ஜி.எஸ்.டி வரி மோசடியில் சிக்கி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் காவலில் இருந்து தப்பிய திருநெல்வேலி தி.மு.க பிரமுகரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் பெரிய ராஜா. சிமெண்ட் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிமெண்டை இறக்குமதி செய்து விற்று வந்திருக்கிறார். உள்நாட்டை விட வெளிநாடுகளில் சிமெண்ட் விலை குறைவு என்பதால், இவருக்கு லாபமும் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால், மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய ராஜா வளர்ச்சியடைந்திருக்கிறார்.
இந்தநிலையில், இவர் ஜி.எஸ்.டி வரியில் மோசடி செய்வதாக வணிக வரித்துறை ஜி.எஸ்.டி பிரிவுக்கு புகார் சென்றிருக்கிறது. விசாரணையில், போலியாக ஜி.எஸ்.டி பில் தயாரித்து பலருக்கும் இவர் வழங்கி வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. போலி பில்கள் மூலம் ரூ.6.5 கோடி அளவுக்கு பெரிய ராஜா மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடித்த வணிக வரித்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்னர் உடல்தகுதி சான்றிதழ் பெறுவதற்காக நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெரிய ராஜா, நெஞ்சு வலிப்பதாக அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகாக பெரிய ராஜாவை அனுமதித்திருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காவலில் இருந்து தப்பியோடியிருக்கிறார் பெரியராஜா. இதையடுத்து, வணிக வரித்துறை அதிகாரிகள் ஹைகிரவுண்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து பெரிய ராஜாவை போலீஸார் தேடி வருகிறார்கள். தொழிலில் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய செயலாளராக இருந்தவர். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்.
Also Read – வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யா மனு தள்ளுபடி… பின்னணி என்ன?