண்மனைக்குள் யாருக்கும் தெரியாமல் சுரங்க வழியாக ரகசியமாக வந்திருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு சந்திப்பு நடக்கையில் தனது சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும்; உங்களில் பலருக்குத்தான் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற ஒரு அஸ்திரம் மூலம் குந்தவை அவர்களது மன உறுதியைக் கலைப்பதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், நாவலில் அப்படி ஒரு காட்சி இடம்பெறாது.
சுந்தரச்சோழர் – நந்தினி
சுந்தரச் சோழரை பெரிய பழுவேட்டரையர் சந்திக்கச் செல்கையில் உடன் செல்லும் நந்தினி, அழைப்பு இல்லாமல் வருவது சரியல்ல என்று கூறி வெளியிலேயே நின்றுவிடுவார். அப்போது, சோழ அரியாசனத்தை அவர் ஏக்கத்தோடு பார்ப்பதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். படத்தில் சுந்தரச்சோழர் உடல்நலன் குன்றியிருப்பதாகக் காட்டியிருப்பார்கள். நாவலிலும் சுந்தரச் சோழர் நோய்வாய்ப்பட்டிருப்பார். நந்தினியை மந்தாகினி என நினைத்து, மந்தாகினியின் ஆவி தன்னைத் துன்புறுத்துவதாக சுந்தரச்சோழர் எண்ணிக்கொண்டிருப்பார். இதுவே அவரது உடல்நலன் குன்றுவதற்கு முக்கியமான காரணமாகவும் இருக்கும். இது நாவலில் முக்கியமான திருப்புமுனையாக அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் அப்படியான பின்னணி எதுவும் விவரிக்கப்படவில்லை.
Also Read – கல்கி லைக் போட்டிருப்பார்… well done மணி! #பொன்னியின்_செல்வன்
மந்தாகினி
படத்தில் அருள்மொழிவர்மரைப் பல இடங்களில் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மந்தாகினி தேவியே, கடலில் மூழ்கப்போகும் அருள்மொழி வர்மரைக் காப்பாற்றுவதாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், நாவலில் அருள்மொழிவர்மரையும் வந்தியத்தேவனையும் காப்பாற்றுவது பூங்குழலி என்பதாகத்தான் கல்கி காட்சிப்படுத்தியிருப்பார். அதேபோல், இளவரசரும் வந்தியத்தேவனும் கடலில் தத்தளிப்பது இரண்டாவது பாகத்தின் இறுதியில் இடம்பெற்றிருக்கும். முதல் இரண்டு பாகங்களின் சுருக்கமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இருப்பதாக அறிய முடிகிறது. இதனால், அடுத்த 3 பாகங்களின் சுருக்கமே படத்தின் இரண்டாவது பாகமாக வெளிவரும் என்று தெரிகிறது.
இவை தவிர, வந்தியத்தேவன் – பூங்குழலி எப்படி சந்தித்தார்கள் என்பதைக் காட்டாதது, நாவலின் முக்கிய கேரக்டரான குடந்தை சோதிடர் கேரக்டரே இடம்பெறாதது, நாவலில் வந்தியத்தேவன் மீது காதல் கொண்டு, இறுதிவரை பயணித்து கடைசியில் வந்தியத்தேவன் மடியிலேயே உயிர்துறக்கும் மணிமேகலை கேரக்டர் ஒரே ஒரு வசனத்தில் மட்டுமே இடம்பிடித்தது, நந்தினியின் அரண்மனையில் இருந்து வந்தியத்தேவன், தானே கண்டுபிடித்து சுரங்கப்பாதை வழியாகத் தப்புவான். ஆனால், படத்தில் நந்தினியே சுரங்கப்பாதை வழியாக வந்தியத்தேவனை அனுப்புவதுனு பல விஷயங்களையும் சுட்டிக்காட்டலாம். ஆனால், நாவல் திரைவடிவம் பெறும்போது, சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். இதையெல்லாம் குறைகளாகச் சொல்லல; நாவல் Vs திரைப்படம் என்கிற அளவில் Facts-ஆ உங்க முன்னாடி வைச்சிருக்கோம். பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க இதற்கு முன்பு வரை எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில், தமிழர்கள் ஆல்டைம் ஃபேவரைட் நாவலை படமாக எடுத்ததே ஆகப்பெரிய சாதனைதான். விஷுவலாகவும் நமக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் மணிரத்னம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பொன்னியின் செல்வன் படத்துல எந்த சீன் உங்களை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!