வண்ணங்களின் காதலன் ஓவியர் இளையராஜா. பெண்மையைப் பிரதானப்படுத்திய இவரது ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. தூணில் சாய்ந்தபடி, அடுப்பூதும் பெண், பூத்தொடுக்கும் இளம்பெண், ஆடுகளை மேய்க்கும் சிறுமி, நிலைப்படி, குளத்தங்கரையில் அமர்ந்திருக்கும் பெண், குளத்தில் நீரோடு விளையாடும் பெண், கையில் குழந்தையை ஏந்தியபடி சிரித்திருக்கும் தாய், பூக்கூடையுடன், இறைவனை வணங்கியபடி என நமது பக்கத்து, எதிர்வீட்டுப் பெண்களைத் தத்ரூபமாக ஓவியமாக்கும் கலை வாய்க்கப்பெற்றவர்.
ரியாலிசம் எனப்படும் உண்மைக்கு மிக நெருக்கமாக வரையப்படும் ஒருவகை ஓவியக் கலையில் வல்லவரான இளையராஜா, கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தார். இது சக கலைஞர்களை மட்டுமல்லாது, ரசிகர்களையும் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. கும்பகோணத்தை அடுத்த செம்பியவரம்பல் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் தீராக்காதல் கொண்ட இளையராஜா, 5 சகோதரர்கள், 5 சகோதரிகள் என பெரிய கூட்டுக்குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர்.
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது ஓவிய ஆசிரியர் துரை என்பவரால் வளர்த்தெடுக்கப்பட்டார். ஓவியங்கள் மீதான ஆர்வம் காரணமாக வீட்டில் பிரச்னை ஏற்படவே, ஒரு கட்டத்தில் தனது ஆசான் துரையின் வீட்டுக்கே சென்று தங்கியிருக்கிறார். பள்ளி நாட்களில் அவரின் வழிகாட்டுதலில் ஓவிய ஆர்வத்தைப் பட்டை தீட்டிய இளையராஜா, பின்னாட்களில் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். அப்போதைய வண்ணக்கலை ஆசிரியர் சிவபாலன் அட்மிஷனுக்காக இவரை வரையச் சொன்னபோது, இளையராஜா வரைந்த ஓவியங்களைப் பார்த்து அசந்துபோயிருக்கிறார். இறுதியாண்டு மாணவரின் ஓவியத்தைவிட இளையராஜா வரைந்த ஓவியம் சிறப்பானதாக இருந்தது என்று சிவபாலன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி இருக்கும். ஓவியர் ரவிவர்மா ஓவியங்களில் காதல் உணர்வு மேலோங்கி இருக்கும். தனிப்பட்ட வாழ்விலும் காதலுணர்வுடன் வாழ்ந்தவர் அவர். ஆனால், இளையராஜாவை கண்ணியமிக்க ஓவியர் என்று அடையாளப்படுத்துகிறார்கள் அவரது நண்பர்கள். சிறுவயதில் அவரது அண்ணன்கள் வெளிநாடு சென்றுவிட அண்ணிமார்கள் புடைசூழ இவர் வளர்ந்திருக்கிறார். அந்த சூழலே இவரது ஓவியங்களில் பெண்மை போற்றப்பட, முக்கிய கருத்துருவாக மாற முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. வீட்டின் கடைக்குட்டி என்பதால் `குட்டி அப்பா’ என்று அண்ணிமார்களால் அழைக்கப்பட்ட இளையராஜா, திராவிடப் பெண்கள் என்ற கண்காட்சியால் கவனம் பெற்றார்.
வீட்டின் எதிரே இருக்கும் ஒரு சந்து, நண்பர் ஒருவரின் வீடு, எதிர்வீடு என இவர் வளர்ந்த சூழல்களையே ஓவியத்துக்கான பின்னணியாகத் தேர்வு செய்து வரைந்திருக்கிறார். இளையராஜாவின் ஓவியங்களை உற்றுப்பார்த்தால் அது ஓவியமா அல்லது புகைப்படமா என்ற சந்தேகம் நிச்சயம் ஒரு விநாடி எழுந்து மறையும். வண்ணங்களை அவர் கையாளும் விதம் பிரமிப்பானது என்று சக ஓவியர்களே வியந்து பாராட்டும் தகுதிபெற்றவர்.
இயக்குநர் பார்த்திபனுடான அறிமுகம், இயக்குநர் சிம்புதேவனின் நட்பு இவரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவியது. பார்த்திபனின் இவன் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அவர், இளம் வயது பார்த்திபனாகவும் படத்தில் நடித்திருப்பார். ஓவியரான பயணத்தின் முதல் 8 ஆண்டுகள் யார் எதைக் கேட்டாலும் வரைந்துகொடுக்கும் ஓவியராக இருந்துவந்த இளையராஜா, தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தலாம் என்று முடிவெடுத்தபோதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருக்கிறது. `எல்லா விஷயங்களையும் வரையத் தெரியும்னு சொல்றீங்க.. உங்களுக்கு தனியா என்ன ஸ்பெஷாலிட்டி’ என்ற கேள்வியை முதல்முதலில் எதிர்க்கொண்டிருக்கிறார். அதன்பின்னரான சுயதேடல்தான் ரியாலிசம் பாணி ஓவியங்கள் மீது கவனம் ஏற்படக் காரணம் என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா.
