ஹீரோ சூரி

ஹீரோ சூரி எங்க கவனமா இருக்கணும்?

13 வருஷம் சினிமா கனவு, குடும்ப வறுமை, பசி – பட்டினியோட சென்னை வந்து, கிளீனர், பெயிண்ட்டர்-னு கிடைக்கும் வேலையை செஞ்ச நடிகர் சூரி இன்னைக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்துல கதையோட நாயகனா நடிச்சு இருக்காரு. இவரு நாடகம் நடிச்சுட்டு இருந்தப்போ சினிமால நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருந்தாரு… அப்போ என்ன நடந்துச்சு சூரி எப்படி சினிமாவுக்கு வந்தாரு தெரியுமா?. அப்படினுலாம் கேட்க போறது இல்ல… சினிமாவுக்கு வந்து அவர் சாதிச்சதையும், இனி அவர் ஹீரோவா நடிச்சா என்ன கவனிக்கனும்ங்குறதைத்தான் இந்த வீடியோவுலயும் பார்க்க போறோம். அதுக்கு முன்னால அவர் கடந்து வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிட்டு வரலாம்.

சூரி

ரீவைண்ட்!

சூரி அனுபவிச்ச கஷ்டங்கள்!

சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த ஆரம்பக் காலக்கட்டங்கள்ல ரொம்பவே கஷ்டப்படுறார், சூரி. அம்மா கால் பண்ணி என்னப்பா சாப்ட-ன்னு கேட்டப்போ குழாய் தண்ணிதான் குடிச்சேன்-னு சொன்ன சூரியோட ஸ்டோரி ரொம்ப வலியானது. சாலிகிராமத்தில் ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்துக்கு ஆடிசன் நடக்குதுனு சொன்னதை கேட்டு அங்க போய் நின்ன சூரி….அங்கையே மயக்கம் போட்டு விழுந்துருக்காரு…. செட்ல இருந்தவங்க என்னைச்சுனு கேட்டா ‘சாப்பிடல அதான் மயக்கம்-னு சொல்லி இருக்காரு, பிறகு அங்க இருந்தவங்க அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து இருக்காங்க. வாய்ப்பு தேடின காலக்கட்டங்கள்ல 1 ரூபாய் அதிகமா கொடுத்து தயிர்சாதம் கூட வாங்க முடியாத நிலையில இருக்காரு.

சூரி

ஆரம்பம்!

1998-ல் வெளியான ‘மறுமலர்ச்சி’ சினிமா மூலம் அட்மாஸ்ஃபியர் ஆர்டிஸ்டா வந்துட்டு போனார். அதுக்கப்புறம் தோட்டாதரணியோட ஆர்ட் டைரக்‌ஷன் குரூப்ல சேர்ந்தார். ‘சங்கமம்’, ‘ரெட்’, ‘வின்னர்’, ‘காதல்’, ‘ஜி’, ‘பீமா’, ‘தீபாவளி’னு சில படங்கள்ல தலைகாட்டினார். சன்டிவியில வந்த திருமதி செல்வம் சீரியல்லேயும் சின்ன ரோல் கிடைச்சது. பல போராட்டத்துக்கிடையில சுசீந்திரன் இயக்கின வெண்ணிலா கபடிக்குழு படத்துல முக்கியமான ரோல்ல அறிமுகமானார். அந்த படம் பரோட்டா சூரிங்குற அடையாளத்தைக் கொடுத்து தமிழ்சினிமாவுல முக்கியமான இடத்தையும் கொடுத்துச்சு. இன்னைக்கும் அந்த 50 பரோட்டா காமெடி அல்டிமேட்டா இருக்கும். காமெடியில் ஸ்கோர் செய்திருந்ததைத் தாண்டி சில சீன்கள்ல குணச்சித்திர நடிகராவும் ஸ்கோர் பண்ணியிருந்தார். அதேபோல களவாணி, நான் மகான் அல்ல, மனம் கொத்திப் பறவை, சுந்தரபாண்டியன், தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கானு பல படங்கள்ல கவனிக்கத்தக்க காமெடி நடிகராவும் வலம் வந்தார். இங்க இருந்துதான் முதன்மை காமெடி நடிகரா மாறினார். வடிவேலு விட்டிருந்த கேப்பில் தன்னால் முடிந்தவரை நகைச்சுவையை நிரப்பினார்.

