`1962 – 1990; 9 தேர்தல்கள்’ – நடிகர் சிவாஜி கணேசன் அரசியல் பயணம் எப்படியிருந்தது?

நடிகர் திலகமாக திரைவானில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த சிவாஜி கணேசன், அரசியலில் கோலோச்ச முடியவில்லை. திராவிட இயக்கம் தொடங்கி ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் வரையிலான அவரது அரசியல் பயணத்தில் என்ன நடந்தது?

  • `சக்ஸஸ்…. சக்ஸஸ்’ என்ற வசனம் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய சிவாஜி, அரசியலில் சக்ஸஸ் ஆனாரா?
  • கடவுள் மறுப்புக் கொள்கையுடன் இருந்த திராவிட இயக்கத்தோடு பயணித்த சிவாஜி கணேசன், திடீரென திருப்பதிக்குப் போனது ஏன்… திருப்பதி பயணம் சிவாஜி கணேசன் வாழ்வில் ஏற்படுத்திய முக்கியமான திருப்புமுனை என்ன?
  • எம்.ஜி.ஆரோடு அரசியலில் முரண்பட்டிருந்த சிவாஜி, அவருக்காகவே வாக்குக் கேட்ட சம்பவம் தெரியுமா?
  • 1989 தேர்தலோடு சிவாஜி, தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு மூடுவிழா நடத்தியது ஏன்?
  • அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த சிவாஜியை, ஜனதா கட்சியில் சேர்த்த நெருங்கிய நண்பர் யார்? இப்படி சிவாஜி கணேசன் அரசியல் வாழ்வின் முக்கியமான சம்பவங்களை இந்தக் கட்டுரை வழியா தெரிஞ்சுக்கலாம்.

சிவாஜி கணேசன் – திராவிட இயக்கப் பயணம்

அறிஞர் அண்ணாவுடன் சிவாஜி
அறிஞர் அண்ணாவுடன் சிவாஜி

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு முன்பே அரசியலில் இணைந்துவிட்டார். நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை’ என்று தனது சுயசரிதைப் புத்தகத்தில் சிவாஜி குறிப்பிட்டிருப்பார்.பராசக்தி’ படம் வெளியான 1952-ம் ஆண்டு முதல் 1955-ம் ஆண்டு வரை திராவிட இயக்கத்தின் மிகப்பிரபலமான திரை முகமாக சிவாஜியே இருந்தார் என்பதுதான் நிதர்சனம். 1955-ம் ஆண்டு தமிழகத்தை மிகப்பெரிய புயல் தாக்கியது. புயல் நிவாரண நிதிக்கு பெருமளவில் நிதி திரட்டித் தாருங்கள் என தம்பிகளுக்கு அன்புக் கட்டளையிட்டார் அண்ணா.

அப்படி தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பயணித்து சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் நிதி திரட்டினர். அதிகமான நிதி திரட்டிக் கொடுப்பவர், அண்ணா தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கௌரவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அதிகமான நிதியைத் திரட்டிக் கொடுத்தவர் சிவாஜி கணேசன். புயல் நிவாரண நிதி திரட்டிக் கொடுத்துவிட்டு, சேலத்தில் நடந்த ஷூட்டிங்குக்குச் சென்றுவிட்டார் சிவாஜி. பொதுக்கூட்டம் நடக்கும் நாளும் வந்தது. பொதுக்கூட்ட நாளில் சென்னையில் இருக்க வேண்டும் என்றெண்ணி வீடு திரும்பியிருக்கிறார் சிவாஜி. பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு வரும் என்று வீட்டில் காத்திருந்தவரை அழைக்க யாருமே வரவில்லை. மாலை ஆறு மணியளவில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆரை மேடையேற்றி கௌரவித்திருக்கிறார்கள். இதனால், மனமுடைந்த சிவாஜி பல நாட்கள் வருத்தத்தில் இருந்தார். இந்தத் தகவலை சிவாஜியே, தனது சுய சரிதையில் பகிர்ந்திருக்கிறார்.

