கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள கிராமம் ஒன்று கொரோனா வைரஸ் தொற்றுகளால் பாதிப்படைந்தவர்கள் யாரும் இல்லாமல் தனித்துவத்தைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், பலரது கவனமும் அந்த கிராமத்தின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் எடமலாக்குடி (Edamalakkudy) என்ற கிராமத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரஸால் பாதிப்படையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுயமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு, வெளிநாட்டினர் நுழைவதற்கு எதிரான சமூக விழிப்புணர்வு முடிவுகள், அம்மக்களின் வாழ்க்கை முறை, தங்கள் கிராமங்களில் தயார் செய்யப்படும் பொருட்களையே உபயோகிப்பது. அங்கு நிலவும் காலநிலை ஆகியவை இதற்கு காரணங்களாகக் கருதப்படுகின்றன.
மூணாரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 106 சதுர கி.மீ வன நிலங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கென சரியாக சாலை இணைப்புகள் கூட கிடையாது. இந்த கிராமத்தில் மொத்தம் 750 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 நபர்கள் வசித்து வருகின்றனர். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தைத் தவிர இங்கு உள்ளூர் மக்களால் நடத்தப்படும் நிர்வாகமும் அமலில் இருந்து வருகிறது. இதனை `ஊர்க்கூட்டம்’ என்று மக்கள் அழைத்து வருகின்றனர்.
எடமலாக்குடி பஞ்சாயத்தின் இயக்குநர் பி.கே.ஜெயஸ்ரீ பத்திரிக்கைகளிடம் தெரிவித்த தகவலின்படி, எடமலாக்குடி கிராமத்தில் மட்டும்தான் இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படையவில்லை. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே `ஊர்க்கூட்டம்’ மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து ஆகியவை ஊரடங்கை அமல்படுத்தின. அக்கிராமத்தைத் தவிர்த்து பிற ஆள்கள் உள்ளூருக்குள் நுழைவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்துக்காக ஊரை விட்டு வெளியே செல்லும் கிராமத்தினர் திரும்பிய பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
அப்பஞ்சாயத்தின் செயலாளர் வர்க்கீஸ் கூறுகையில், “`பஞ்சாயத்து நிர்வாகமானது மக்களுக்கு தேவையான முகக்கவசங்களையும் சானி்டைசர்களையும் வழங்கி, அதை முறையாகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை கிரிஜன் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். அவர்களும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை நிர்வாகத்தினர் உறுதி செய்கின்றனர்” என்றார்.
மேலும், “உள்ளூர் மக்கள் இங்கேயே விளைவிக்கப்படும் சைவ உணவுகளை உண்டு வருகின்றனர். இதனால், மக்கள் ஆரோக்கியமாக இருந்து வருகின்றனர். இது மாசு இல்லாத வனப்பகுதி என்பதால் மக்கள் சுத்தமான காற்றை சுவாசித்து வருகின்றனர். இவை இக்கிராமம் வைரஸ் தொற்றால் பாதிப்படையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சுகாதார அதிகாரிகள் அப்பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிபோட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ஊருக்கூட்டம் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பஞ்சாயத்து மருத்துவத் திட்டம் ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Also Read : கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசிகளைத் தவிர்க்காதீர்.. தடுக்காதீர்!