உலகின் மிகவும் வலிமையான தலைவர்களில் ஒருவரான ஜி ஜின்பிங் ஜூன் மாதம் 15-ம் தேதி 1953-ல் பிறந்தார். இவரது தந்தை ஜி ஜாங்ஷன், மா சேதுங் உடன் புரட்சியாளராக இருந்தவர். சீனாவின் துணைப் பிரதமராகவும் இருந்தார். அரசாங்கத்துடன் இவர் பல விஷயங்களில் முரண்பட்டதாகவும் கலாசார புரட்சியின் போது துன்புறுத்தல்களையும் சிறைச்சாலை வாழ்க்கையையும் இவர் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. கம்யூனிச பின்புலம் இருப்பதால் இயல்பாகவே இளம் வயது முதலே கம்யூனிச கொள்கைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 2013-ம் ஆண்டு சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே…
*ஜி ஜின்பிங்கும் ஒரு இன்ஜினீயர்தான். பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். இதனையடுத்து சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரும் படிப்புக்கு ஏற்ற வேலையை செய்யவில்லை.
* ஜி ஜின்பிங், தன்னுடைய இளம் வயதில் விவசாய தொழிலாளியாக வேலை பார்த்தார். தன்னுடைய இளமை காலத்தை பெரும்பாலும் கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலுமே கழித்தார். இதன்வழியாக விவசாயிகளுடனான உறவை பலப்படுத்திக்கொண்டார். சுமார் 7 ஆண்டுகள் அவர் குகையில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
* ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் உண்டு.
* மாவோவை ரோல் மாடலாகக் கொண்ட ஜின்பிங்கின் அரசு சீனாவில் உள்ள பள்ளிகளில் கம்யூனிச சிந்தனை உள்ள பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இது அவரது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
* ராணுவத்தின் மீது அதிக கவனம் செலுத்தக் கூடியவராக ஜி ஜின்பிங் திகழ்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஒத்திகைப் போர்களை நடத்த ஜின்பிங் உத்தரவிட்டார். இதன்படி, செஞ்சீனப்படை மற்றும் நீலப்படை என இரு பிரிவாக சீன ராணுவம் பிரிக்கப்பட்டது. நீலப்படை என்பது அமெரிக்க பாணியில் போரிடும் வீரர்களின் பிரிவு. செஞ்சீனப்படை என்பது சீன பாணியில் போரிடும் வீரர்களின் பிரிவு. நவீன ஆயுதங்களுடன் ஒத்திகைப் போரில் ஈடுபட்ட இருபிரிவுகளிலும் அதிக முறை அமெரிக்க பாணியில் போரிடும் நீலப்படையே வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, சீன ராணுவத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்த ஒத்திகைப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகமான முரண்பாடுகள் இருந்து வந்தாலும் அமெரிக்க நாட்டின் மீது குறிப்பிட்ட பாசம் ஜி ஜின்பிங்குக்கு இருக்கிறதாம். அமெரிக்காவில் உள்ள ஐயோவா பகுதி ஜி ஜின்பிங்கின் ஃபேவரைட் பகுதியாகும். அந்தப் பகுதிக்கு தன்னுடைய இளம் வயதில் பயணம் செய்துள்ள அவர் அங்கு விவசாயம் தொடர்பாக கற்றவற்றை சீனாவுக்கு திரும்பிய பின்னர் நடைமுறைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
* இரண்டு முறைகளுக்கு மேல் சீனாவின் அதிபராக முடியாது என்ற சட்டத்தில் திருத்தத்தை கடந்த 2017-ம் ஆண்டு கூடிய கட்சியின் தேசிய மாநாட்டில் கொண்டு வந்தார், ஜி ஜின்பிங். இதுவும் உலக அளவில் பரவலாக விமர்சனத்தைப் பெற்றது.
* ஜி ஜின்பிங்கின் மனைவி பெங் லியுவான் சீனாவில் மிகவும் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர். ஜி ஜின்பிங்கிற்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் இவர் பிரபலமாகத் திகழ்ந்தார்.
* சீன அதிபருக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் கால்பந்தும் ஒன்று. அவர் அதிபரான பிறகு சீனாவில் உள்ள பள்ளிகளில் கால்பந்து விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டது. கூடைப்பந்தாட்டமும் இவரது ஃபேவரைட் விளையாட்டுகளில் ஒன்று.
* ஹோங்கி என்ற லக்ஸரி காரைத்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தி வருகிறார். சீனாவின் மிகவும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் விலை சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள். ஜி ஜின்பிங் குடும்பத்துக்கு பலவகையான தொழில்கள் மற்றும் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. எனினும், இவை எதுவும் தவறான வழியில் சேர்க்காதவை எனவும் தவறான வகையில் பணம் சேர்ப்பதை ஜின்பிங் விரும்பாதவர் என்கிறார்கள்.
* ஜி ஜின்பிங்கிற்கு வேகவைத்த பன்கள் ஃபேவரைட் உணவாம். அவர் கடைகளில் பன் வாங்குவதைக்கூட சீன ஊடகங்கள் பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பிய வரலாறும் உண்டு. சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் `ஸ்டீம்ட் பன் ஜி’ என்று அவரை அழைத்ததால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதாகக்கூட தகவல்கள் வெளிவந்துள்ளன.
Also Read : நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்! – தமிழ் சினிமா பற்றிய சில சர்ப்ரைஸ் தகவல்கள்