kodak

Kodak:கோடாக்கின் கேமரா சாம்ராஜ்யம் ஏன் சரிந்தது… உலகின் டாப் 5 பிராண்ட் திவாலான கதை!

1990களில் கேமரா என்றாலே kodak என்றிருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. உலகின் டாப் 5 பிராண்டுகளில் ஒன்றாக இருந்த கோடாக் நிறுவனம் திவாலானது எப்படி… எங்கே தொடங்கியது சறுக்கல்.

நீங்க 90ஸ் கிட்னா நிச்சயம் கோடாக் கேமராவைப் பயன்படுத்திய அல்லது அதன் பயன்பாட்டை அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்புக் கிடைத்திருக்கும். பள்ளி நாட்களில் சுற்றுலாவின்போது கோடாக் ஃபிலிம் கேமராவை வைத்திருக்கும் நண்பன் கெத்து காட்டியதைப் பார்த்திருக்கலாம். நூறாண்டுகளுக்கு மேலாக போட்டோகிராபி பிசினஸில் கொடிகட்டிப் பறந்த கோடாக் நிறுவனம் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷனில் செய்த தவறு, அந்த நிறுவனத்தைத் திவால் நிலைக்குக் கொண்டு சென்றது.

kodak

ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் 1888-ல் தொடங்கிய நிறுவனம்தான் `The Eastman Kodak Company’. கேமராக்களை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றிருந்த சூழலில் விலை குறைந்த கேமராக்களை அறிமுகப்படுத்தி, எல்லோரும் கேமராவைப் பயன்படுத்தக் கூடிய நிலையை கோடாக் நிறுவனம் உருவாக்கியது. போட்டோகிராபிக்கென மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது மட்டுமல்ல, திரைத்துறையிலும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட கோடாக்கின் முயற்சி விதை போட்டது. கோடாக்கின் வருகைக்குப் பிறகு 1990கள் வரை வீடியோ, போட்டோ என்றாலே அந்த நிறுவனத்தின் பெயர்தான் நினைவுக்கு வரும் என்ற நிலை இருந்தது. அப்போது, உலகின் டாப் 5 பிராண்டுகளில் ஒன்றாக ஜொலித்தது.

1980களின் மத்தியில் போட்டோகிராபி துறை மெல்ல டிஜிட்டலை நோக்கி நகரத் தொடங்கியது. இன்னும் சொல்லப்போனால், முதல் டிஜிட்டல் கேமராவை 1975-ல் முதல்முதலாக வடிவமைத்தது கோடாக் நிறுவன பொறியாளர் ஸ்டீவ் சஸன் என்பவர்தான்.

Kodak

எங்கே தொடங்கியது வீழ்ச்சி?

ஃபிலிம் கேமரா இருந்தவரை உலகின் டாப் பிராண்டாக இருந்த கோடாக். போட்டோகிராபி துறை டிஜிட்டலுக்கு மாறத் தொடங்கிய சூழலில் அந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பிசினஸ் மாடலை மாற்றாததே எனலாம். கோடாக்கின் பிசினஸ் மாடல் என்பது `Razor – Blade’ மாடல் என்பார்கள். அதாவது, ரேஸரை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டால், இயல்பாகவே அவர்களிடம் பிளேடையும் விற்றுவிட முடியும் என்பதுதான் இந்த மாடல். ஃபிலிம் கேமரா விற்பனையில் முன்னணியில் இருந்த அந்த நிறுவனம், ஃபிலிம், பிரிண்டிங் ஷீட் உள்ளிட்ட அது தொடர்பான பொருட்கள் விற்பனை மூலமும் மிகப்பெரிய அளவில் லாபம் குவித்தது.

டிஜிட்டல் பிசினஸ் வளர்ச்சியில் கோடாக் நிறுவனம் நிஜமாகவே அக்கறை காட்டியது. ஆனால், அதன் கவனம் தவறான திசையில் இருந்ததை மிகவும் தாமதமாகவே அது உணர்ந்துகொண்டது. டிஜிட்டல் தளங்கள் வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே போட்டோ ஷேரிங் தளமான Ofoto-வை 2001-ல் கையகப்படுத்தியது. அதை மிகப்பெரிய பிளாட்ஃபார்மாக வளர்ப்பதை விடுத்து, மக்கள் போட்டோக்களை பிரிண்ட் போடுவதை ஊக்குவிக்கும் வகையில் பழைய பிசினஸ் மாடலிலேயே பயணித்ததுதான் அடிப்படையிலேயே அந்த நிறுவனத்துக்கு எதிராக அமைந்துவிட்டது.

டிஜிட்டல் ஃபீல்டில் வளர்ச்சிக்கென தனியாக ஆய்வுக் குழுவை அமைத்திருந்தாலும், தங்கள் ஃபிலிம் பிசினஸை அது பாதிக்கும் என்ற எண்ணத்திலேயே பணிகள் இருந்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது. டிஜிட்டல் மார்க்கெட்டின் அசுரத்தனமான வளர்ச்சி, சோனி – கேனான் நிறுவனங்களின் வருகை என இரண்டு சுழல்களில் சிக்கிய கோடாக், அதிலிருந்து மீளவே முடியவில்லை. ஒரு காலத்தில் டாப் 5 பிராண்டுகளில் ஒன்றாக இருந்த அந்த நிறுவனம் இப்போது 100 மில்லியன் டாலர்களுக்கும் குறைவான மதிப்போடு, 1,45,000-க்கும் மேற்பட்ட வேலை இழப்போடு சுருங்கி நிற்கிறது.

Kodak

டிஜிட்டல் புரட்சி தொடங்கி பெரிதாக வளர்ந்துவந்த நிலையில், ரொம்பவே லேட்டாக 1991-ல் முதல் டிஜிட்டல் கேமராவை அறிமுகப்படுத்தியது கோடாக். ஆனால், அதற்குள் டிஜிட்டல் மார்க்கெட்டை மற்ற நிறுவனங்கள் பிடித்திருந்தன. வருமானம் பெரிதாகக் குறைந்த நிலையில், அப்போது ஐந்தில் ஒரு பங்கு பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது கோடாக். படிப்படியாக அதன் சாம்ராஜ்யம் சரிந்து வந்த நிலையில், 2012- ல் திவாலானதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தது கோடாக். அதிலிருந்து இப்போது மீண்டு கெமிக்கல் உற்பத்தி பிசினஸில் அந்த நிறுவனம் வளரத் தொடங்கியிருக்கிறது.

Also Read – பொருளாதாரம் மீள்வதற்கு ரியல் எஸ்டேட் துறை முக்கியம்… ஏன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top