பா.இரஞ்சித்

தமிழ் சினிமாவுக்கு பா.இரஞ்சித் ரொம்ப முக்கியம்… ஏன்?

இயக்குநர் ராம் ஒரு இன்டர்வியூல, “மாரி செல்வராஜ்னால ‘பரியேறும் பெருமாள்’’ படத்தை இப்போ எடுக்க முடியுது. ஆனால், 2007-ல அந்தப் படத்தை எடுத்துருக்க முடியாது. இப்போ பண்ண முடியுறதுக்கான காரணம் என்னனா, பரியேறும் பெருமாள் மாதிரி ஒரு படம் பண்ணா அதுக்கு ஒரு மதிப்பு இருக்கு, பணம் இருக்குனு ப.இரஞ்சித்னு ஒருத்தர் வந்து கிரியேட் பண்ணாரு. தமிழ் சினிமாவின் மார்க்கெட்டையே மாற்றியவர், இரஞ்சித். இப்படி பார்க்க முடியும்னு தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் சொல்லிக் கொடுத்தவர், இரஞ்சித்”னு சொல்லுவாரு. இன்னைக்கு முன்னணி இயக்குநர்கள்ல ஒருத்தர இருக்கக்கூடிய வெற்றிமாறன், “இன்னைக்கு அரசியல் தொடர்பான படங்கள் பண்றாங்கனா அதுக்கு இரஞ்சித்தின் எழுச்சிதான் காரணம். தன்னோட அரசியல் நிலைப்பாடு என்னன்ற தெளிவோட சினிமாவைக் கையாளுற ஒருத்தர் பா.இரஞ்சித்”னு சொல்லுவாரு. இவ்வளவு முக்கியமா இயக்குநர்களாலயே பார்க்கப்படுற பா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு முக்கியம் ஏன்? அதைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

தமிழ் சினிமாவில் சாதிகள்

பா.இரஞ்சித் எவ்வளவு முக்கியம்னு பார்க்குறதுக்கு முன்னாடி ‘The Invisible Other: Caste in Tamil Cinema’னு ஒரு ஆவணப்படம் இருக்கு. அதைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம். தமிழ் சினிமாக்கள்ல சாதின்ற விஷயத்தை கண்ணுக்குத் தெரியாமல், அதாவது வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி எப்படி ஏத்தி வைச்சிருக்காங்கன்றதை மக்களுக்கு தெரியப்படுத்தணும்ன்ற முயற்சிலதான் இந்த ஆவணப்படத்தை எடுத்துருக்காங்க. அந்த ஆவணப்படத்தோட ஆரம்பமே ‘சுந்தர பாண்டியன்’ல வர்ற இன்ட்ரோ சீன்ல இருந்துதான் ஆரம்பிக்கும். அந்தப் படத்தை அத்தனை தடவை பார்த்திருப்போம். ஆனால், அந்த சாதிப்பெருமை பேசுற சீனை அவ்வளவு இயல்பா, கவனிக்காமல் நாம கடந்து போயிருப்போம். இந்த மாதிரி பல ஷாக்கான காட்சிகள் இந்த ஆவணப்படத்துல நாம பார்க்கலாம்.

தமிழ் சினிமால சாதின்னு சொன்னதும் மாணவர்களுக்கு என்னென்ன படங்கள் எல்லாம் நியாபகம் வருதுனு அந்த டாகுமெண்ட்ரில கேப்பாங்க. அப்போ, “நாயக்கர், சின்ன கவுண்டர், எஜமான், தேவர்மகன், சுந்தர பாண்டியன், விருமாண்டி, கிழக்கு சீமையிலே, நாட்டாமை, திருநெல்வேலி, பாரதி கண்ணம்மா, குட்டிப்புலி” படங்களைதான் குறிப்பிடுவாங்க. பேராண்மை படத்தோட டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் அந்தப் படத்துல சாதிய ஏற்றத்தாழ்வுகளை பத்தி பேசியிருந்தாராம். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்துல போய்டுச்சு. நீ ஏன் சினிமா எடுத்து தூண்டி விடுறனு சென்சார் போர்டுல கேட்டாங்களாம். இப்படி நிறைய விஷயங்களை இந்த ஆவணப்படத்துல சொல்லியிருப்பாங்க. எல்லாமே ஷாக்கா இருக்கும். தமிழ் சினிமால இருக்குற உண்மையான சாதிய முகங்களை இந்த ஆவணப்படம் அப்படியே காட்டியிருக்கும். இந்த ஆவணப்படத்தோட கடைசீல பா.ரஞ்சித்தோட மெட்ராஸ் படத்துல வர்ற கிளைமேக்ஸை வைச்சு முடிச்சிருப்பாங்க.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சினிமா

