Natarajan

பிசிசிஐ விதி என்ன… நடராஜனுக்கு வருடாந்திர ஒப்பந்தந்தில் இடம் கிடைக்காதது ஏன்?

தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்காதது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அக்டோபர் 2020 – செப்டம்பர் 2021 வரையிலான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், 28 வீரர்கள் ஆண்டு ஊதியத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.7 கோடி ஒப்பந்தத்தில் இருக்கும் ஏ பிளஸ் பிரிவில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள்.

நீண்டநாட்களாக காயத்தால் ஓய்விலிருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பி பிரிவிலிருந்து ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஏ பிரிவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். மேலும், இந்தப் பிரிவில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இதற்கடுத்து ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பி பிரிவில், விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஸ்ரதுல் தாக்குர், மயங்க் அகர்வால் ஆகியோர் இருக்கிறார்கள். ஆண்டு ஊதியம் ஒரு கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சி பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள். கடந்தாண்டு ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்த கேதர் ஜாதவுக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய நடராஜன் இல்லை.

நடராஜன்

நடராஜனுக்கு ஏன் இடம் கிடைக்கவில்லை?

பிசிசிஐ-யின் விதிப்படி வீரர் ஒருவர் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற அந்த சீசனில் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். இந்த விதியால் டி20 ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் வீரர்களை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாத நிலை இருந்தது. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு போன முறை ஊதிய ஒப்பந்தத்தில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

டி20 போட்டிகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் பெருவாரியான வரவேற்பால், டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் வீரர்களும் ஒப்பந்தத்தில் இடம்பெறும் வகையில் விதிகளில் புதிய திருத்தத்தை பிசிசிஐ சமீபத்தில் சேர்த்தது. அதன்படி, குறைந்தது 10 டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கும் வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் இடம் கொடுக்கலாம் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டிருக்கிறது. நடராஜன் இந்த சீசனில் ஒரு டெஸ்ட், 2 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதனாலேயே தமிழக வீரர் நடராஜனுக்கு ஊதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் பிரித்வி ஷா இந்த சீசனில் ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியிருப்பதால், அவருக்கும் ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரம் சுப்மன் கில் 3 டெஸ்ட்களில் விளையாடியிருப்பதால், அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஊதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் அவர் இந்திய அணிக்காக விளையாட முடியும். அவர் கலந்துகொள்ளும் போட்டிகளுக்கான ஊதியம் மட்டும் அவருக்கு பிசிசிஐ சார்பில் அளிக்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top