அருமனையில் நடந்த போராட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது 7 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் பொன்னையா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பூட்டப்படுவது, பட்டா நிலங்களில் ஆலயங்கள் கட்ட அனுமதி மறுப்பது, ஸ்டேன் சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டு மத்திய பா.ஜ.க அரசு, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அருமனை கிறிஸ்தவ இயக்கம், அனைத்து கிறிஸ்தவ ஜனநாயகப் பேரவை, அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொண்ட போராட்டம் பனங்கரையில் ஆர்ப்பாட்டம் கடந்த 18-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட பனவிளை பங்குத் தந்தை ஜார்ஜ் பொன்னையா பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
தி.மு.க-வின் வெற்றி சிறுபான்மை சமூகத்தினர் போட்ட பிச்சை என்று பேசிய அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல், நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி சாதியைக் கூறி ஓட்டு கேட்டதாகவும், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், தி.மு.க-வைச் சேர்ந்த சுரேஷ் ராஜன், பிரின்ஸ் உள்ளிட்டோர் குறித்து அவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
புகார் – வழக்கு
இதையடுத்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் பா.ஜ.க, இந்து அமைப்பினர் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து அவர் மீது 7 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தசூழலில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். அதில், “அந்த கூட்டத்தில் நான் பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அதிலே, எனது வார்த்தைகள் இந்து சகோதரர்களுடைய உணர்வை புண்படுத்தியதாகவும், நான் அவர்களுடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாகவும் என்னுடைய உரையைத் திரித்து பலர் கூறியிருக்கிறார்கள்.
ஆகவே, இந்த வீடியோ வழியாக நானோ, என்னோடு மேடையில் பேசியவர்களோ எந்த மத உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை. ஒருவேளை என்னுடைய அல்லது பலருடைய பேச்சுகள் அவ்வாறு என்னுடைய இந்து சகோதர, சகோதரிகளுடைய உணர்வுகளை புண்படுத்தினால் என்னுடைய சார்பாகவும் அந்தக் கூட்டத்தின் சார்பாகவும் மனம் நிறைந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டோம் என்பதையும் நான் நேசிக்கிற இந்து சகோதர, சகோதரிகளிடம் இதன்மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பேசியிருக்கிறார்.