என்.சங்கரய்யா

`அமெரிக்கன் காலேஜ் ஸ்டூடண்ட் சார்!’ – ஜெயிலில் சம்பவம் செய்த `தகைசால் தமிழர்’ என்.சங்கரய்யா!

1947 ஆகஸ்ட் 14-ம் தேதி. மதுரை ஜெயிலுக்கு வந்த நீதிபதி ஒரு இளைஞன் உள்ளிட்ட தலைவர்களைப் பார்த்து, `இந்த கேஸ் புனையப்பட்டது. உங்களை விடுதலை செய்கிறேன்’ என்று சொல்கிறார். அறிவிப்பைத் தொடர்ந்து வெளியில் இருந்து சிறைச்சாலைக்குள் வந்த மிகப்பெரிய கூட்டம், அந்த இளைஞன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அங்கிருந்து திலகர் திடல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்கிறது. அந்த கேஸில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தவர் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி. இரண்டாவது குற்றவாளி தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் என்று போற்றப்பட்ட தோழர் என்.சங்கரய்யா…. விடுதலைப் போராட்டம் தொடங்கி சாதி மறுப்புப் போராட்டம் வரையில் தலைமுறைகள் கடந்து போராட்டங்களின் அடையாளமாய் வாழ்ந்து மறைந்த தோழர் என்.சங்கரய்யா வாழ்வின் சில முக்கியமான சம்பவங்களைத்தான் இப்போ பார்க்கப்போறோம்.

மதுரை மாணவர் சங்கம்

1938 காலகட்டத்தில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்கள் (MSO) தொடங்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தின் வீச்சும் அதிகரித்தது. அது மதுரையிலும் எதிரொலித்த நிலையில், அங்கும் மாணவர் சங்கம் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் மாணவர் சங்கம் தொடங்குவதில் ஆர்வம் காட்டவே, பாரிஸ்டர் மோகன் குமாரமங்கலம், மாணவர் பிரதிநிதி என்.சங்கரய்யா ஆகியோர் உரையாற்ற மதுரை விக்டோரியா எட்வர்டு ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் உதயமானது. ஏராளமானோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மாணவர் சங்கத்தின் செயலாளராக என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். `சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மாணவர் சங்கக் கொடி தென் மாவட்டங்கள் முழுவதும் பரிச்சயமாகத் தொடங்கியது. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக் கல்வியறிவைப் போதிக்கும் வகையில் மதுரை மாணவர் சங்கம் தொடங்கிய எழுத்தறிவு இயக்கத்தை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராசர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர், உத்தமபாளையம், திண்டுக்கல் நகரங்களில் நேரிலேயே சென்று மாணவர் சங்கங்கள் உருவாக முயற்சிகளை முன்னெடுத்தார் சங்கரய்யா. மாணவர் சங்கத்தின் செல்வாக்குப் பரவுவதைக் கண்டு அஞ்சிய அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பிளிண்ட், சங்கரய்யாவை அழைத்து, `உனக்கு டி.சி கொடுத்துடுறேன். வேற காலேஜ் பாத்துக்க’ என்று மிரட்டியிருக்கிறார். அப்போது கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் சுப்ரமணிய சர்மாவின் யோசனையோடு, `உத்தரவைத் திரும்பப் பெறலைனா மிகப்பெரிய வேலைநிறுத்தம் நடக்கும்’ என எச்சரிக்கை செய்யவே, அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

சுபாஷ் சந்திரபோஸின் மதுரை வருகை

1939 செப்டம்பர் 4-ம் தேதி மதுரைக்கு வருகைதந்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து கல்கத்தா திரும்ப நினைத்த அவர், முத்துராமலிங்கத் தேவர் வேண்டுகோளால் மதுரை வந்தார். காங்கிரஸில் இருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கியிருந்த அவரின் வருகையைப் புறக்கணிக்க வேண்டும்னு காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த காங்கிரஸின் பெரிய தலைகள் அந்த அறிக்கையைப் புறக்கணித்து நேதாஜிக்கு மிகப்பெரிய வரவேற்பளித்தனர். மதுரை ரயில் நிலையத்துக்கே சென்று நேதாஜியை வரவேற்ற என்.சங்கரய்யா, சென்ட்ரல் தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்த மாணவர் கூட்டத்திலும் நேதாஜியை உரையாற்ற வைத்தார்.

