அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பைவிட அதிக வாக்குகள் பெற்று அமெரிக்காவின் அதிபரானார். இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் மல்யுத்த வீரர் ராக் அதிபராக 46 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதோடு உலக அளவில் கவனத்தையும் பெற்றுள்ளது.
WWE போட்டிகளில் ராக் என்ற பெயரில் அறிமுகமாவர் டிவைன் ஜான்சன். தற்போது ஹாலிவுட்டில் பிரபலமான முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களின் ஒருவராக உள்ளார். ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ், ஜூமாஞ்ஜி, ராம்பேஜ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது டிசி’ஸ் லீக் ஆஃப் சூப்பர் பெட்ஸ், பிளாக் ஆடம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் 46 சதவிகிதம் அமெரிக்கர்கள் டிவைன் ஜான்சன் அமெரிக்காவின் அதிபராக ஆக வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பத்திரிக்கை ஒன்றுக்கு ராக் அளித்த பேட்டி ஒன்றில் விளையாட்டாக, “அமெரிக்க மக்கள் விரும்பினால் அதிபர் தேர்தலில் போட்டியிட நான் தயார். அமெரிக்காவையும் அதன் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். மக்கள் என்னுடைய குறிக்கோளை விரும்பினால் நிச்சயம் அதற்கான முயற்சிகளில் நான் இறங்குவேன்” என தெரிவித்திருந்தார். எனினும், மக்களின் ஆதரவு தனக்கு முக்கியம் எனவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்துதான் அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பின் முடிவைப் பார்த்த பின்னர் டிவைன் ஜான்சன், “நான் எனது நாட்டை அதிகளவில் நேசிக்கிறேன். அமெரிக்காவில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்காக நிறையவே நன்றிக் கடன்பட்டுள்ளேன். நான் அரசியல்வாதியோ அல்லது அரசியலில் ஆர்வம் கொண்டவனோ கிடையாது. எனினும், 46 சதவிகித மக்கள் நான் அதிபராக வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். இது என்னை ஊக்கப்படுத்தவும் விஷயங்களை கூர்ந்து கவனிக்கவும் கற்றுக்கொள்ளவும் தூண்டுகிறது. எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் செலிபிரிட்டிகள் அரசியல் களத்தில் இறங்குவது புதிய விஷயம் அல்ல. அர்னால்டு, ரொனால்ட் ரீகன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் அதிகாரங்களில் இருந்துள்ளனர். எனவே, ராக் அரசியல் களத்தில் இறங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுவார் என தெரிவிக்கவில்லை. ஆனால், அவருக்கு அரசியலில் இறங்க இருப்பது விருப்பம் உள்ளது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள்.
Also Read : ஊரையே எதிர்த்து ஒற்றை ஆளாக நின்ற பெண் பூசாரி – பின்னியக்காளின் 12 ஆண்டு போராட்டம்!