உறவுகளையும் உணர்வுகளையும் எளிமையான வார்த்தைகளால் அழகுப்படுத்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பாடல் வரிகளால் ஆறுதல் அளித்த.. ஆறுதல் அளிக்கும்.. அற்புதமான கலைஞன். இயக்குநர் ராமின் வார்த்தைகளில் அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. “ நா.முத்துக்குமார்… தமிழ்மொழி எழுதிப் பார்த்த அதிமுக்கியமான கவிதை”. இந்த வரிகளில் எவ்வளவு உண்மை இருக்குன்றதுக்கு அவரோட படைப்புகளே சாட்சி. இப்போதெல்லாம், யுவனின் ஒவ்வொரு பாடலும் வெளியாகும்போதும் “இந்தப் பாட்டுக்கு நா.முத்துக்குமார் வரிகளை எழுதியிருந்தால் செமயா இருந்துருக்கும்ல” என்று நம்மை யோசிக்க வைத்து அந்தப் பாடலில் ஏதோ ஒரு வெறுமையை உணரச் செய்யும் நிலை அந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் நம்முடன் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த யுவன் – நா.முத்துக்குமார் மேஜிக்கை இன்று அவரது ஃபேன்கள் அதிகளவில் மிஸ் செய்கின்றனர். பாடலாசிரியராக மட்டுமில்லாமல் கவிஞராகவும் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் பலரைக் கவர்ந்தவர். அவரின் எழுத்துக்களில் வெளியான சிறந்த பாடல் வரிகளில் சில, கவிதைகளில் சில மற்றும் அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்களில் சில ஆகியனப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்!

பாடல் வரிகள்..
- “மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்” – உனக்கென இருப்பேன்
- “காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தால்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை” – நெஞ்சோடு கலந்திடு

- “உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் போதும்” – பறவையே எங்கு இருக்கிறாய்
- “குயில் இசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு” – அழகே அழகே
- “எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்” – வெயிலோடு விளையாடி
- “பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே” – பூக்கள் பூக்கும் தருணம்
- “இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி” – ஆனந்த யாழை
கவிதைகள்..
- மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!
- காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி
- சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை.

- கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்.
- அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!
சம்பவங்கள்..
- தமிழ்நாடு இயக்குநர்கள் அசோசியேஷன் ஆண்டு விழாவில் வரிகளை எங்க இருந்தாவது சுட்ருக்கீங்களா அப்டினு லிங்குசாமி, நா.முத்துக்குமார் கிட்ட கேட்பாரு. அதற்கு நா.முத்துகுமார், “நிறைய சுட்ருக்கேன். கவியரசு கண்ணதாசன், கண்களின் வார்த்தைகள் புரியாதா.. காத்திருப்பேன் என்று தெரியாதானு ஒரு பாட்டு எழுதியிருப்பாரு. அதைதான் கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லைனு எழுதினேன். கவிப்பேரரசு வைரமுத்து, இதயம் ஒரு கண்ணாடி, அதில் உனது பிம்பம் ஊஞ்சல் ஆடுதடினு ஒரு வரி எழுதியிருப்பாரு. அந்த வரிமேல ரொம்ப நாளா ஒரு கண்ணு இருந்துட்டே இருந்துச்சு. அதையே கொஞ்சம் எக்ஸ்டன்ஷனா போய் ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயமில்லைனு எழுதினேன். இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்” என்பார்.
- ஆனந்த யாழை பாடல் அரை மணி நேரத்தில் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல். பாடலை எழுதி மெட்டமைத்ததாக நா.முத்துக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நா.முத்துக்குமார் பேசும்போது, “உறவுகள் சம்பந்தப்பட்ட பாடல்கள் ரொம்பவே குறைவாக இருக்குது. தந்தை – மகன், தந்தை – மகள் உறவு பத்தின பாடல்களே இல்லை. அம்மா – மகன் உறவைப் பத்தி ஆயிரம் பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கு. அந்த வகையில், இந்த பாடலை எழுதியதற்காக வெளிநாடுகளிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி பெண் குழந்தையைப் பெற்ற தகப்பன்கள் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு ஒரு முத்தமோ அல்லது கண்ணீர் துளியோ விடுவார்கள். உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
- `வெயில்’ ஜி.வி.பிரகாஷ்க்கு முதல் படம். வசந்தபாலன் நா.முத்துக்குமாரிடம் சுதந்திரமாக வரிகளை எழுத சொல்லிவிட்டார். “கிராமப்புறத்துல பால்ய காலத்துல நாம விளையாடுன விளையாட்டுகள். அதுதான் பாட்டு” என்று வசந்தபாலன் நா.முத்துக்குமாரிடம் கூறியுள்ளார். நா,முத்துக்குமார் `வெயிலோடு விளையாடி’ பாடலை எழுதிவிட்டார். ஜி.வி.பிரகாஷ் தனியாக ட்யூன் பண்ணியிருக்கிறார். ஒருநாள் இயக்குநர் வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ் மற்றும் நா.முத்துக்குமார் என எல்லாருமே சந்தித்துள்ளனர். நா.முத்துக்குமார் எழுதியதை ஜி.வியிடம் கொடுத்துள்ளார். அதை ஜி.வி பார்த்துவிட்டு பாடல் வரிகள் ட்யூனுக்கு அப்படியே மேட்ச் ஆகுது என பாடியே காட்டியுள்ளார்.
Also Read : ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் 5 உணவுகள்!
Hi, I think your website might be having browser
compatibility issues. When I look at your bpog site in Chrome, it looks fine but when opening in Internet Explorer, it has some
overlapping. I just wanted to give you a quick heads up!
Other thern that, wonderful blog! https://glassi-india.mystrikingly.com/