Pegasus சாஃப்ட்வேர் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு சராசரியாக 9,000 போன் நம்பர்கள், 500 இ-மெயில்கள் உளவு பார்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 2013-ல் மத்திய அரசு ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தது.
Pegasus சர்ச்சை
இஸ்ரேலைச் சேர்ந்த NSO Group Technologies என்ற நிறுவனத்தின் Pegasus சாஃப்ட்வேர் மூலம் இந்தியாவில் சுமார் 300 பேரின் போன் நம்பர்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் சர்ச்சையாகி இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லவாஸா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கொடுத்த நீதிமன்ற பெண் ஊழியர், மே 19 இயக்கத்தின் திருமுருகன் காந்தி என இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடையது. பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட 2 அமைச்சர்கள் பெயரும் இந்தப் பட்டியலில் இருக்கிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. உளவு பார்க்கும் Pegasus சாஃப்ட்வேரை அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்வோம் என இஸ்ரேலிய நிறுவனம் கூறியிருக்கும் நிலையில், மத்திய அரசு உளவு பார்ப்பது மனித உரிமை மீறல் என்று கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் வரும் 22-ல் போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்திருக்கும் மத்திய அரசு, இந்திய ஜனநாயகத்தின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தசூழலில், உளவு பார்த்ததை மத்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சம்பவம் கடந்த 2013-ல் நடந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த பதில் இப்போது வைரலாகி வருகிறது.
ஆர்.டி.ஐ கேள்வியும் மத்திய அரசின் பதிலும்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லியைச் சேர்ந்த பிரசன்ஜித் மண்டல் என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ல் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் கொடுத்திருந்தது. அந்தப் பதிலில், `மாதத்துக்கு சராசரியாக 7,500 – 9,000 போன் நம்பர்களை உளவு பார்க்கவும், 300 – 500 இ-மெயில் கணக்குகளை வேவு பார்க்கவும் மத்திய அரசு உத்தரவிடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், சுவாமி அமிர்தானந்த் தேவ்திரத் என்பவர் கேட்டிருந்த ஆர்.டி.ஐ கேள்விக்குக் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய டெலிகிராப் சட்டம் 1885-ன் கீழ் சட்டப்பூர்வமாக ஐ.பி, மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத் துறை உள்ளிட்ட 9 விசாரணை அமைப்புகளுக்கு உளவு பார்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகச் சொன்னது.
போன் டேப்பிங் சர்ச்சை
சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளர் அமர் சிங், மன்மோகன் சிங் அரசு தனது போனை உளவு பார்க்கப்படுவதாக 2006-ம் ஆண்டு ஜனவரி 19-ல் குற்றம்சாட்டினார். அதன்பின்னர், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, சீத்தாரம் யெச்சூரி போன்றோரும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விளக்கம் வித்தியாசமானது. அரசாங்கத்தால் யாருடைய போனும் உளவு பார்க்கப்படவில்லை என்று சொன்ன அவர், இதில் தனியார் ஏஜென்ஸி ஒன்றில் ஈடுபாடு இருப்பதாகச் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக பூபிந்தர் சிங் என்பவர் அப்போது கைது செய்யப்பட்டார்.
2009 அக்டோபர் 17-ல் மேற்குவங்க கம்யூனிஸ்ட் கட்சி மீது இதே குற்றச்சாட்டை சுமத்தினார் அப்போதைய மத்திய ரயில்வே துறை அமைச்சரான மம்தா பானர்ஜி. மேற்குவங்க கம்யூனிஸ்ட் அரசு தனது போன் மட்டுமல்லாது இ-மெயில், எஸ்.எம்.எஸ்-களையும் உளவு பார்ப்பதாக ஊடகங்கள் வாயிலாகக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், விளக்கம் கொடுப்பார் என அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். ஆனால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்தார்.
2010 டிசம்பர் 14-ல் போன் டேப்பிங் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் நடப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார். தேசிய பாதுகாப்பு மட்டுமல்லாது வரி ஏய்ப்பு, பணமோசடி போன்ற விவகாரங்களைத் தடுக்க மிகப்பெரிய கார்ப்பரேட் ஆட்களுடைய போன்கள் உளவு பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்கம் கொடுத்தார். அதற்கடுத்த நாள் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், விவகாரம் வெளியே லீக்காகக் காரணம் குறித்து ஆய்வு நடத்தவும் அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
பிரணாப் முகர்ஜியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
2011-ம் ஆண்டு ஜூன் 22-ல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கடிதத்தில் தனது அலுவலகத்தை உளவு பார்ப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அமைச்சரவை செயலாளர்கள் போன் டேப்பிங் எனப்படும் உளவு பார்ப்பதற்கு எதிராக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், 2011 மே 22-ல் போன் டேப்பிங்கைத் தொடரலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு அப்போதைய ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பச்சைக் கொடி காட்டியது.
சமீபத்திய சர்ச்சை
ராஜஸ்தானில் ஆட்சியிலிருக்கும் கெஹ்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தங்கள் எம்.எல்.ஏ-க்கள் போன்களை உளவு பார்ப்பதாக பா.ஜ.க கடந்த ஜூன் 13-ல் குற்றம்சாட்டியது. இந்தப் பட்டியலில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசைக் கவிழ்க்கவே பா.ஜ.க இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருவதாக முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் விளக்கமளித்தார். மேலும், ராஜஸ்தானின் போன் டேப்பிங் கலாசாரம் எப்போதுமே இருந்ததில்லை என்றும் அவர் பதிலளித்திருக்கிறார்.
Also Read – Pegasus: ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், 2 அமைச்சர்கள்… விஸ்வரூபம் எடுக்கும் பெகாஸஸ்… பின்னணி!