அமெரிக்காவில் ஒரேகான் எனும் மாகாணத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாள்களாக கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் அதிக வெப்பம் ஏற்பட்டதையடுத்து இந்தத் தீயானது பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தைவிட பெரிய பகுதியைக் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி பரவத் தொடங்கிய தீ முழுவதுமாக எரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மாகாணங்களில் இருக்கும் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இதுவும் ஒன்று என்கிறார்கள். பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால் காலநிலை இன்னும் மோசமாகும் என்றும் அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வெப்பநிலை இன்னும் உயரும் என்றும் இதனால் பேராபத்துகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 2.27 லட்சம் ஏக்கர் நிலப்பகுதிகள் தீக்கு இரையாகி உள்ளன. காட்டுத் தீயை அணைக்க சுமார் 12 ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாக தண்ணீரை ஊற்றி வருகின்றனர். மின்னல் காரணமாக காய்ந்த புற்களில் தீப்பொறி ஏற்பட்டு, காட்டுத் தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காட்டுத்தீ பரவியுள்ள இடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 2000 பேரை தங்களது வீடுகளை விட்டு வெளீயேற அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 160 வீடுகளாவது தீக்கு இரையாகியிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தீ விபத்துப் பற்றி அப்பகுதியின் குடியிருப்பாளர்கள், “செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்று சிவப்பு நிறத்தில் இருந்தது” என்று தெரிவித்துள்ளனர். “நீங்கள் வெளியேறவில்லை என்றால், நீங்கள் இறந்துவிடுவீர்கள்” என எச்சரிக்கை விடுத்து அதிகாரிகள் மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் வெப்பநிலை இயல்பைவிட 10 முதல் 15 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாள்களில் இந்த காலநிலை இன்னும் மோசமாகலாம் என்றும் தீ தொடர்ந்து பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட தீ பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகமாகும். கலிஃபோர்னியாவில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் பல ஏக்கர்கள் தீக்கு இரையானதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வெப்பநிலை பாதிப்பு காரணமாக 200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரேகான் மாகாணத்தில் மட்டும் 116-க்கும் மேற்பட்ட நபர்களும் வாஷிங்டனில் சுமார் 78 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த வெப்பத்தால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : சென்னையில் 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… போக்சோவில் கைதான 3 பேர்!