ellen degeneres show

`The Ellen DeGeneres Show’-வில் என்ன ஸ்பெஷல்… 19 வருடங்களுக்குப் பின் முடிய என்ன காரணம்?

அமெரிக்காவின் பிரபல டிவி ஷோவான `தி எலென் டிஜெனரஸ் ஷோ’ தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளுக்குப் பின் 2022 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஷோ எப்படி நடக்கும்.. ஷோவின் சாதனைகள், சர்ச்சைகள் என்ன? முடிவுக்கு வர என்ன காரணம்?

The Ellen DeGeneres Show

அமெரிக்காவின் புகழ்பெற்ற டிவி டாக் ஷோவான தி எலென் டிஜெனரஸ் ஷோ, கடந்த 2003, செப்டம்பர் 8-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. வார நாட்களில் ஒளிபரப்பாகும் இந்த ஷோ தொடர்ச்சியாக 18 சீசன்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. 2022ம் ஆண்டு 19-வது சீசனோடு டாக் ஷோவை முடித்துக் கொள்ள இருப்பதாக ஹோஸ்ட் எலென் டிஜெனரஸ் அறிவித்திருக்கிறார். இது உலகெங்கிலுமுள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ellen degeneres show
Photo Credit – Warner Bros.

ஷோவின் பின்னணி

காமெடியனான எலென் டிஜெனரஸ், 1990களில் வெளியான அமெரிக்க டிவி தொடர் எலென் மூலம் அறிமுகமானார். தொடர்ச்சியாக டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள், தொடர்களில் பணியாற்றிய அவர் 2003ம் ஆண்டு `தி எலென் டிஜெனரஸ் ஷோ’ என்ற பெயரில் டாக் ஷோவை ஹோஸ்ட் பண்ணத் தொடங்கினார். அப்போது அமெரிக்க டிவி வரலாற்றில் இது மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று எலென் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். சிண்டிகேஷன் சேனலில் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அதன் வரவேற்பை அடுத்து அமெரிக்காவின் முக்கிய சேனலான என்.பி.சி-க்கு மாறியது. 18 ஆண்டுகளாக 3,000-த்துக்கும் அதிகமான எபிசோடுகள் இதுவரை ஒளிபரப்பாகியிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில்தான், மே 13-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், 19-வது சீசனோடு நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள இருப்பதாக எலென் அறிவித்தார்.

கான்செப்ட்

தி எலென் டிஜெனரஸ் ஷோ பொதுவாக காமெடி, செலிபிரட்டிகள் பங்கேற்பு, இசை, நடனம் மற்றும் ஹியூமன் இண்ட்ரஸ்ட் ஸ்டோரீஸ் என பல ஜானர்களை உள்ளடக்கியது. சில சமயங்களில் பார்வையாளர்களும் பங்கேற்கும் வகையில் போட்டிகளையும் கொண்டிருக்கும். சுமார் 3,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பரிசுகளும் ஒவ்வொரு எபிசோடுக்கும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டதுண்டு. ஹோஸ்ட் எலென் சமூகப் பிரச்னைகள் குறித்தும், உலகம் எதிர்க்கொள்ளும் பொதுவான விஷயங்கள் குறித்தும் தொடர்புடைய அறிஞர்கள், செலிபிரட்டிகளோடு விவாதிப்பதுண்டு. இந்தநிகழ்ச்சியில் லியானார்டோ டிகாப்ரியோ, செலினா கோமஸ், கிம் காதர்ஷியன் தொடங்கி அரசியல்வாதியான ஹிலாரி கிளிண்டன் வரை பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள், 3,000-த்துக்கும் அதிகமான எபிசோடுகளில் இதுவரை 2,400-க்கும் அதிகமான செலிபிரட்டிகளை எலென் பேட்டி கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ellen degeneres show

விருதுகள்

அமெரிக்க டிவி வரலாற்றில் அதிக விருதுகளை வாரிக்குவித்த டாக் ஷோ இதுதான். 2020 கணக்கின்படி அமெரிக்க டே டைம் எம்மி விருதுகள் பட்டியலில் 171 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றில் 61 விருதுகளை இந்த ஷோ பெற்றிருக்கிறது. அதில், நான்கு மிகச்சிறந்த டாக் ஷோ, ஏழு சிறந்த டாக் ஷோ பொழுதுபோக்கு விருதுகளும் அடங்கும். டாக் ஷோ என்ற வரிசையில் 9 விருதுகளைப் பெற்றிருந்த மற்றொரு டிவி ஷோவான `தி ஓஃப்ர வின்ஃப்ரே ஷோ’-வின் சாதனையை முறியடித்து 11 விருதுகளுடன் எலென் ஷோ முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர, 17 பீப்புள்ஸ் சாய்ஸ் விருதுகளையும் இந்த ஷோ வென்றிருக்கிறது. எலென் டிஜெனரஸ், போர்ஷியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். வெளிப்படையாக தனது ஓரினச் சேர்க்கை குறித்து அறிவித்த அவரை, டைம் இதழ் அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்தது. அதேபோல், கடந்த 2016ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எலெனுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ஃப்ரீடம் மெடலை அளித்து கௌரவப்படுத்தினார்.

