இன்றைக்கு நாம் ஒப்புக்கொண்டால் வருங்காலத்தில் தமிழகத்தில் நமது கட்சி இல்லாமலேயே போய்விடும். இதற்காக இத்தனை காலம் ஒன்றுபட்டு கூட்டியக்கம் நடத்தினோம்? – கே.எஸ்.அழகிரி
சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கியிருக்கிறார். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது திமுக நடத்திய விதம்தான் அவரை ரொம்பவே காயப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், `திமுகவுடன் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணியுடன் தமிழக நலனுக்காகப் போராடிய காங்கிரஸை இப்போது சில சீட்டுகளுக்காக திமுக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. எத்தனை தொகுதிகள் என்பதைவிட… திமுக நம்மை நடத்தும் விதம்தான்…’ என்று பேச்சை நிறுத்தி கண்கலங்கியிருக்கிறார்.
என்ன நடந்தது?
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் கூட்ட்ணிக் கட்சிகளிடம் முன்னெப்போதும் இல்லாத அளவில் கறார் காட்டி வருவதாகப் புலம்புகிறார்கள் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள். தி.மு.க கூட்டணியில் இருக்கும் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு மூன்று தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கி திமுக கூட்டணியை இறுதி செய்திருக்கிறது. மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
அடுத்தடுத்த ஆலோசனையில் திமுகவின் விளக்கத்துக்குப் பின்னர் குறைந்தபட்சம் 30 தொகுதிகளையாவது கொடுங்கள் என காங்கிரஸ் தலைவர்கள் கேட்க, அதற்கும் திமுக தரப்பு மசியவில்லை என்கிறார்கள். கூட்டணிப் பேச்சு, தொகுதிப் பங்கீடு என எதுவாக இருந்தாலும் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என காங்கிரஸ் தலைமை விலகிக் கொள்ள, தமிழகத்துக்கு காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மேலிடப் பார்வையாளர்கள் வீரப்ப மொய்லி, உம்மண் சாண்டி, ரன்தீப்சிங் சுரேஜ்வாலா உள்ளிட்டோரும் சென்னை வந்தனர். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் இதுதொடர்பாக திமுகவிடம் பேசியும் எந்தப் பலனுமில்லை என்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் 23 முதல் 24 தொகுதிகள் ஒதுக்கலாம் என திமுக தரப்பு சொல்லியிருக்கிறது. ஆனால், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 3 தொகுதிகள் என மொத்தம் 27 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேண்டும் என காங்கிரஸ் தரப்பு அழுத்தம் கொடுத்திருக்கிறது. கடந்த எம்.பி தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட விசிகவுக்கு 6 தொகுதிகள் என அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிக் கணக்கின் அடிப்படையிலேயே தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது.
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் குழுவுக்கு அறிவாலயத்தில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் கதர் தொண்டர்கள். பேச்சுவார்த்தைக்காக அறிவாலயம் சென்ற தம்மை திமுகவின் எந்தவொரு முன்னணி தலைவர்களும் வரவேற்கவில்லை என்பதை இமெயில் மூலம் ராகுல்காந்திக்கு கே.எஸ்.அழகிரி தகவல் சொல்லியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
`திமுக சொல்வதும் நாம் கேட்கும் தொகுதிகளும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது. இன்றைக்கு நாம் ஒப்புக்கொண்டால் வருங்காலத்தில் தமிழகத்தில் நமது கட்சி இல்லாமலேயே போய்விடும். இதற்காக இத்தனை காலம் ஒன்றுபட்டு கூட்டியக்கம் நடத்தினோம்?. இதற்கு ஒப்புக்கொண்டால் நாளை மதிப்புமிக்க அரசியல் செய்ய முடியாது’ என்றும் செயற்குழுக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கொந்தளித்திருக்கிறார்.
அதேபோல், 30 தொகுதிகளுக்குள் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கொடுத்து, இறுதி செய்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருகிறோம் என்ற மெசேஜையும் காங்கிரஸ் தலைமை திமுகவுக்கு பாஸ் செய்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் திமுக காங்கிரஸை இப்படி நடத்தியதில்லை என்று கூறும் காங்கிரஸ் தொண்டர்கள், திமுக தரப்பில் பேச்சுவார்த்தையின் போது நடந்துகொண்ட விதமும் ஒதுக்கும் தொகுதிகள் எண்ணிக்கை பற்றிய பேச்சும் தலைவர் கே.எஸ்.அழகிரியை ரொம்பவே பாதித்துவிட்டது என்கிறார்கள்.
இதேபோல் வேறொரு கணக்கையும் மேற்கோள் காட்டுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். “வெறும் 3 சதவிகித வாக்கு வங்கி கொண்ட பாஜக-வுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். அப்படியென்றால் 7 சதவிகித வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். திமுக சொல்கிறபடியே கூட்டணியில் இருந்த கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் 30 தொகுதிகளுக்கு மேலாவது ஒதுக்கலாமே? அதிமுக கூட்டணியில் இருக்கும் இரண்டாவது பெரிய கட்சியான பாமக-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கும் குறைவான தொகுதிகளைப் பெற்றால், தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை கேலிக்கூத்தாக்குவது போலாகிவிடும்’’ என்கிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி பொதுக்கூட்டத்துக்கு இன்று செல்லும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதைக்கு முடிவு எட்டப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள். காங்கிரஸ் கட்சியிலும் விருப்ப மனு அளித்த 7,200 பேரிடமும் மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் நேர்காணல் நடத்துகிறார்கள். நேர்காணல் முடிந்தபிறகு பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று சொல்லியிருக்கும் கே.எஸ்.அழகிரியிடம், செயற்குழுக் கூட்டத்தில் கண்ணீர்விட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாத அவர், “கண் இருந்தால் கண்ணீர் வரத்தானே செய்யும். கண் இல்லாதவர்களுக்குத்தான் கண்ணீர் வராது’’ என்று மழுப்பலாகப் பேசியிருக்கிறார்.