சிவாஜி கணேசன்

சிவாஜி இறந்தபோது என்ன நடந்தது? #RememberingSivajiGanesan

நடிகர் திலகம் என தமிழ்த் திரையுலகம் கொண்டாடிய `சிவாஜி’ கணேசன், நடிப்புக்குப் புது இலக்கணம் படைத்தவர். சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி சிவாஜி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 2001ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி அவர் மறைந்தார். அவரது மறைவுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சிவாஜி

விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட அவர், நடிகராகும் முன்பே மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் நடித்த அவரது நடிப்பைப் பார்த்து பிரமித்த பெரியார், அவருக்கு சிவாஜி என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார். அதன்பிறகு, சிவாஜி கணேசன் ஆனார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டபொம்மன் தொடங்கி வ.உ.சி, கொடிகாத்த குமரன் என பல வேடங்களில் நடித்து அவர்களை ரசிகர்கள் கண்முன் நிறுத்தியவர் சிவாஜி. 300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், இரண்டு இந்திப் படங்கள், ஒரு மலையாளப் படம், 2 கன்னடப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். 1955ம் ஆண்டு வரை திராவிட இயக்கங்களில் பயணித்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 1982-ல் அக்கட்சியின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார். திரையுலகில் சிவாஜிக்குக் கிடைத்த வரவேற்பு, அரசியலில் கிட்டவில்லை.

Sivaji Ganesan

பத்மஸ்ரீ (1966), பத்ம பூஷன் (1984), செவாலியே விருது (1995), தாதா சாகேப் பால்கே விருது (1996) உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர். சிவாஜி, 1962-ல் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு முக்கியமான ஒரு கௌரவத்தை நயகாராவில் அளித்தனர். அந்நகரின் ஒருநாள் மேயராக அவரை அறிவித்து, கௌரவப்படுத்தினர்.

உடல்நலக் குறைவு

1996-ம் ஆண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் ஒரு யாத்ரா மொழி மலையாள படத்தில் சிவாஜி நடித்தார். மோகன்லாலுடன் அவர் நடித்த இந்தப் படம்தான் அவர் நடித்த ஒரே மலையாளப் படம். ஷூட்டிங்கின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதய ஆபரேஷன் செய்யப்பட்ட அவருக்கு அப்போது பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் வழக்கமான பணிகளில் சிவாஜி ஈடுபட்டு வந்தார்.

2001 ஜூலை 12-ல் சிவாஜிக்கு திடீரென சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படவே, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருடன் மனைவி கமலா அம்மாள், மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இளையமகனும் நடிகருமான பிரபு சுவிட்சர்லாந்தில் நடந்த ஷூட்டிங்கில் இருந்தார். அவருக்கு உடல்நலக் குறைவு என்ற தகவல் கேள்விப்பட்டதுடன் பிரபு அவசரமாக நாடு திரும்பினார்.

Sivaji Ganesan

ஜூலை 21-ம் தேதி சிவாஜியின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் எடுத்த தீவிர முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் அன்றைய தினம் இரவு 8.10 மணிக்கு உயிர் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிவாஜி உடலைப் பார்த்து கருணாநிதி கதறி அழுதார். அவரை விஜயகாந்தும் சரத்குமாரும் தாங்கிப் பிடித்தனர். ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா என தமிழ் திரையுலகமே திரண்டு வந்து சிவாஜிக்கு அஞ்சலி செலுத்தியது. டி.நகர் அன்னை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டிருந்த இரங்கல் குறிப்பில், `தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் நடிப்பின்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் மொழி உச்சரிப்பிலும் சிறந்து விளங்கியவர்’ என புகழாரம் சூட்டியிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் ஜெயலலிதா, சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட அண்டை மாநில முதல்வர்கள் தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கன்னட நடிகர் ராஜ்குமார், இறுதி அஞ்சலியில் மனைவியுடன் நேரில் கலந்துகொண்டார்.

Sivaji Funeral
Photo – Twitter

இறுதி ஊர்வலம்

அன்னை இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானம் வரையில் 12 கி.மீ நடைபெற்ற சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சாலையின் இருமங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து சிவாஜிக்கு இரங்கல் தெரிவித்தனர். சிவாஜியின் உடல் கிடத்தப்பட்டிருந்த வண்டியில் இளையராஜா, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், வைரமுத்து, சரத்குமார், பாரதிராஜா, இயக்குநர் சந்தானபாரதி, மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் அவரது உடலுக்கு அளிக்கப்பட்டது. அஸ்தி பெசன்ட் நகர் கடற்கரையில் கரைக்கப்பட்டது.

Also Read – நடிகை ஜெயலலிதா – 9 சுவாரஸ்யங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top