ரோஹித் ஷர்மா

’ஆஃப் ஸ்பின்னர் டு ஹிட் மேன்’ – ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்பிரேஷனல் பயணம்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் ஆஃப் ஸ்பின்னராக கிரிக்கெட் பழகியிருக்கிறார். ஆஃப் ஸ்பின்னரான அவர் எப்படி ஹிட் மேனாக அவதாரம் எடுத்தார்… ஆஃப் ஸ்பின்னில் ஹாட்ரிக் சாதனையையும் ரோஹித் ஷர்மா தன்வசம் வைத்திருக்கிறார். அவர் ஹாட்ரிக் படைத்த மேட்ச் பத்தியும் தெரிஞ்சுக்கலாம் வாங்க… கிரிக்கெட் தவிர்த்து இன்னொரு விஷயம் மேலயும் ரோஹித்துக்கு கொள்ளை விருப்பம்.. அது என்னனு தெரியுமா.. வீடியோவை முழுசா பாருங்க. அது என்னன்னு நானே பின்னாடி சொல்றேன்.

ரோஹித் ஷர்மா

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் Bansod பகுதியில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தவர் ரோஹித் குருநாத் ஷர்மா. இவரது தந்தை குருநாத் ஷர்மா, தாய் பூர்ணிமா ஷர்மா. இவரது தாய் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் டிப்போவில் பணியாற்றி வந்த குருநாத்துக்கு வருமானம் ரொம்பவே சொற்பம். இதனால், தனது இளம் வயதில் பெரும்பாலான நாட்களை மும்பை போரிவாலி பகுதியில் இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிலேயே கழித்திருக்கிறார் ரோஹித். வார இறுதி நாட்களில் டோம்பிவில்லி பகுதியில் சிங்கிள் ரூமில் குடித்தனம் நடத்திய பெற்றோரைக் காணப்போவார்.

தாத்தா, பாட்டி மற்றும் சித்தப்பா உதவியோடு மும்பை வேளாங்கண்ணி உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். 1999-ம் ஆண்டு விவேகாந்தா இண்டர்நேஷனல் பள்ளி அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டிதான் அவரது வாழ்க்கையையே மாற்றியது. மும்பையின் போரிவில்லி கலாசார மையம் பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடரை நடத்தியது. அதில், விவேகானந்தா சர்வதேச பள்ளிக்கு எதிரான 12 வயதுக்குட்பட்டோருக்கான 10 ஓவர் மேட்சில் முதலில் பேட் செய்த ரோஹித்தின் டீம் 68 ரன்கள் எடுத்தது. அந்தப் போட்டியில் விவேகானந்தா ஸ்கூல் எளிதாக வென்றுவிட்டாலும், ரோஹித் 2 ஓவர்கள் ஆஃப் ஸ்பின்னில் கலக்கியிருந்தார். அந்த மேட்சைப் பார்த்த விவேகானந்தா ஸ்கூலின் பயிற்சியாளர் தினேஷ் லாட், ரோஹித்தின் திறமையை சரியாக அடையாளம் கண்டுகொண்டார்.

பின்னாட்களில், ரோஹித்தைத் தனது பள்ளியில் சேர்ந்து படிக்குமாறு அவரின் குடும்பத்தாரைக் கேட்டிருக்கிறார் தினேஷ். ஆனால், அந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு ரோஹித்தின் குடும்ப பொருளாதார சூழல் இல்லை. இதனால், பள்ளி நிர்வாகத்திடம் பேசி ஸ்காலர்ஷிப் உதவியோடு தினேஷ், இளம் ரோஹித்தைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அந்தப் பள்ளியில் சேர்ந்து முதல் வருடத்தில் தனது ஸ்பின் மூலம் ரோஹித்தால் பெரிய மாயாஜாலம் காட்ட முடியவில்லை.

இரண்டாவது ஆண்டின் ஒருநாள் அதிகாலை பயிற்சியின்போது ரோஹித் பேட் செய்வதை தினேஷ் பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது ஸ்ட்ரோக் பிளே பயிற்சியாளரின் கவனத்தை ஈர்க்கவே, அவரை நெட் பிராக்டீஸுக்கு அனுப்பத் தொடங்கியிருக்கிறார். அந்தப் புள்ளிதான் ஆஃப் ஸ்பின்னர் ரோஹித், ஹிட் மேனாக ஒரு பேட்டராக உருவெடுக்கக் காரணமாக இருந்த தருணம். அதன்பின்னர், பேட்டிங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர், இன்று வொயிட் பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்டர்களுள் முக்கியமானவராக மாற்றிக்கொண்டார்.

அறிமுகம்

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் மார்ச் 2005-ல் நடந்த மத்திய மண்டலத்துக்கு எதிரான தியோதார் டிராபி போட்டியில் மேற்கு மண்டல அணிக்காக அறிமுக வீரராகக் களம்கண்டார் ரோஹித். அந்தப் போட்டியில் 8-வது வீரராகக் களமிறங்கிய ரோஹித், 31 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக நின்றார். அந்தப் போட்டியில்தான் புஜாராவும் ரவீந்திர ஜடேஜாவும் அறிமுக வீரர்களாகக் களமிறங்கியிருந்தனர். அந்தத் தொடரில் வடக்கு மண்டல அணிக்கெதிரான போட்டியில் 123 பந்துகளில் 142 ரன்கள் அடித்து லைம் லைட்டுக்கு வந்தார் ரோஹித். தனது உள்ளூர் கிரிக்கெட் கரியர் முழுவதையும் மும்பை அணியுடனேயே கழித்தார் ரோஹித். 2006-07 ரஞ்சி சீசனில் அறிமுக வீரராகக் களமிறங்கி, ஒரு போட்டியில் 205 ரன்கள் எடுத்தார். அதேபோல், 2009 சீசனில் குஜராத்துக்கு எதிராக இவர் அடித்த 309 ரன்கள்தான் ரஞ்சியில் இவரது ஹைஸ்கோர். 2013-14 சீசனில் அஜித் அகார்கர் ஓய்வுக்குப் பின், மும்பை டீமின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

