Harassment

தற்காப்புக் கொலை… பெண்ணை விடுவித்த திருவள்ளூர் எஸ்.பி – ஐ.பி.சி பிரிவு 100 என்ன சொல்கிறது?

பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுக்க முயன்றவரைத் தற்காப்புக்காகக் கொலை செய்த பழங்குடிப் பெண்ணை திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் ஐ.பி.சி பிரிவு 100-ன் கீழ் விடுதலை செய்தார். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100 என்ன சொல்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வழுதிகை மேடு ஏரிக்கரையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணி என்பவர் மீன் பண்ணை நடத்தி வருகிறார். இந்த மீன் பண்ணையில் திருவாலாங்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதான பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், 21 வயதான தனது மனைவியுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியான மீன் பண்ணையில் வேலையை முடித்துவிட்ட கணவன் – மனைவி இருவரும் போனவாரத்தில் ஒருநாள் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

Tiruvallur SP Varun kumar IPS

அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். கணவரைத் தாக்கிவிட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய அவர் முயன்றிருக்கிறார். அவரை எதிர்த்து கணவன் – மனைவி இருவரும் போராடியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த மர்ம நபரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் கீழே கிடந்த கற்களை எடுத்து தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்காப்புக்காகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிடவே, சம்பவ இடத்துக்கு தகவலறிந்து போலீஸார் வந்திருக்கிறார்கள். உயிரிழந்தவரின் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கணவன் – மனைவி இருவரையும் மீஞ்சூர் போலீஸார் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அதன்பிறகு, அந்தப் பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், சம்பவம் குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தற்காப்புக்காகவே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100-ன் கீழ் எஸ்.பி வருண் குமார் விடுதலை செய்தார்.

ஐ.பி.சி பிரிவு100 என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. இதில், பிரிவு 100-ல் ஆண்கள் – பெண்களின் உடன்பாடு இன்றி சீண்டும்போது தற்காப்பு உரிமை எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டபடி, ஒருவர் நம்மைத் தாக்கி கொலை செய்ய முயன்றாலோ, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாலோ அல்லது கடத்திச் செல்லும் நோக்கில் செயல்பட்டாலோ சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையில் தற்காப்பு உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு தாக்கினால், அதில் ஆண்கள் உயிரிழந்தால் அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேபோல், கடந்த 2012 பிப்ரவரியில் மதுரையில் குடிபோதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஜோதிபாசு என்பவரை, அவரது மனைவி உஷாராணி என்பவர் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்தார். தற்காப்பு கொலை என்பதால் ஐபிசி பிரிவு 100-ன் கீழ் அவரை அப்போதைய மதுரை எஸ்.பி அஸ்ரா கார்க் விடுதலை செய்தார்.

Also Read – கூகுள் மேப் உதவி; 21 ஏடிஎம்-களில் கொள்ளை – ஹரியானா கும்பலை நெருங்கும் போலீஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top