சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 186 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் இதில் பங்கேற்க இருக்கின்றன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், பெண்கள் பிரிவில் 160 நாடுகளைச் சேர்ந்த 162 அணிகள் பங்கேற்பதும் புதிய ரெக்கார்டுதான். இந்தியா சார்பில் 3 அணிகள் பங்கேற்கின்றன. விஸ்வநாதன் ஆனந்த் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மெண்டாராக இருக்கிறார். ஜூலை 2022-ல் வெளியான FIDE ரேட்டிங்கில் டாப் 10-ல் இருக்கும் வீரர்களில் 7 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். தொடருக்கு முந்தைய ரேட்டிங்படி பார்த்தால் 2772 புள்ளிகளுடன் அமெரிக்கா வலுவான அணியாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, 2696 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், மேக்னஸ் கார்ல்ஸனின் நார்வே, 2692 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
சரி இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எப்படி நடக்கும்… விதிமுறைகள் என்னென்ன… புள்ளிகள் எப்படி கொடுப்பார்கள்… வாங்க தெரிஞ்சுக்கலாம்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி விதிமுறைகள்
- போட்டி 11 சுற்றுகளாக நடக்கும். ஒவ்வொரு அணியும் சுற்றுக்கு 4 வீரர்களைக் களமிறக்குவார்கள். மாற்றுவீரராக ஒருவரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
- அணியின் கேப்டன் போட்டியில் விளையாடுபவராக இருக்க வேண்டும். மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்.
- ஸ்விஸ் டைம் ஃபார்மேட் எனப்படும் நேர முறையைப் பின்பற்றி போட்டி நடக்கும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் 40 காய் நகர்த்தல்களுக்கு 90 நிமிடங்களும், அடுத்ததாக கூடுதல் 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். 40-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடிகள்தான் நேரம்.
- 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் டிராவில் முடித்துக் கொள்ள அனுமதி இல்லை.
- போட்டியில் வெற்றிபெற்றால் ஒரு புள்ளி, டிராவில் முடிந்தால் அரைப்புள்ளி வழங்கப்படும். ஒரு சுற்றின் நான்கு போட்டிகளும் முடிவடைந்தபிறகு, எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறதோ, அந்த அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
- 11 சுற்றுகள் முடிவில் எந்த அணி அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கிறதோ, அந்த அணிக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படும். ஒருவேளை இரு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெற்றிருந்தால் போட்டிகளில் அதிக வெற்றி, அவர்கள் வீழ்த்திய அணிகளின் வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வெற்றி பெற்ற அணியை முடிவு செய்வார்கள். இரண்டாவது இடம்பெறும் அணிக்கு வெள்ளி, மூன்றாவது இடம்பிடிக்கும் அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.
- அணிகள் தவிர தனி நபர்களாக சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.