நாளொன்றுக்கு 49 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள், அதன் மூலம் ரூ.64,000 கோடி அளவுக்கு நிகர வருமானத்தைக் கொண்டிருக்கும் நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தையின் (NSE) தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர், எங்கோ இமயமலைச் சாரலில் இருப்பதாக நம்பப்படும் முகம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனையைக் கேட்கிறார். தன்னுடைய வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யும்பொருட்டு அவருடைய ஆலோசனையைக் கேட்டதாகவும் அவர் விளக்கம் கொடுக்கிறார். இத்தனைக்கும் அந்த யோகியின் முகத்தைக் கூட அவர் பார்த்ததில்லையாம்.
மேலும், பொதுத்துறை நிறுவனத்தில் ஆண்டொன்றுக்கு 15 லட்ச ரூபாய் ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை, 9 மடங்கு அதிக ஊதியத்தில், அதாவது ரூ.1.68 கோடி ஆண்டு ஊதியத்தில் திட்டங்களை வகுப்பதற்கு ஆலோசனை சொல்லும் chief strategy officer (CSO) பணிக்கு அமர்த்தவும் சாமியார் அறிவுரை சொல்லவே, அதை அப்படியே நிறைவேற்றுகிறார் அந்த அதிகாரி. அதற்கு முன்னர் தேசிய பங்குச் சந்தையில் அப்படி ஒரு பதவி இல்லவே இல்லை. இதோடு முடிந்துவிடவில்லை. ஓராண்டில் அந்த ஊழியருக்கு Group Operating Officer (GOO) என்ற உயர்ந்த பதவிக்கான பதவி உயர்வும் கொடுத்து, வழக்கமாக ஐந்து நாள் பணி என்பதையும் 3 நாளாகக் குறைத்தும் உதவி செய்திருக்கிறார். இவை அத்தனையும் அந்த சாமியாரின் ஆலோசனைப்படியே இதைச் செய்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் அந்த அதிகாரி. சாமியாரை இ-மெயில் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைப் பெற்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இவை அத்தனையும் ஒரு திரில்லர் ஸ்டோரி படத்தின் கதை இல்லிங்க.. உண்மையில் நடந்தவை. தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள்தான் மேலே சொல்லப்பட்டவை. அவரால் அதிக ஊதியத்துக்கு நியமிக்கப்பட்டவர் ஆனந்த் சுப்ரமணியன். இந்த வழக்கில் இவர்கள் இருவரைத் தவிர்த்து முகம் தெரியாத சாமியாரும், சித்ராவுக்கு முன் 1994 – 2013 வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரவி நரேன் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து செபி நடத்திய விசாரணை முடிவில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.
யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணா?
சாதாரண சார்ட்டட் அக்கவுண்டண்டாகத் தனது பணியைத் தொடங்கியவர் மும்பையைச் சேர்ந்த சித்ரா. 1985-ல் IDBI வங்கியில் பணியில் சேர்ந்த இவர், பின்னர் செபி-யிலும் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் IDBI வங்கிப் பணிக்குத் திரும்பினார். தேசிய பங்குச் சந்தை அமைப்பை நிறுவுவதற்காக IDBI வங்கியின் தலைவர் எஸ்.எஸ்.நட்கர்னி தேர்வு செய்த ஐந்து பேரில் ஒருவர். 1980-களின் இறுதியில் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI)-யை உருவாக்க, அதற்கான சட்ட நடைமுறைகள் வகுக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர், செபியின் பல்வேறு குழுக்களிலும் முக்கியமான உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார்.
2013-ல் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் பதவியேற்றார். இவரது பதவிக்காலத்தில் முறைகேடுகள் நடந்ததாக 2016-ல் புகார் கிளம்பவே, அதே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து செபி அமைப்பு நடத்திய தொடர் விசாரணையின் முடிவில் சித்ரா, ஆனந்த் சுப்ரமணியம், ரவி நரேன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ரவி நரேன் மற்றும் ஆனந்த் சுப்ரமணியம் ஆகியொருக்குத் தலா ரூ.2 கோடியையும் அபராதமாக செபி விதித்திருக்கிறது. மேலும், பங்கு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட 3 வருடத் தடையும் தேசிய பங்குச் சந்தையான NSE அடுத்த 6 மாதங்களுக்குப் புதிதாக எந்தவொரு தயாரிப்பையும் சந்தையில் அறிமுகப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த் சுப்ரமணியன்
சாமியாரின் பெயரில் சித்ராவை ஆனந்த் சுப்ரமணியனே தவறான ஆலோசனைகள் கூறி வழிநடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் செபி எழுப்பியிருக்கிறது. விதிகளை மீறி மூன்றாவது நபரிடம் பங்குச் சந்தைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தது ஏன் என்ற கேள்விக்கு, “மூத்த தலைவர்கள் சில நேரம் தங்களது பயிற்சியாளர்கள், குருநாதர்கள் அல்லது துறையில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனையைப் பெறுவதுண்டு. இது முழுக்க முழுக்க முறைசாராத இயல்புதான். அந்த அடிப்படையிலேயே, எனது வேலையில் திறம்பட பணியாற்றும் பொருட்டு சாமியாரிடம் ஆலோசனை பெற்றேன்’ என்று சித்ரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மேலும், அந்த யோகியிடம் தனது தனிப்பட்ட மற்றும் வேலை தொடர்பாக 20 ஆண்டுகளாக ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும், அவரை rigyajursama@outlook.com என்ற இ-மெயில் முகவரி மூலம் தொடர்புகொண்டதாகவும் செபி-க்கு அளித்த விளக்கத்தில் சித்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
2013-ல் ரூ.1.68 கோடி ஊதியத்தில் பணிக்குச் சேர்ந்த ஒரு வருடத்தில் ஆனந்த் சுப்ரமணியனின் ஊதியம் 2016-ல் ரூ.4 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. செபி மற்றும் என்.எஸ்.சி-யால் விசாரணைக்கு நியமிக்கப்பட்ட Ernst and Young LLP (EY) நிறுவனம், அந்த சாமியாரே ஆனந்த் சுப்ரமணியன்தான் என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணாவுக்குச் சொந்தமான இடங்கள், சென்னையில் ஆனந்த் சுப்ரமணியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் பிப்ரவரி 17-ல் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Also Read – நீட் விலக்கு மசோதா: ஆளுநர் சட்டப்பேரவையின் முடிவை நிராகரிக்க முடியுமா- அடுத்தது என்ன?