அப்போது அவர் வீட்டுக்கு வந்த இயக்குநர் பீம்சிங், சிவாஜியை திருப்பதிக்குப் போய்வரலாம் என்று அழைத்திருக்கிறார். ஆனால், தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிட இயக்கத்தோடு பயணித்து வந்த அவர் மறுத்திருக்கிறார். ஆனால், பீம் சிங் அவரைக் கட்டாயப்படுத்தி திருப்பதி அழைத்துச் செல்கிறார். கடுமையான மழைக்கிடையே திருப்பதி சென்று திரும்பிய அவரை, திருப்பதி கணேசா கோவிந்தா’,திருப்பதி போன கணேசா திரும்பிப் போ’ என்ற போஸ்டர்கள் வரவேற்றிருக்கின்றன. அதேபோல், அவரின் கார் மீது கல்லெறி நடந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.

காமராசருடன் ஐக்கியம்

காமராசர், இந்திரா காந்தியுடன் சிவாஜி கணேசன்
காமராசர், இந்திரா காந்தியுடன் சிவாஜி கணேசன்

இந்த சூழலில், காமராசர் தலைமையை ஏற்றுக்கொண்டு 1961-ல் காங்கிரஸில் சேர்ந்தார் சிவாஜி. இதனால், அண்ணாவுக்கு வருத்தமே என்றாலும், `எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லி கடந்துபோய்விட்டார். 1962 தேர்தலில் காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளராகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், சிவாஜி தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில் தி.மு.க அதிகப்படியான இடங்களைப் பிடித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டது. காமராசரைத் தனது வழிகாட்டி என்று குறிப்பிட்டு அவரின் எளிமையைப் பாராட்டியபடியே காங்கிரஸில் தொடர்ந்தார். நேரு மீதும் காமராசர் மீதும் சிவாஜி அளவில்லா அன்பு கொண்டிருந்தார். 1964-ல் நேரு மறைந்தபோதும் தனது தலைவனுடனேயே பயணித்தார். 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து, தி.மு.க முதல்முறையாக அரியணை ஏறியது. அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தத் தோல்விக்குப் பிறகும் தடம் மாறாமல் காங்கிரஸிலேயே தொடர்ந்தார். இதன்பின்னர், 1969-ல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டபோதும், கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமல், பவர் அதிகம் கொண்ட இந்திரா காங்கிரஸ் பக்கம் சாயாமல் காமராசருடன் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்தார். 1971 தேர்தலில் முந்தைய தேர்தலை விட மோசமான தோல்வியைச் சந்தித்தது காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ். இந்தத் தோல்வியும் சிவாஜியை அசைத்துப் பார்க்கவில்லை.

1971-ல் நடிகை நர்கீஸ் மறைவை அடுத்து, அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி பதவி காலியானது. அந்தப் பதவியில் சிவாஜியை அமர்த்தி அழகுபார்த்தார் இந்திரா காந்தி. தனது அரசியல் பயணத்தில் சிவாஜி வகித்த ஒரே பதவி இதுவே. அதேபோல், 1971 தேர்தல் இன்னொரு வகையிலும் வரலாறு பதிவு செய்துகொண்டது. திரையுலகின் இரண்டு துருவ நட்சத்திரங்களாக இருந்த சிவாஜியும் எம்.ஜி.ஆரும் தேர்தல் மேடைகளில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். என் அளவுக்கு உன்னால் நடிக்க முடியுமா?’ என்று கேட்ட சிவாஜிக்கு,என் பட வசூலை உன் படங்களால் முறியடிக்க முடியுமா?’ என்று கூறி எம்.ஜி.ஆர் பதிலடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பு தலைவர்கள் தலையிட்டதால், இந்த மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால், தி.மு.கவும் காங்கிரஸும் எம்.ஜி.ஆர் – சிவாஜி கட்சிகள் என்றே அப்போது கிராமங்களில் அடையாளம் காணப்பட்டன.