இந்தியப் பிரபலங்கள்

எலென் டாக் ஷோவில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் இதுவரை கலந்துகொண்டிருக்கிறார்கள். யூடியூபில் கிச்சாடியூப் ஹெச்.டி என்ற பெயரில் கிச்சா எனும் இந்திய செஃப் சேனல் வைத்திருக்கிறார். அந்த சேனலில் ஒளிபரப்பான `மிக்கி மவுஸ் மாம்பழ ஐஸ்க்ரீம்’ மெனுவின் உரிமையை ஃபேஸ்புக் நிறுவனம் 2,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது. இதனால், அந்த மெனுவைத் தயாரித்த 7 வயது சிறுவனான நிஹல் ராஜ் உலக அளவில் பிரபலமடைந்தார். அவர்தான் எலென் ஷோவில் கலந்துகொண்ட இளம்வயது இந்தியர். அவர் 2016ம் ஆண்டு இந்த ஷோவில் கலந்துகொண்டு எலெனுடன் இணைந்து சமைத்து அசத்தினார். கடந்த 2014ம் ஆண்டு பிரிட்டன் காட் டேலண்ட் ஷோவில் கலந்துகொண்டு கோல்டன் பஸர் விருதுபெற்ற 8வயது சிறுவன் அக்‌ஷத் சிங், கடந்த 2014ம் ஆண்டு எலென் ஷோவில் கலந்துகொண்டு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார்.

ellen degeneres show

பிரியங்கா சோப்ரா 2016 மற்றும் 2019 என இரண்டு முறை இந்த ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார். அதேபோல், டிரிபிள் எக்ஸ் படம் வெளியானபோது, அதில் நடித்திருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

சர்ச்சை

வேலை செய்யும் இடத்தில் நிறவெறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் என எலென் ஷோ குழுவினர் மீது கடந்தாண்டு ஜனவரியில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், குழுவைச் சேர்ந்த எட் க்லாவின், கெவின் லிமென் மற்றும் ஜோனாதன் நார்மன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் அறிவித்தது. அதேபோல், தனது குழுவினருடனான வீடியோ கான்ஃப்ரஸில் இதற்காக மன்னிப்புக் கேட்ட எலென், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்று உறுதியளித்தார். அதன்பிறகு, 2020 செப்டம்பரில் ஒளிபரப்பான 17வது சீசன் முதல் எபிசோடில் பிரச்னைகள் குறித்து பேசிய எலென், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறி இது புதிய சகாப்தம் என்று நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.

19-வது சீசனோடு முடிவது ஏன்?

2019ம் ஆண்டு 19வது சீசனோடு டாக் ஷோ முடிவுக்கு வர இருப்பதாக அறிவித்த எலென், “கடந்த 18 வருடங்கள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இந்த ஷோவைப் பார்த்து, சிரித்து, சில சமயங்களில் அழுததற்காக உங்களுக்கு என்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கடந்த 2019-ல் அடுத்த மூன்று சீசன்களுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானபோதே இதை நான் அறிவேன். 19-வது சீசன்தான் என்னுடைய கடைசி சீசன் என்று முடிவெடுத்திருந்தேன்.

ஒரு கிரியேட்டிவ் பெர்சனாகத் தொடர்ந்து பல சவால்கள் நமக்கு வேண்டும். எனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் வந்தமர்ந்த சிவப்பு நிற இறகுகளைக் கொண்ட ஒரு பறவை, `உங்களால் நெட்ஃபிளிக்ஸிலும் ஷோ பண்ண முடியும்’ என்று சொன்னது. 19 என்பது சிறந்த எண். அமெரிக்க அரசியல் சாசனத்தில் 19வது திருத்தம் என்பது பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது’’ என்று தனக்கே உரிய எள்ளலுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார் எலென் டிஜெனரஸ். நெட்ஃபிளிக்ஸுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதை சூசகமாவே இந்த அறிவிப்பின் வாயிலாக அவர் வெளியிட்டிருக்கிறார் என்பது ரசிகர்களின் வாதம்.

உங்கள் நினைவுகளுக்கு நன்றி எலென்!

Also Read – Trolls-ஐ விடுங்க… சன்னி லியோன் மறுபக்கம் உங்களுக்குத் தெரியுமா?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top