2007-ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 7-வது பேட்ஸ்மேனாக இருந்த ரோஹித் ஷர்மாவுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை. அதன்பிறகு, இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரராக அணிக்கும் வருவதும் போவதுமாக இருந்த ரோஹித்தின் இடம், சுரேஷ் ரெய்னா, விராட் கோலியால் கேள்விக்குள்ளானது. ஃபார்ம் இல்லாமல் தவித்ததால், 2011 உலகக் கோப்பையில் செலெக்ட் ஆகாத ரோஹித்தின் கரியரில் தோனி எடுத்த முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ரோஹித் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்த தோனி, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி சீரிஸில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித்தை ஷிகர் தவானுடன் ஓப்பனராகக் களமிறக்கினார். அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ரோஹித், ஓப்பனராக அசத்தினார். தவான் – ரோஹித் ஜோடி அந்த சீரிஸில் மிரட்டவே, ஹோஸ்டான இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கப்பை அடித்தது இந்தியா. அதன் பின்னர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓபனராக விளையாடி வருகிறார் ரோஹித். ஒரு நாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்கள் அடித்திருக்கும் ஒரே வீரர் ரோஹித் ஷர்மாதான். அதேபோல், இவர் அடித்த 264 ரன்கள்தான், ஒரு நாள் போட்டிகளின் ஹை ஸ்கோர்.

டி20 போட்டியைப் பொறுத்தவரை 2007 டி20 உலகக் கோப்பை தொடரில்தான் அறிமுக வீரராக களம் கண்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இந்தியா வெற்றிபெற உறுதுணையாக இருந்தார். 2015 அக்டோபரில் தரம்சாலாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 106 ரன்கள் அடித்து, டி20 ஃபார்மேட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம், மூன்றுவிதமான ஃபார்மேட்டுகளிலும் சதமடித்த இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ரோஹித், சச்சினின் ஃபேர்வெல் சீரிஸில்தான் அறிமுக வீரராகக் களமிறங்கினார். கொல்கத்த ஈடன் கார்டனில் விளையாடிய முதல் டெஸ்டிலேயே 177 ரன்கள் குவித்து, தவானுக்குப் (187) பிறகு அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஹிட் மேன் பெயர் ரகசியம்

தனக்கு ஹிட்மேன் என்கிற பெயர் எப்போது வந்தது என்பது குறித்து ரோஹித் ஷர்மாவே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 2013 நவம்பர் 2-ம் தேதி நடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா, 209 ரன்கள் குவிப்பார். பேட்டிங்கில் ரொம்பவே டயர்டான பிறகு, இண்டர்வியூவுக்கு வந்த ரோஹித்திடம் பிரசண்டர், மேன் நீங்க ஹிட் மேன் மாதிரியே பாலை அடிக்கிறீங்க என்று சொல்லியிருக்கிறார். அந்தப் போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டோடு, மேன் ஆஃப் தி சீரிஸ் அவார்டும் ரோஹித்துக்கே சொந்தம். பரிசளிப்பு நிகழ்ச்சியில் இருந்த ரவி சாஸ்திரி, `They Call him Hitman’ என்று அறிமுகப்படுத்தவே, அதுவே பின்னர் நிலைத்துப் போனதாக ரோஹித் பகிர்ந்திருந்தார்.

ஐபிஎல்

2008ம் ஆண்டு முதலே ரோஹித் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2009 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆஃப் ஸ்பின்னில் கலக்கிய இவர், அபிஷேக் நயார், ஹர்பஜன் சிங் மற்றும் ஜேபி டுமினி ஆகிய மூன்று பேரை அடுத்தடுத்து வீழ்த்தி, ஹாட்ரிக் சாதனையும் படைத்தார். அதன்பின்னர், 2011 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2013 சீசனில் கேப்டனாக உயர்ந்த ரோஹித் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் டீம் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை அடித்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் சக்ஸஸ்ஃபுல் கேப்டன்களுள் முக்கியமானவர் ரோஹித்.

கிரிக்கெட்டைத் தவிர்த்து விலங்குகள் மேல் ரொம்பவே பிரியம் கொண்டவர் ரோஹித். WWF அமைப்பின் இந்திய Rhino Ambassador நம்ம ஹிட்மேன்தான். அதேபோல், பீட்டா அமைப்பு சார்பாகவும் பல்வேறு விழிப்புணர்வுகளைச் செய்து வருகிறார்.

ஹிட்மேனோட சாதனைகள்ல எந்தவொரு சாதனையை யாரும் முறியடிக்கவே முடியாதுனு நீங்க நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

3 thoughts on “’ஆஃப் ஸ்பின்னர் டு ஹிட் மேன்’ – ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்பிரேஷனல் பயணம்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top