பிரசாந்த் கிஷோர் – தெரிந்துகொள்ள வேண்டிய 8 கேள்விகள், 8 பதில்கள்!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஐபேக்கில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வியூக வகுப்பாளராகச் செயல்படப்போவதில்லை என்றும், குடும்பத்துடன் நேரம் செலவிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேபோல், ஐபேக் நிறுவனத்தைத் தனது சகாக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

  1. யார் இந்த பிரசாந்த் கிஷோர்… அவரின் கல்வித் தகுதி என்ன?

பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் கோனார் கிராமத்தில் 1977ல் பிறந்தவர் பிரசாந்த் கிஷோர். மருத்துவரான அவரது தந்தை ஸ்ரீகாந்த் பாண்டே, பிரசாந்த் கிஷோரின் சிறுவயதிலேயே நகர்ப்பகுதியான பக்ஸாருக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்துவிட்டார். பீகாரின் பக்ஸாரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அவர், ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்தார்.

Prashant Kishor
Prashant Kishor
  1. மோடிக்காகப் பணியாற்றியிருக்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

2012-ல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய முதல்வர் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் வென்று மோடி மீண்டும் ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். 2013ம் ஆண்டு சி.ஏ.ஜி (Citizens for Accountable Governance) என்ற அமைப்பைத் தொடங்கி, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்காகப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடிக்காக பிரசார வியூகங்கள், சமூகவலைதளங்களில் பிரசாரம், 3டி பிரசாரம், உள்ளிட்டவைகளை முன்னெடுத்தார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களுக்கு மேல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி பிரசாந்த் கிஷோரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது.

  1. பா.ஜ.க-விலிருந்து பிரிந்தது ஏன்?

சி.ஏ.ஜியை அமெரிக்க தேர்தல் பிரசார வியூக அமைப்பான பொலிட்டிகல் ஆக்‌ஷன் கமிட்டி போல இந்தியன் பொலிட்டிகல் ஆக்‌ஷன் கமிட்டியாக 2014-க்குப் பிறகு மாற்றினார் பிரசாந்த் கிஷோர். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க-விலிருந்து பிரிந்து, மற்ற கட்சிகளுக்கும் தேர்தல் பணியாற்றத் தொடங்கினார்.

பா.ஜ.க-வில் இருந்து விலகி ஐ-பேக் உருவாக்கப்பட்ட பின்னர், 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காகப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் வென்று நிதிஷ்குமார் ஆட்சியமைத்தார். 2017 உத்தரப்பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றியது ஐ-பேக். ஆனால், அந்தத் தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களுக்கு மேல் வென்ற நிலையில், காங்கிரஸால் 7 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேநேரம், பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஐ-பேக் டீம் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், 2020 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலில் ஆம் ஆத்மிக்காகப் பணியாற்றியது பிரசாந்த் கிஷோர் டீம். இதில், மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

Also Read : நான்கு மாநிலத் தேர்தல்கள் சொன்ன 4 செய்திகள்!

  1. ஜெகன் மோகன் ரெட்டி வெற்றியில் பிரசாந்த் கிஷோரின் ரோல் என்ன?

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசகராக 2017-ல் நியமிக்கப்பட்டார். 2019 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சமர சங்கரவம்’,அண்ணா பிலுப்பு’, `பிரஜா சங்ல்ப யாத்ரா’ போன்ற பெயர்களில் ஐ-பேக் டீம் மேற்கொண்ட பிரசார உத்திகள் கைகொடுத்தன. அங்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 160 வென்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது.

  1. தி.மு.கவுடன் எப்போது கைகோர்த்தார் பிரசாந்த் கிஷோர்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தி.மு.க, கடந்த 2021 பிப்ரவரி 3-ல் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்ததாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் ஆலோசகர் ஒருவரை நியமித்துத் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க. இது அக்கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தி.மு.கவுக்காக ஒன்றிணைவோம் வா’,உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ உள்ளிட்ட பிரசாரங்களை முன்னெடுத்த பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம், ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி நடத்தியது.

Prashant Kishor
பிரசாந்த் கிஷோர்

`தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க வெற்றிபெறும். தனித்து நின்றாலே அந்த இடத்தைப் பிடிக்க முடியும்’ என்று தொடக்கம் முதலே பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார். ஆனால், இதை தி.மு.க தலைமை ஏற்கவில்லை. அதன்பிறகு, கூட்டணி அமைத்தாலும் கட்சிகளுக்கு பெரிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கக்கூடாது என தி.மு.கவுக்கு அட்வைஸ் செய்தது ஐ-பேக். மே 2-ல் வெளியான தேர்தல் முடிவுகளில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்கிறது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. ஆளும்கட்சியான அ.தி.மு.க, 65 இடங்களில் வென்ற நிலையில், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

  1. மம்தா வெற்றியில் பிரசாந்த் கிஷோரின் பங்கு என்ன?

தமிழகத்தில் தி.மு.க-வுக்காகப் பணியாற்றிய ஐ-பேக் டீம், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தல் பணியாற்றியது. பா.ஜ.க-வுக்கு எதிராக அம்மாநிலத்தில் தீவிரமாகக் களமாடிய முதல்வர் மம்தா பானர்ஜிக்காக `வீட்டுக்கே வரும் அரசு’,முதல்வரிடம் சொல்லுங்கள்’, `மேற்குவங்கத்தின் பெருமை மம்தா’ போன்ற பிரசாரங்களை ஐ-பேக் தீவிரமாக முன்னெடுத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என 3 மாதங்களில் பா.ஜ.க 38-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், பேரணி போன்றவற்றை மேற்குவங்கத்தில் நடத்தியது. அத்தனையும் மீறி மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 214 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க-வால் 76 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

  1. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்குக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

கடந்த 2020-ல் தி.மு.கவுக்காக பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே, அவருக்கு 220 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகப் பேச்சு எழுந்தது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அரசியல் கட்சியினர் சிலர், ஐ-பேக்குக்கு தி.மு.க தரப்பில் இருந்து ரூ.350 கோடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

  1. ஐ-பேக் சென்னை அலுவலகம் எங்கிருக்கிறது?

ஐபேக் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி அலுவலகதின் 11-வது மாடியில் அலுவலகத்தை அமைத்திருந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் சராசரி வயது 23-26. இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 பேர் கொண்ட அணி, 5,000 தன்னார்வலர்கள் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஐ-பேக் தமிழகத்தில் பணியாற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடந்து சென்னை அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு அடுத்த மாநிலத்துக்கு ஐ-பேக் டீம் பயணிக்கும் என்று தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top