KR Gowri Amma

ட்விட்டரே அதிர்கிறது… மாநிலமே கலங்குகிறது! – யார் இந்த கே.ஆர்.கௌரி அம்மா?

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும் ஜனாதிபதிய சம்ரக்சனா சமிதியின் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தில் கம்யூனிஸ் கட்சி மிகப்பெரிய அளவில் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவருமான கே.ஆர்.கௌரி அம்மா உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய 102 வது வயதில் இன்று காலமானார்.

யார் இந்த கௌரி அம்மா?!

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் 1919-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பட்டணக்காடு எனும் கடலோரக் கிராமத்தில் ரமணன் மற்றும் பார்வதி தம்பதிக்கு மகளாக கௌரி அம்மா பிறந்தார். இளம் வயதிலேயே அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த இவர் 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். கேரள அரசியல் வரலாற்றில் சக்திவாய்ந்த பெண் தலைவர்களில் கௌரி அம்மா மிகவும் முக்கியம் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். கேரளாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களில் தற்போது வரை உயிரோடு இருந்தவர், கௌரி அம்மாதான்.

கே.ஆர்.கௌரி அம்மா
கே.ஆர்.கௌரி அம்மா

கௌரி அம்மாவின் தேர்தல் வெற்றிகள்:

கேரளா என்ற மாநிலம் உருவாவதற்கு முன்பும் பின்பும் நடந்த 13 தேர்தல்களில் போட்டியிட்டு கௌரி அம்மா வெற்றி பெற்றார். 1957, 1967, 1980 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையான கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் 1980 களில் இ.கே.நாயனார் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது நிலச்சீர்த்திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்து பரவலாகக் கவனம் பெற்றார். இந்த சட்டம், நிலமற்ற விவசாயிகள் பலரும் தங்களுக்கென நிலங்களைச் சொந்தமாக்க வழிவகுத்தது. இரண்டாவது முறையாக நாயனார் அமைச்சரவையில் சமூக நலன், விழிப்புணர்வு மற்றும் நீதி நிர்வாக அமைச்சராக இருந்தார். நீண்ட காலம் அமைச்சராக இருந்த பெண் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றம்:

கட்சியில் தைரியமான மற்றும் வலுவான தலைவராக பார்க்கப்பட்ட கௌரி அம்மா, கட்சியின் பெரும்பான்மைக்கு எதிராகவும் தனக்கு சரி என்று கொள்கை பிடிப்புடன் முடிவுகள் எடுக்கக்கூடியவர். அவரது அரசியல் வாழ்க்கையின் உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம். இதனால், கட்சி விரோத நடவடிக்கைகளின் காரணமாக 1994-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர், சில காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்த அவர், பின்னாட்களில் ஜனாதிபதிய சம்ரக்சனா சமிதி என்ற கட்சியைத் தொடங்கினார்.

கே.ஆர்.கௌரி அம்மா
கே.ஆர்.கௌரி அம்மா

ஜே.எஸ்.எஸ் கட்சி விரைவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தலில் வெற்றி பெற்று உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் 2004 முதல் 2006 வரை வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளைக் கையாண்டார். பின்னர், இந்தக் கூட்டணியில் இருந்தும் விலகினார். 2016-ம் ஆண்டு மீண்டும் இடது சாரி கட்சியுடன் அவரது கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது.

Also Read : யார் இந்த சபரீசன்… தி.மு.க-வின் Master Mind ஆனது எப்படி? #Explainer

திருமண வாழ்க்கை:

1957-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது அதே அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த டி.வி தாமஸ் என்வரை திருமணம் செய்துகொண்டார். 1964-ல் கருத்து வேறுபாடுகளின் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தபோது டி.வி.தாமஸ் சிபிஐ கட்சியில் தொடர்ந்தார். ஆனால், கௌரி அம்மா கொள்கை பிடிப்புகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதுமட்டுமல்ல தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாத்திகவாதியாகவே இருந்தார். மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

தலைவர்கள் இரங்கல் :

வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கௌரி அம்மாவை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா ஆகியோர் சில நாள்களுக்கு முன்பு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போது அவரது மறைவு பற்றி முதல்வர் பினராயி விஜயன், “காம்ரேட் கே.ஆர்.கௌரி துணிச்சலான போராளி. சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் சுரண்டலை முடிவுக்கு கொண்டு வரவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கு முக்கிய பங்காற்றினார். முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி எடுப்பதன் மூலம் அவருக்கு நமது மரியாதையை செலுத்துவோம்” என்று கூறியிருந்தார். ஆளுநர் முகமது ஆரிஃப்கான், எதிர்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top