இந்திய வரலாற்றில் கார்கில் போருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இந்தப் போர் நடைபெற்றது. கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. கார்கிலில் நிகழ்த்தப்பட்ட இந்தப் போர் திட்டத்துக்கு `ஆபரேஷன் விஜய்’ என பெயரிடப்பட்டது. இந்திய ராணுவ வீரர்கள் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக்கொடி நாட்டினர். மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் 26-ம் தேதி முடிவுக்கு வந்த இந்நாள் `விஜய் திவஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரில் இந்தியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர்தான் யோகேந்திர சிங் யாதவ்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர், யோகேந்திர சிங் யாதவ். கார்கில் போரில் யோகேந்திர சிங் தனியாளாக நின்று சுமார் 17 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றார். பாலிவுட்டில் கார்கில் போரை மையமாக வைத்து 2003-ம் ஆண்டு வெளியான `எல்.ஓ.சி: கார்கில்’ திரைப்படத்தில் யோகேந்திர சிங்கின் கதாபாத்திரத்தில் அஷுதோஷ் ராணா நடித்திருந்தார். “நான் நன்றாக இருக்கிறேன். கார்கில் பகுதியில் சண்டை தொடங்கிவிட்டது. நான் மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் தைரியமாக இருங்கள். இதில் பயப்பட ஒன்றுமே இல்லை. வீரர்கள் குழு அனைவரும் என்னுடன் உள்ளனர். எதிரிகளைக் கொன்ற பின்னர் நான் திரும்பி வருவேன்” – கார்கிலுக்கு செல்வதற்கு முன்பு யோகேந்திர சிங் யாதவ் கடைசியாக தன்னுடைய குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் இவை. இந்தக் கடிதம் அவரின் வீட்டுக்கு வந்த சில நாள்களுக்குப் பிறகு அவர் வீரமரணமடைந்த செய்தியும் வந்துள்ளது.
யோகேந்திர சிங் யாதவின் துணிச்சலுக்காகவும் தைரியத்துக்காகவும் அவருக்கு சேனா பதக்கம் வழங்கப்பட்டது. நாட்டுக்காக யோகேந்திர சிங் தனது உயிரைத் தியாகம் செய்த போது அவருடைய மனைவிக்கு 28 வயதுதான். அவருடைய குழந்தைகள் மிகவும் சிறிய வயதில் இருந்துள்ளனர். 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் யோகேந்திர சிங்குக்கு ஜம்முவில் பணி மாற்றம் செய்யப்பட்டது. கார்கிலில் சண்டை வெடித்தபோது அவர் தனது பட்டாலியனுடன் கார்கிலை அடைய உத்தரவிடப்பட்டது. தனது பட்டாலியனுடன் அவர் டைகர் மலைக்கு புறப்பட்டார். எதிரிகள் பதுங்கி இருந்த பதுங்கு குழிகளை அழித்து சுமார் 17 வீரர்களைக் கொன்றார். இந்த சண்டையின் போது 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி மாலை வேளையில் எதிரிகளால் சுடப்பட்டார். தன்னுடைய சிறிய வயதில் இருந்தே யோகேந்திர சிங்குக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. முதலில் அவர் தோல்வியடைந்தபோது மீண்டும் முயற்சித்து ராணுவத்தில் இணைந்தார்.
“நீங்கள் ஒரு வேலையை செய்தால் அதை ராணுவத்துக்காக செய்யுங்கள்” என யோகேந்திர சிங் சொல்வாராம். தனது தன்பி மகிபால் சிங்கையும் ராணுவத்தில் சேர இவர் ஊக்கப்படுத்தினார். யோகேந்திர சிங்கின் மொத்த குடும்பமும் அவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என மகிபால் சிங்கிடம் கேட்டுக்கொண்டது. அவர் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். யோகேந்திர சிங் யாதவின் மனைவி ஊர்மிளா தேவி, “யோகேந்திர சிங் இறந்தபோது குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்தனர். போரின் போது அவர் தனது கடைசி கடிதத்தை அனுப்பினார். பயப்பட வேண்டாம். எதிரிகளைக் கொன்ற பின்னர் திரும்பி வருவேன் என்று கூறினார். ஆனால், அவர் வரவேயில்லை. அவருடைய குண்டுகள் துளைக்கப்பட்ட உடல் மட்டுமே திரும்பி வந்தது” என்று தெரிவித்தார்.
Also Read : `மருதநாயகம்’ பூஜை.. இங்கிலாந்து ராணி முன்பு கமல் செய்த தரமான சம்பவம்!