சிவாஜி - எம்.ஜி.ஆர்
சிவாஜி – எம்.ஜி.ஆர்

1973 புதுவை தேர்தலில் காமராசரும் இந்திரா காந்தியும் தேர்தல் கூட்டணி வைத்த நிலையில், `கங்கையும் காவிரியும் சங்கமித்து விட்டன’ என்று கொண்டாடினார் சிவாஜி. பிரிந்து கிடந்த இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தீவிரம் காட்டியவர்களில் சிவாஜி முக்கியமானவர். 1975-ல் காமராசரின் மறைவு சிவாஜிக்குத் தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பாக இருந்தது. அப்போதைய சூழலில் காமராசர் தோற்றுவித்த ஸ்தாபன காங்கிரஸ் கட்சி முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று இந்திரா தலைமையிலான இந்திரா காங்கிரஸில் இணைவது அல்லது அப்போது புதிதாக முளைத்திருந்த ஜனதா கட்சியோடு இணைந்துகொள்வது… ஆனால், பெரும்பாலான தலைவர்கள் இந்திரா காந்தியின் கட்சியோடு இணையவே விரும்பினார்கள். இதனால், காங்கிரஸ் கட்சி பழையபடி ஒன்றானது. சிவாஜியும் இந்திராவின் தலைமையை ஏற்றுக்கொண்டார். காமராசருக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பு சிவாஜிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதேநேரம், இந்திராவும் தமிழ்நாடு காங்கிரஸில் சிவாஜிக்குப் போதிய முக்கியத்துவத்தைக் கொடுத்தார். தேசிய அளவிலான தலைவர்களோடு சிவாஜி நட்புடன் இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இவரது கோஷ்டிக்கும் மூப்பனார் கோஷ்டிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். சீட் ஒதுக்கப்படும்போது இரண்டு கோஷ்டிகளுக்கும் தனித்தனியாக ஒதுக்கப்படுவதும் நடந்தது.

எம்.ஜி.ஆருக்காக வாக்குக் கேட்ட சிவாஜி!

பராசக்தி படத்தின் நீதிமன்றக் காட்சியில் தனது வாதத்தை சிவாஜி, `இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது’ என்ற வசனத்தோடு தொடங்குவார். அப்படியான விசித்திரமான சம்பவங்களும் சிவாஜியின் அரசியல் பயணத்தில் அரங்கேறியிருக்கின்றன. கருத்து வேறுபாட்டால் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறிய சிவாஜி, பின்னாட்களில் எம்.ஜி.ஆருக்கே வாக்கு கேட்ட சம்பவமும் நடந்தது.

சிவாஜி - எம்.ஜி.ஆர்
சிவாஜி – எம்.ஜி.ஆர்

தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக இந்திரா காங்கிரஸோடு கைகோர்த்து களமிறங்கினார். அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த சிவாஜி, அரசியல் களத்தில் எல்லாமே சாத்தியம்தான் என்பதை உணர்ந்து, எம்.ஜி.ஆருக்காக வாக்குக் கேட்டார். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம்கண்டு எம்.ஜி.ஆர் முதல்முறையாகத் தமிழகத்தின் முதலமைச்சரானார். 1984-ல் இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ், அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் சிவாஜி போட்டியிடவில்லை. ஆனால், தனது ரசிகர் மன்றத்தினருக்கென 5 மக்களவைத் தொகுதிகளையும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சிவாஜி கேட்டு வாங்கினார். அந்தத் தொகுதிகள் அனைத்திலும் 100% வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்தது.