மதுரையின் முதல் கம்யூனிஸ்ட் கிளை

கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டீஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்கிற பெயரில் இயங்கி வந்த அமைப்பின் பெயரில் இணைந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் செயல்பட்டு வந்தனர். 1939 ஆண்டுவாக்கில் ரகசியமாகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளை உருவாக்கும் பணி தொடர்ந்தது. அதன்படி 1940-ல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையின் 9 ரகசிய உறுப்பினர்களில் என்.சங்கரய்யா முக்கியமானவர். அதன்பின்னர் திருப்பரங்குன்றம் மொட்டையரசு, நாகமலை புல்லூற்று ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பயிலரங்குகளிலும் கலந்துகொண்டு தீவிரமாகக் களப்பணியாற்றினார்.

படிப்பையே தியாகம் செய்த நல்லுள்ளம்

1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன், மீனாட்சி உள்ளிட்ட 6 மாணவ, மாணவிகளைக் கைது செய்தது. இதை எதிர்த்து மதுரையிலும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த என்.சங்கரய்யாவையும் போலீஸ் கைது செய்ய முனைந்தது. `மண்டைகள் உடைகின்றன எலும்புகள் நொறுங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தம் ஆறாக ஓடுகிறது’ என்று சங்கரய்யா பிரசுரித்த ரகசிய துண்டுப் பிரசாரம் இந்த கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணம். பி.ஏ முடித்ததும் மகனை வழக்கறிஞர் படிப்புக்கு அனுப்ப அவரின் தந்தை நினைத்திருந்தார். மதுரை மாநகரில் நடந்த மாணவர் ஊர்வலத்துக்குப் பிறகு பிப்ரவரி 28-ல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீச்சட்டி கோவிந்தன் சங்கரய்யாவைக் கைது செய்தார். சங்கரய்யா கைதுக்கு எதிராக மதுரை மாநகர் உள்பட மாவட்டம் முழுவதும் மாணவர்கள் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டங்களை செய்தனர். தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரின் படிப்பு அங்கே முற்றுப்பெற்றது. சமீபத்தில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அந்த பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக மற்ற தலைவர்களோடு இணைந்து மொட்டையடித்துப் போராட்டம் நடத்தினார். பத்து நாட்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், சிறைச்சாலைகளின் ஐ.ஜியான லெப்டினென்ட் கர்னல் கண்ட்ராக்டர் என்பவர் வேலூர் சிறைச்சாலைக்கு வந்து உண்ணாவிரதமிருந்த கம்யூனிஸ்ட் கைதிகள் ஒவ்வொருவர் அறைக்கும் வந்து பார்த்தார். அப்போது சிறையில் தனது அறையில் தாய் நாவலைப் படித்துக் கொண்டிருந்தார் சங்கரய்யா. அவரைப் பார்த்து 10 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகும் இது எப்படி முடிகிறது என்று கேட்டார் காண்ட்ராக்டர். `நான் நன்றாக இருக்கிறேன். அமெரிக்கன் காலேஜ் ஸ்டூடண்ட் சார்’ என்று பதிலளித்திருக்கிறார் சங்கரய்யா.

`வேலூர் சிறையில் மதுரை மாணவர்களின் மிகச்சிறந்த தலைவராக விளங்கிய அமெரிக்கன் கல்லூரி மாணவரான தோழர் என்.சங்கரய்யாவும் இருந்தார். ரொம்பவும் கெடுபிடியான ஆள் போலத் தோன்றினாலும், வெள்ளை மனம் படைத்த சிறந்த தோழர். அமைதியானவர், படாபடோமில்லாதவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்…’ வேலூர் சிறையில் 18 மாதங்கள் என்.சங்கரய்யாவோடு அடைக்கப்பட்டிருந்த விக்ரமசிங்கபுரம் பெ.சீனிவாசன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் இவை.

நேதாஜி, காமராசர் தொடங்கி இன்றைய அரசியல் தலைவர்கள் வரையில் 80 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட தோழர் என்.சங்கரய்யாவோட பொதுவாழ்வுப் பயணம் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – கி. ராஜநாராயணன் எனும் என் பிரியத்துக்குரிய பாட்டன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top