தமிழ் சினிமாவை நல்லா கவனிச்சுப் பார்த்தா சாதிய பெருமைகளை பேசின படங்கள்தான் அதிகமா இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழ் சினிமால ரொம்ப காலமா அழுத்தமா ஒலிக்கலைனு சொல்லலாம். இதை ஒட்டுமொத்தமா உடைச்சு எரிஞ்சது, பா.ரஞ்சித்தான். அவர் படங்கள் வந்ததுக்கு அப்புறம் பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் படங்கள்ல முக்கியமா இருக்கானு பார்க்கப்படுது. குறிப்பா, ரொம்ப காலமாவே தமிழ் சினிமால வடசென்னை மக்கள் சமூகத்துல குற்றவாளியாகவே சித்தரிக்கப்படுறாங்க. அவங்க மத்திலயும் ஐ.டிக்கு வேலைக்கு போறவங்க, ஃபுட் பால் ஆடுறவங்க, டான்ஸ் ஆடுறவங்க, உருகி உருகி காதல் பண்றவங்க இருக்காங்க. அவங்க எதார்த்தமானவங்கனுனு அந்த மக்களோட வாழ்வியலை, அந்த லேண்ட்ஸ்கேப்பை அப்படியே காட்டினவரு, பா.ரஞ்சித்தான். சென்னைலயே பிறந்து வளர்ந்தவங்க ரொம்ப திமிரா இருக்காங்க. கெத்தா இருக்காங்கனு சொல்லுவாங்கல். நம்ம சொந்த ஊருக்குப்போனா நமக்கும் ஒரு கெத்து ஃபீலிங் வரத்தான செய்யும்? நமக்கு வந்தா ரத்தம். அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

தலித் மக்கள் பற்றிய சினிமாக்களை பா.ரஞ்சித் எடுக்குறதுக்கு முன்னாடி வேற படங்கள் பேசலையானு கேட்டா, இல்லைனுதான் ரஞ்சித்தே சொல்லுவாரு. ஆனால், ஒரு தலித் சினிமாவை தலித் அல்லாதவர்கள் எடுக்கும்போது புரட்சினு பார்க்குற மனோபாவம், தலித் மக்கள்ல இருந்து ஒருத்தர் எடுக்கும்போது சாதி வெறியா பார்க்கப்படுதுன்றதுதான் இன்னைக்கும் சமூகத்துல பிரச்னையா இருக்குனு பா.ரஞ்சித் சொல்லுவாரு. அதுமட்டுமில்ல, தங்களை ஆதிக்க சாதினு சொல்லக்கூடிய சாதிகள் சார்ந்து வரக்கூடிய படங்கள் எல்லாமே சுயசாதி பெருமையை பேசுற படமாகவும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட மக்களை அடிமைகளாக வைத்து காட்சிப்படுத்தப்பட்ட படமாகவும்தான் இருக்கு. வன்முறையைதான் கூடாதுனு நாங்க காட்சிப்படுத்துறோம்னு அந்தப் படங்களுக்கு விளக்கம் கொடுத்தாலும், இன்னைக்கும் அந்தப் படங்கள் ஏற்படுத்துற தாக்கங்களே வேறமாதிரியாதான் இருக்கு. இந்த நிலையில், பா.ரஞ்சித் எடுக்குறப் படங்கள் தலித் மக்கள் எப்படி நடத்தப்படுறாங்கன்றதை சுட்டிக் காட்டுது. அவங்களைப் பத்தி பேசுது. உரையாடலை தொடங்குது. அப்படியான படங்களைத்தான் அவர் தயாரிக்கவும் டைரக்ட் பண்ணவும் செய்றாரு. இதனாலதான் பா.ரஞ்சித் ரொம்ப முக்கியம்.

