தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இங்கிலாந்து டி20 தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகரமாக முடித்திருக்கும் இந்திய அணி, இங்கிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்குத் தயாராகி வருகிறது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் நடந்த அகமதாபாத் மைதானத்திலேயே ஐந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. முதல் போட்டி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
டி20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் காயம்காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறிய வருண் சக்கரவர்த்தி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்தார்.
பயிற்சியின் காரணமாக காயத்திலிருந்து மீண்ட அவர், த்ரோ உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், உடற்தகுதித் தேர்வில் வருண் சக்கரவர்த்தி தோல்வியடைந்ததால், இங்கிலாந்து டி20 தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. யோயோ டெஸ்டில் 2 கி.மீ தூரத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் அவர் ஓடிக் கடக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரத்தில் சொல்கிறார்கள். அவருக்குப் பதிலாக ராகுல் சஹார் அணியில் சேர்க்கப்பட இருக்கிறார். டெஸ்ட் தொடர் முடிந்தது முதலே அவர் பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு வளையத்தில்தான் இருந்து வருகிறார்.
நடராஜனைப் பொறுத்தவரை அவருக்குத் தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் காயத்துக்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை, பயிற்சியில் இருக்கிறார். அந்தக் காயத்திலிருந்து மீண்டுவரும் நடராஜன் 12ம் தேதி வரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் இந்திய அணி நிர்வாகத்துக்கும் பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிலாந்து டி20 தொடரின் பிற்பகுதியில் நடராஜன் அணியுடன் இணைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தொடருக்கான 19 பேர் கொண்ட பட்டியலில் ஒரே ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மட்டுமே.