இளையராஜா ஓவியங்களில் இழையோடும் உண்மைத்தன்மை தமிழ் ஓவியச் சூழலில் ரியாலிசம் ஓவியங்களுக்கான புதிய களத்தை அமைத்துக் கொடுத்தது. ஓவியங்களில் அவர் வண்ணங்களைக் கையாண்ட விதம், தத்ரூபமான உருவ அமைப்பு ஆகியவை தனித்த அடையாளத்தைக் கொடுத்தது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பல கண்காட்சிகளை நடத்தியிருக்கும் இளையராஜா, பல இடங்களில் ஓவியம் குறித்த பயிற்சி கொடுத்திருக்கிறார். மத்திய கலாசார அமைச்சகத்தின் ஃபெல்லோஷிப், சிறந்த ஓவியருக்கான தமிழக அரசின் விருது, கர்நாடக அரசு வழங்கிய தேசிய விருது, விஜய் டிவி வழங்கிய சிறந்த பத்திரிகை ஓவியர் விருது, புதிய தலைமுறையின் சிறந்த ஓவியர் விருது, லலிதா அகாடமி வழங்கிய விருது என இளையராஜாவுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் மிக நீளமானது. தத்ரூப ஓவியங்கள் வரைவதில் தமிழகத்தின் முன்னணி ஓவியராகத் திகழந்தவர்.
உங்கள் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணம் எதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு இளையராஜா சொன்ன பதில். `பெங்களூர்ல இருந்து ஒரு கால் வருது. உங்களோட ஓவியங்கள வாங்கணும்னு ஆசைப்படுறோம்னு சொன்னாங்க. நானும் பெங்களூர்ல இருக்க ஒரு ஆர்ட் கேலரியோட பேரைச் சொல்லி அங்கே கிடைக்கும்னு சொன்னேன். ஆர்ட் கேலரில பேசி என்னோட ஓவியங்களை அவங்க வாங்கிட்டாங்க. அவங்ககிட்ட நான் கேட்டேன்.ஓவியங்களை வாங்குறதுக்காக மெனக்கெட்டு எனக்கு போன் பண்ணி வாங்குறீங்களே, இதுக்கு எதாவது காரணம் இருக்கா’னு நான் அவங்ககிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொன்ன பதில் ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துச்சு. என்னோட குழந்தை ஒரு ஸ்பெஷல் சைல்ட். எங்களுக்கு உங்களைப் பத்தி தெரியுறதுக்கு முன்னாடியே, எங்க குழந்தை உங்களைப் பத்தியும் உங்க பெயிண்டிங்ஸ் பத்தியும் பேசுறான்’னு சொன்னாங்க.
என்னடா இது புதுசா இருக்கேன்னு நான் கேட்டேன்.என் பையனை நாங்க கூட்டிட்டு போகாத ஹாஸ்பிட்டலே இல்லை. எங்கேயும் எந்த முன்னேற்றமும் இல்லை. தண்ணீர் வேணும், பசிக்குதுனு தன்னோட தேவைகளைக் கூட அவனுக்குக் கேக்கத் தெரியாது. ஒரு சூழல்ல ஐபேட்ல பார்த்துட்டே இருக்கும்போது, என்னோட பேஜ் எப்படி ஓப்பன் ஆச்சுனு தெரியல.. என்னோட ஓவியங்களைப் பார்த்து அதோட பேச ஆரம்பிச்சிருக்காரு அந்தப் பையன். இதைக் கவனிச்ச அந்தப் பெற்றோர். ரொம்பவே சந்தோஷப்பட்டுட்டாங்க. `நீங்க இதை நம்புறீங்களானு தெரியல.. அதை வீடியோவா எடுத்து அனுப்புறோம்’னு சொல்லி வீடியோவும் அனுப்புனாங்க. அதை அவங்க சொல்லும்போதே எனக்கு கண்ணீர் வந்துருச்சு. அந்த ஒரு தருணம் அதுவரை எதுவெல்லாம் அங்கீகாரம், சாதனை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அது எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயிடுச்சு. நம்மோட படைப்பு ஒருவரிடம் உணர்வு ரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துனுனா அதுதானே பெரிய அங்கீகாரமா இருக்க முடியும்’’ என்று நெகிழ்ந்தார்.
இளையராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!’’ என்று தெரிவித்திருக்கிறார். உண்மைதான், உயிர்ப்பான ஓவியங்கள் வழியாக பல நூற்றாண்டுகள் நம்மோடு இருப்பார் இளையராஜா.
Also Read – `நாட்டுக்குள்ளே ஒரு நாடா?’ – மெட்ராஸ் மாகாணம் டு தமிழ்நாடு பெயர்மாற்ற சுவாரஸ்ய பின்னணி!