Also Read – விக்னேஷ் சிவன் சூப்பர் டைரக்டரா… சுமார் டைரக்டரா?!

சூரி காம்போஸ்!

சிவகார்த்திகேயனுடன் மனம் கொத்தி பறவை, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை எனப் பல படங்களில் வெற்றிக்கூட்டணி அமைத்தார், சூரி. அதே போல் விஷால், ஜீவா, விமல் உள்பட பலருடனும் நடித்து நகைச்சுவையைக் கொடுத்தார். அதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, சுந்தர பாண்டியன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்களில் நகைச்சுவையின் உச்சிக்கு போய் விளையாடியிருந்தார். இதில் உடல்மொழி முக பாவனைகள் என எல்லாமும் கலந்து வடிவேலுவின் சாயலை வெளிப்படுத்தியிருப்பார்.
மறுபுறம் ஜீவா, மாவீரன் கிட்டு, நிமிர்ந்து நில், தொண்டன், மருது ஆகிய படங்களில் குணச்சித்திர நடிப்பிலும் மனதைக் கவர்ந்திருந்தார்.

சூரி

இனி சூரி கவனிக்க வேண்டியது?

கடந்த 20 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேல் படங்களில் நடிச்சிருக்கார். நகைச்சுவை நடிகரா மட்டும் இல்லாமல், குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதிச்சிருக்கார். இப்போ விடுதலை படத்துல கதையின் நாயகனாக நடிச்சிருக்கார். டிரெய்லர் மற்றும் மேக்கிங் வீடியோக்களைப் பார்த்தாலே சூரி இந்தப்படத்துக்காக எந்த அளவுக்கு உழைப்பை கொடுத்திருக்கார்னு நாம தெரிஞ்சுக்கலாம். சூரியோட கரியர்லயே மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுக்கப்போற படமா விடுதலை இருக்கும். கிராமம், நகரம்னு எந்த இடத்துக்கும் செட் ஆவது சூரியோட மிகப்பெரிய பலம். ஹீரோ ஆசை எல்லா காமெடி நடிகர்களுக்கும் சினிமா வாழ்க்கையில் வரக்கூடியதுதான். ஆனால் தமிழ் சினிமா வரலாற்றுல அப்படி மாறுன நடிகர்கள் மத்தியில பெரிசா ஜெயிச்சது நாகேஷ் மட்டும்தான். ஹீரோவாவும் ஒரு ரவுண்டு வந்தார். அதற்குப் பின் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் என எல்லோருமே தவறவிட்டாங்க. அதுக்குக் காரணம், காமெடியில் மட்டுமே தங்களுக்கான முதல் படத்தை முழுநீள காமெடியா ரிலீஸ் பண்ணாங்க. ஆனா, சூரிக்கு பெர்ஃபார்மர் கேட்டகிரி படம். இந்த கதைக்கு பொருந்திப்போகாமல் நிச்சயமாக சூரியை வெற்றிமாறன் செலக்ட் செய்திருக்க மாட்டார். இதற்குப் பின் கொட்டுக்காளியில் கமிட்டாகி நடிச்சுக்கிட்டிருக்கார். இதுவும் பெர்ஃபார்மரா கவனிக்க வைக்கப்போறார்னே நம்பலாம். சூரிக்கு முன் காமெடி நடிகர்கள் முழு நீளமாக காமெடியை கொடுத்து அதன் பின்னர் அதிரடி காட்டியது வேலைக்கு ஆகலை. அதை சூரி செய்யாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வைத்து நடிப்பது கரியர் உச்சத்துக்கு போக வழி செய்யும். மசாலா ஆக்‌ஷன் ஜானருக்குள் போக டிரை பண்ணா கொஞ்சம் கஷ்டம்தான். இனி செய்ய வேண்டியது கதையில் கவனம் செலுத்தி, கதை என்ன டிமாண்ட் பண்ணுதோ அதை செய்ய வேண்டியதுதான். இனி ஹீரோ சூரி இங்கதான் கவனமா இருக்கணும்.

4 thoughts on “ஹீரோ சூரி எங்க கவனமா இருக்கணும்?”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top