TN Opposition Parties

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு… தே.மு.தி.க, ம.தி.மு.க, அ.ம.மு.க, ம.நீ.ம. முகாம்களில் என்ன நடக்கிறது?

சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தி.மு.க கைப்பற்றிவிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுவிட்டார். புதிய அமைச்சரவையும் அமைந்துவிட்டது. இரண்டாவது பெரிய கட்சியான அ.தி.மு.க-வில் எதிர்கட்சித் தலைவர் தொடர்பாக நீடித்து வந்த இழுபறியும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கள் இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்… அந்தக் கட்சிகள் உள் நிலவரம் என்னவாக இருக்கிறது… அந்த கட்சிகள் அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கின்றன?

தி.மு.க-வுக்கு ரூட் போடும் தே.மு.தி.க!

Udhayanidhi Stalin - Vijayakanth

விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு, முழு ஒய்வுக்குச் சென்றுவிட்ட பிறகு, கட்சியை வழிநடத்தும் அதிகாரத்தை பிரேமலதா எடுத்துக் கொண்டார். ஆனால், அவரால் தே.மு.தி.க-வை திறமையாக வழிநடத்த முடியவில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதே, பிரேமலதா ஒரே நேரத்தில், தி.மு-க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது, அந்தக் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. ஆனாலும், கடைசியில் அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது தே.மு.தி.க. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மொத்தமாகத் தோல்வியைத் தழுவியது. அதில் தே.மு.தி.க-வின் செல்வாக்கும் சரிந்து போனது. அதன்பிறகு, தே.மு.தி.க-வால், அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், உறுதியான முடிவை தே.மு.தி.க-வால் எடுக்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பேசி, தங்கள் இடம் என்ன என்பதை உறுதி செய்ய முடியவில்லை; அப்படியே அந்தக் கட்சியைக் கூட்டணிக்குள் இருப்பதைப்போலக் காட்டியே, வேறு கூட்டணிக்கு போக முடியாதவாறு பார்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கடைசிவரை, அவர்களுக்கு எத்தனை சீட் என்பதைச் சொல்லாமலே இழுத்தடித்து, கடைசியில் தே.மு.தி.க-வைக் கழற்றிவிட்டார். அந்த நேரத்தில் தி.மு.க-வும் கூட்டணியை இறுதி செய்து, தேர்தலைச் சந்திக்கச் சென்றுவிட்டது. அதனால், தனித்துவிடப்பட்ட தே.மு.தி.க, அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து. விருத்தசாலத்தில் போட்டியிட்ட பிரேமலதாவும் தோல்வி அடைந்தார். 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.

அதுபோல்,ஒரு காலத்தில் 8 சதவிகித வாக்குகளை வைத்திருந்த அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் தற்போது 2.8 சதவிகிதமாகத் தேய்ந்துள்ளது. இந்தத் தோல்வியையடுத்து, தே.மு.தி.க-வின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தத் தோல்வியில் இருந்து மீள வேண்டுமானால், தி.மு.க பக்கம் சாய்வதைத் தவிர தற்போது தே.மு.தி.க-வுக்கு வேறு வழியில்லை. அதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

MK Stalin - Vijayaprabhakaran

‘பழம் நழுவி பாலில் விழுந்தது’ போல், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதையே சாக்காக வைத்து, அதற்கடுத்த நாள், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதிஷூம் சேர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அதன்பிறகு, உதயநிதியையும், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனையும் சந்தித்தனர். இனி தே.மு.தி.க-வின் அரசியல் என்பது தி.மு.க-வை ஒட்டியே இருக்கும். எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வோடு கூட்டணி அமைத்து உள்ளே போய்விட வேண்டும் என்று தே.மு.தி.க காய் நகர்த்துகிறது.

சரி, மற்ற கட்சிகள் நிலை என்ன?

அ.தி.மு.க-வில் நடப்பதைக் கவனிக்கும் அ.ம.மு.க!

EPS - TTV Dhinakaran

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று அலட்சியமாகக் கணக்குப்போட்ட தினகரன், தற்போதைய தோல்வியைத் தாங்க முடியாமல் இருக்கிறார். எந்த நிலையிலும் பத்திரிகையாளர்களை கூலாகச் சந்திக்கும் டி.டி.வி.தினகரன், இந்தத் தோல்விக்குப் பிறகு கடும் மன உளைச்சலில் இருக்கிறார். அவர் தென்மாவட்டங்களில் போட்டியிட்ட தொகுதிகளில் இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என வந்திருந்தாலும், அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தது, அவரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. அதனால், எந்த சிந்தனையும் செய்யாமல், அரசியல் சூழல் மாறட்டும் என்றளவில் இருக்கிறார். அதே நேரத்தில் அ.தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் தனக்கும், தங்கள் குடும்பத்துக்குமான எதிர்காலம், அ.தி.மு.க-வுக்குள் தங்களை இணைத்துக் கொள்வதுதான் என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்!

Kamalhassan - Mahendran

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சினிமா பாணியில் கட்சியைத் தொடங்கி நடத்தி, சூட்டிங் வைப்பதுபோல், கட்சிக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். அ.தி.மு.க ஓட்டுக்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், தி.மு.க-வை விமர்சித்தும், எம்.ஜி.ஆரைப் புகழ்ந்தும் அரசியல் செய்ய நினைத்தார். ஆனால், அவர் போட்டியிட்ட தொகுதியில்கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதோடு, அந்தக் கட்சி போட்டியிட்ட 180 தொகுதிகளில் 178 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அதோடு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அந்தக் கட்சியில் இருந்த விலகி, கமல்ஹாசனின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். ஆனால், கமல்ஹாசன், இப்போதைக்கு அடுத்த பட வேலைகளைத் தொடங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரைப் பொறுத்தவரை இனி அடுத்த தேர்தல் சூட்டிங் ஆரம்பித்தால்தான், ஸ்பாட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

மகனுக்குப் பட்டம் சூட்டத் தயராகும் ம.தி.மு.க!

Durai Vaiko

பல ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ள ம.தி.மு.க தரப்பு உற்சாகத்தில் உள்ளது. தி.மு.க கூட்டணியில் 6 சீட்களை வாங்கி, 4 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், வைகோ தளர்ந்துவிட்ட நிலையில், அவரது மகன் வையாபுரியைக் கட்சியின் அடுத்த தலைவராகக் கொண்டு வரும் வேலைகள் தொடங்கி இருக்கின்றன. ஆனால், அதை இந்தத் தேர்தலிலேயே செய்து, வையாபுரிக்கும் ஒரு சீட்டை ஒதுக்கிக் கொடுத்திருந்தால், வேலை எளிதாக முடிந்திருக்கும். அதைச் செய்யத் தவறிவிட்டோமோ என்ற எண்ணத்தில் இருக்கிறார் வைகோ. அடுத்த தேர்தல் நேரத்தில் எப்படிச் சூழல் மாறுமோ… அதற்குள் சரியான நேரத்தில் வையாபுரியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவர் அந்த சிந்தனையில் மூழ்கி இருப்பதாக ம.தி.மு.க வட்டாரங்கள் சொல்கின்றன.

Seeman

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றதைவிட கட்சிக்கான அங்கீகாரத்தை வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்றாலும், 6 சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறோம் என ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் இப்போதைய நிலை.

Also Read – அதிருப்தியில் கிளம்பிய ஓ.பி.எஸ்… அறிவிப்பை வெளியிட்ட இ.பி.எஸ்! அ.தி.மு.க கூட்டத்தில் நடந்தது என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top