பேசாப்பொருளை பேசத் துணிந்தவர்

கபாலி, காளி இந்தப் பெயர்கள் எல்லாமே காலம்காலமா வில்லன்கள் பெயர்தான். பொதுவா தமிழ் சினிமால குறிப்பிட்ட பெயர்களே ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிபலிப்பதாதான் இருக்கும். ஆனால், அந்தப் பெயர்களைக்கூட ஹீரோக்களுக்கான பெயரா மாத்தி நார்மலைஸ் பண்ணது, ரஞ்சித்தான். மெட்ராஸ், கபாலி, காலானு எல்லா படத்துலயும் அதிகாரத்தை குறிப்பிட்டு பா.ரஞ்சித் பேசியிருப்பாரு. எப்பவுமே ஒடுக்கப்பட்ட மக்கள் படங்கள்ல அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பவே மாட்டாங்க. ஆனால், இது ரஞ்சித் படம். ஈக்குவாலிட்டியை பேசுற படம். சுயமரியாதை உரிமைனு சொல்ற படம். மெட்ராஸ்ல ஒரு சுவரை வைச்சு அரசியல் பண்றதை, அதிகாரம் பண்றதை அவ்வளவு துல்லியமா சொல்லியிருப்பாரு. அதிகாரத்தை உடைச்சு கேள்வி கேட்டு சமூகத்துல ஒரு டிஸ்கஷனை தொடங்கினதுதான் மெட்ராஸ் படத்தின் மிகப்பெரிய வெற்றியே.

கபாலி படத்துல கோர்ட் போடுறதுல இருந்து கால்மேல கால் தூக்கி போட்டு உட்கார்றது வரைக்கும் எல்லாமே அதிகாரத்தை நோக்கி கேள்வி கேக்குற குறியீடுகள்தான். காலால நிலம் உங்களுக்கு அதிகாரம், எங்களுக்கு உரிமைனு நிலத்தைப் பத்தி பேசியிருப்பாரு. அந்த நிலத்தை கைப்பற்ற நினைக்கிற அதிகாரத்தை நோக்கி கேள்வி கேப்பாரு. அட்டக்கத்தில மாட்டுக்கறியைப் பத்தி பேசியிருப்பாரு. அதுக்கு முன்னால படங்கள்ல மாட்டுக்கறியைப் பத்தி பேசினதே இல்லைனு சொல்லலாம். அதேமாதிரி குத்து சண்டையைப் பத்தி யாருமே சினிமால பேசினது இல்லை. அதை சார்பட்டா பரம்பரை படம் வழியா பேசுனாரு. கல்வி, சமூகநீதி, ஈக்குவாலிட்டி, சுயமரியாதைனு எல்லாரும் பேச தவறுற விஷயங்களை தவறாமல் தன்னோட வசனங்கள் மூலமா பா.ரஞ்சித் பேசுவாரு. அவரோட வசனங்கள் அவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கும்.

