சி.எஸ்.கே

சி.எஸ்.கே-வின் 54 டாட்பால்; 7/3 டு வெற்றி – #CSKvMI மேட்ச்சின் 5 சுவாரஸ்யங்கள்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சி.எஸ்.கே, கிரண் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இடைவேளைக்குப் பின் தொடங்கிய ஐபிஎல்!

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி, பயோ பபுள் சூழலில் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்றுப் பரவலால் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதன்படி, ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதியின் முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே – மும்பை அணிகள் மோதின.

CSKvMI மேட்சின் 5 சுவாரஸ்யங்கள்!

பவர்பிளே அதிர்ச்சி

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே அணிக்கு பவர்பிளே அதிர்ச்சிகரமானதாக இருந்தது. முதல் ஓவரிலேயே டூப்ளஸிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்கவே, அடுத்தடுத்து, மொயின் அலி, ரெய்னா ஆகியோர் வெளியேறினர். அம்பதி ராயுடு மிலின் வீசிய பந்துவீச்சில் காயமடைந்து வெளியேற, பவர்பிளேவின் கடைசி பந்தில் தோனியும் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் சி.எஸ்.கே 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ராயுடுவும் காயத்தால் வெளியேறியிருந்தார்.

தோனி
தோனி (Photo -BCCI)

கெய்க்வாட் அசத்தல்

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் (Photo -BCCI)

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து 81 ரன்கள் குவித்த கெய்க்வாட், சி.எஸ்.கே-வை சரிவிலிருந்து மீட்டார். ஜடேஜா 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். அடுத்து வந்த பிராவோ, 8 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட், 58 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இதில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

போல்ட்டின் சோகம்!

டிரெண்ட் போல்ட்
டிரெண்ட் போல்ட் (Photo -BCCI)

சி.எஸ்.கே-வின் டாப் ஆர்டரை பவர்பிளேவில் பதம் பார்த்த மும்பை பௌலர் டிரெண்ட் போல்ட் வீசிய 19-வது ஓவர், அவரின் டி20 கரியரில் மறக்கக் கூடிய ஓவராக அமைந்துவிட்டது. அப்போது பேட் செய்துகொண்டிருந்த கெய்க்வாட் – டிவைன் பிராவோ ஜோடி, அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உதவியோடு 24 ரன்கள் எடுத்தது. டி20 கரியரில் போல்ட் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன் இதுவே. மும்பை பௌலர் பும்ராவுக்கு இது நூறாவது ஐபிஎல் போட்டி. அதனால், 100 என்ற எண் பொறிக்கப்பட்ட ஸ்பெஷல் ஜெர்ஸியோடு அவர் களமிறங்கினார். 20 ஓவர்களில் சி.எஸ்.கே 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.

திணறல் மும்பை

தீபக் சஹார்
தீபக் சஹார் (Photo -BCCI)

ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா இல்லாமல் களம்கண்ட மும்பை அணியின் தொடக்க வீரராக டிகாக்குடன் அறிமுக வீரர் அன்மோல்ப்ரீத் சிங் களம்கண்டார். பாசிட்டிவாக சேஸிங்கைத் தொடங்கிய டிகாக், ஹசல்வுட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து கலக்கிய அன்மோல் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் சி.எஸ்.கே-வின் டி20 ஸ்பெஷலிஸ்ட் தீபக் சஹார். சூர்யகுமார், ஷ்ரதுல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததை அடுத்து, மும்பை விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. கடைசி 10 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 95 ரன்கள் தேவைப்பட்டது. 41 பந்துகளில் 70 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹசல்வுட் பந்துவீச்சில் பொல்லார்ட் எல்.பி.டபிள்யூவாகி வெளியேற மும்பையில் நம்பிக்கை குலைந்தது. கடைசி ஓவர்கள் அதிரடி காட்டிய திவாரியின் பேட்டிங் அந்த அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சி.எஸ்.கே புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

54 டாட் பால்!

சி.எஸ்.கே
சி.எஸ்.கே – தோனி (Photo -BCCI)

இந்தப் போட்டியில் சி.எஸ்.கே பேட்டிங்கில் 54 பந்துகளில் அந்த அணி ரன் எதுவும் எடுக்கவில்லை. அதேபோல், பவர்பிளேவில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஒரு அணி வெற்றி பெறுவது ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.

Also Read – உலகக் கோப்பையோடு விடைபெறும் ரவிசாஸ்திரி… இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top