Tax

Entry Tax என்பது என்ன… ஏன் வசூலிக்கப்பட்டது?

நடிகர் விஜய், தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காருக்கு நுழைவு வரி அல்லது Entry Tax கட்ட விலக்கு கேட்ட விவகாரத்தில், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. Entry Tax என்றால் என்ன… ஏன் வசூலிக்கப்பட்டது?

நடிகர் விஜய் வழக்கு

இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012-ல் சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலை இறக்குமதி செய்திருந்தார். காரின் விலையில் 20% அளவுக்கு நுழைவு வரி செலுத்தக்கோரி வணிக வரித்துறை இணை ஆணையர் தரப்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் வரி செலுத்தாத காரணத்தால், அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காரைப் பதிவு செய்ய முடியவில்லை. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வாரத்தில் இந்த அபராதத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சருக்கான கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Entry Tax

நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தங்களின் வரி வருவாய் ஆதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் Entry Tax எனப்படும் நுழைவு வரியை விதித்து வந்தன. ஒரு மாநிலத்தில் இருந்து பொருட்களை மற்றொரு மாநிலத்துக்குக் கொண்டு செல்லும்போது மாநில எல்லைகளில் இருக்கும் வணிக வரித்துறை செக்போஸ்டில் பொருளுக்கான மதிப்பில் குறிப்பிட்ட அளவு விதிக்கப்படும் நுழைவு வரியை செலுத்திய பிறகே அனுமதிக்கப்படும். வணிகரீதியிலான பொருட்கள் மீது விதிக்கப்படும் இந்த மறைமுக வரி விதிப்பு முறை கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பரில் அமல்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட பொருளின் உரிமையாளர் அல்லது அதை வாங்குபவர், மாநிலத்துக்குள் அதைக் கொண்டுவர நுழைவு வரி செலுத்த வேண்டும்.

Entry Tax

நுழைவு வரி என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். உதாரணமாக, கச்சா எண்ணெய்க்கு பீகார் 2% நுழைவு வரி விதித்திருந்தது. கோவா மாநிலத்துக்குள் ஏர் கண்டிஷனர்களைக் கொண்டுசெல்ல 12.5% வரி செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஆடம்பரப் பொருட்களுக்கான இந்த வரி பொருட்களின் விலையில் 20% வரை விதிக்கப்படுகிறது.

உதாரணமாக கர்நாடகாவில் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் ஷீட்களை விற்பனை செய்யும் ஒருவருக்கு தமிழகத்தில் இருந்து ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்காக அவர், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 5 டிரக்குகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை அனுப்பி வைக்கிறார் என்றால், தமிழகத்துக்குள் நுழையும் முன்பு அந்த ஷீட்களின் மொத்த மதிப்பில் தமிழகம் விதிக்கும் 12% நுழைவு வரியை அவர் கட்ட வேண்டும். அப்படி கட்டினால் மட்டுமே தமிழகத்துக்குள் நுழைய முடியும். இந்த வரியை அவர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களின் ஒரிஜினல் விலையில் சேர்க்க முடியாது. அப்படி சேர்க்கும்பட்சத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்கையில் விலை வித்தியாசம் காரணமாக சிக்கல் ஏற்படும். மாறாக, போக்குவரத்துக்கான தொகையாக அவர் வசூலித்துக் கொள்ள முடியும்.

நுழைவு வரியை வசூலிக்கும் பொறுப்பு வணிக வரித் துறையிடம் இருந்தது. வரி விதிப்பு, வசூல் உள்ளிட்ட நுழைவு வரி தொடர்பான பணிகளை இந்தத் துறை கவனித்துக் கொள்ளும். அத்தியாவசியப் பொருட்களான பால், சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு நுழைவு வரி விதிக்கப்படாது. இவை தவிர வணிகரீதியில் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படும் எண்ணெய், எல்.பி.ஜி, எலெக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர், பெயிண்ட், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஒவ்வொரு விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

விற்பனைக்காக ஒரு மாநிலத்துக்குள் கொண்டுவரப்படும் பொருட்கள் சேதாரம், காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால், செலுத்தப்பட்ட நுழைவு வரியை ரீஃபண்டாகப் பெற முடியும். குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தப் பொருட்களின் உரிமையாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான மாநிலங்களில் ஒரு மாதம் என்று வரையறை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறிப்பு: நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால், நுழைவு வரி என மாநிலங்கள் தனித்தனியாக வரி விதிக்கும் முறை இப்போது நடைமுறையில் இல்லை.

Also Read – Rolls Royce Ghost- காருக்கு வரிவிலக்கு கேட்ட விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top