சிவாஜி கணேசன் – புதிய கட்சி – தமிழக முன்னேற்ற முன்னணி

1987 இறுதியில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வில் கடுமையான உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. அப்போது, ஜானகி தலைமையிலான அணியை சிவாஜி ஆதரித்தார். அப்போது, அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோரின் ஆதரவோடு ஜானகி முதலமைச்சரானார். ஆனால், 1988-ல் அரசியல் சாசனத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி ஜானகி தலைமையிலான தமிழக அரசை டிஸ்மிஸ் செய்து துரோகம் இழைத்தது காங்கிரஸ் கட்சி. இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய சிவாஜி, காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1988 பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கினார்.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி – எம்.ஜி.ஆர்

1989 தேர்தலில் அ.தி.மு.க – ஜா அணியோடு கூட்டணி வைத்து சிவாஜியின் கட்சி தேர்தலைச் சந்தித்தது. தமிழக முன்னேற்ற முன்னணி 50 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார் சிவாஜி. தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலும் கடைசியுமாக சிவாஜி போட்டியிட்டது அந்தத் தேர்தலில்தான். அவரை எதிர்த்து துரை.சந்திரசேகர் எனும் இளைஞரைக் களமிறக்கியது தி.மு.க. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட 50 இடங்களில் 49 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது தமிழக முன்னேற்ற முன்னனி. திருவையாறில் டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொண்ட சிவாஜி, தி.மு.க வேட்பாளரிடம் சுமார் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திருவையாறு தொகுதி தி.மு.க வேட்பாளர் துரை.சந்திரசேகர்தான்.

ஜனதா கட்சியும் அரசியலில் இருந்து விலகலும்

தேர்தலுக்குப் பிறகு தனது கட்சியைக் கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்க நினைத்தார் சிவாஜி. ஆனால், காலம் வேறொன்றை முடிவு செய்திருந்தது. அப்போது, தேசிய அளவில் ராஜீவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் தோற்றுவித்த ஜனதா தளம் கட்சியைக் கட்டமைத்திருந்தார். கட்சியின் முகமாக ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான ஒருவரைக் கொண்டுவர வேண்டும் என வி.பி.சிங் திட்டமிட்டார். தமிழ்நாட்டின் ஜனதா தளம் கட்சியின் முகமாக சிவாஜி இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக, அவரிடம் தொடர்புகொண்டு பேசினார். ஆனால், அரசியலில் தனது கடந்த கால அனுபவங்களை எல்லாம் விளக்கிச் சொன்ன சிவாஜி, மென்மையாக அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார். ஆனால், சிவாஜியின் நெருங்கிய நண்பரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் வி.பி.சிங் சிவாஜியை சம்மதிக்க வைத்தார். ஜனதா தளம் கட்சியின் தமிழகத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். ஆனால், அதன்பிறகு நடந்த தேர்தலில் தி.மு.க-வோடு கரம்கோர்த்து ஜனதா தளம் களம்கண்டது. அந்தத் தேர்தலில் சிவாஜியும் கருணாநிதியும் ஒரே மேடையில் கலந்துகொண்டு பிரசாரம் செய்தனர். ஆனால், அந்தத் தேர்தலில் ஜனதா தளம் – தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியே சிவாஜி அரசியலை விட்டே முழுமையாக ஒதுங்கக் காரணமாகிவிட்டது. அதன்பிறகு சிவாஜி நேரடி அரசியலில் ஈடுபடவே இல்லை.

1962 தொடங்கி 1990 வரையிலான காலகட்டத்தில் 9 தேர்தல்களில் சிவாஜி நேரடியாகப் பங்கேற்றார். இதில், 4 தேர்தல்களில் அவர் வெற்றிபெற்ற முகாமில் இருந்தாலும், மிகப்பெரிய அளவில் அவரால் தேர்தல் களத்தில் வெற்றியை ருசிக்க முடியாமலேயே போனது.

Also Read – தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டங்கள்… எப்போதெல்லாம் கூட்டப்பட்டிருக்கின்றன? #Rewind

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top