அம்பேத்கர் எல்லாருக்குமானவர்

“காந்தி கோட் சூட் போடாததுக்கும். அம்பேத்கர் கோட் சூட் போட்டதுக்கும் பின்னாடி மிகப்பெரிய அரசியல் இருக்கு”னு கபாலில ஒரு டயலாக் வரும். இன்னைக்கும் அந்த டயலாக் ரொம்பவே முக்கியமானதா பார்க்கப்படுது. இதுக்கு பா.ரஞ்சித், “உடை எவ்வளவு முக்கியமான ரோலை இந்த சமூகத்துல பண்ணுதுனு நாம பார்க்கணும். சட்டை போடாதவங்க. சட்டை போடுறவங்க. இப்படி ரெண்டு பேரு இருக்கும்போது, சட்டை போடுறதுதான் ஈக்குவாலிட்டியை நோக்கி நகர்றதா நான் பார்க்குறேன்”னு சொல்லுவாரு. அம்பேத்கர் புகைப்படத்தை வைச்சா அதை எடுக்க சொல்றாங்கனு நிறைய டைரக்டர்கள் சொல்லுவாங்க. ஏன்னா, ஈக்குவாலிட்டிக்காக பேசுன அவரை சாதிய தலைவராதான் எல்லாருமே பார்க்குறாங்க. ஆனால், அதை தன்னுடைய படங்களின் வழியா உடைக்கணும்னு பா.ரஞ்சித் ரொம்பவே மெனக்கெடுவாரு. அம்பேத்கர் படங்களை காட்சிகளில் திணிக்காமல் வைப்பாரு. அவருடைய வசனங்களை வைப்பாரு. படம் தொடர்பான புரொமோஷன்களில் பேசும்போது அம்பேத்கரை குறிப்பிட்டு பேசுவார். படிக்க சொல்லுவாரு. கடந்த ஒரு பத்து வருஷத்துல அம்பேத்கரை இளைஞர்கள் மத்தியில கொண்டு போய் சேர்த்த முக்கியமான நபர்ல பா.ரஞ்சித்தும் ஒருத்தர்.  

இசை

தன்னோட படங்கள்ல இசையை ஒரு விடுதலைக்கான மொழியா பயன்படுத்துனது, பா.இரஞ்சித்தான். ராக், ராப், கானானு ஒரு டிரெண்டை கடந்த டிகேட்ல ஓப்பன் பண்ணி விட்ட பெருமையும் பா.இரஞ்சித்துக்குதான் சேரும். ஒப்பாரி இசையெல்லாம் மக்கள் கேட்ருக்கவே மாட்டாங்க. ஆனால், அதுவும் மக்கள் விரும்பி கேக்குற பாடல்கள்ல ஒண்ணா இருக்க முடியும்னு காமிச்சவர், பா.ரஞ்சித்தான். கேஸ்ட்லஸ் கலக்டிவ்ஸ் மூலமா புதிய பாதையையே பா.ரஞ்சித் பல கலைஞர்களுக்கு திறந்துவிட்டாரு. கானா கலைஞர்கள் வாழ்க்கையைப் பத்தி விவாதத்தை தொடங்கிவிட்டாரு. அந்த இசையை வெகுஜனமா மாத்துனாரு. பாடல் வரிகள்லகூட பாலிடிக்ஸ் இருக்கும். சமூக முரண்களை பவர்ஃபுல்லா பேசுறதுக்கு இசை சிறந்த வடிவம்னு பா.ரஞ்சித் நம்புறாரு.

‘துப்பட்டா போடுங்க தோழி, இட ஒதுக்கீடுல வந்து டாக்டர் ஆனவங்கனு’ டயலாக் வைக்கிற பிரம்மாண்ட இயக்குநர்கள்ல இருந்து ‘ஜீன்ஸ் போட்டுட்டு வந்து பொண்ணுங்கள மயக்குரான், தேவராட்டம்னு படம் எடுப்பேன், திரௌபதினு படம் எடுப்பேன்னு’ சொல்ற டைரக்டர்கள் வரை சாதிய பெருமையை தைரியமா இன்னைக்கு பேசுறாங்க. இப்படியான டைரக்டர்கள் இருக்குற சூழல்ல பா.ரஞ்சித் மாதிரியான இயக்குநர்கள் சமூகத்துக்கு இன்னும் அதிகமாவே தேவைப்படுறாங்க.

Also Read – லோகேஷ் கனகராஜின் தலைவன்… மன்சூர் அலிகானின் தரமான தக் லைஃப் சம்பவங்கள்!

1 thought on “தமிழ் சினிமாவுக்கு பா.இரஞ்சித் ரொம்ப முக்கியம்… ஏன்?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top