தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணி நடிப்பையும் நடனத்தையும் பதிவு செய்தவர் நடிகர் நாகேஷ். மைசூரில் பிறந்தாலும் தந்தையின் ரயில்வே வேலையால் கொங்கு மண்ணில் பள்ளி, கல்லூரி நாட்களைக் கழித்தவர். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்த காலத்தில் அடுத்தடுத்து 3 முறை அம்மை நோய் தாக்கியதில் முகம் முழுவதும் தழும்புகள். அதனைக் கண்ணாடியில் பார்த்தபோது இவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியதாம். ஆனால், அந்தத் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீண்டு தாமரைக்குளம் படம் தொடங்கி தசாவதாரம் வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் காமெடி வேடங்களில் மட்டும் இவர் நடித்த படங்கள் 45, இதில் 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா.
கே.பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம் நாடகம் இவரை வேற லெவலுக்குக் கொண்டு செல்லவே, அதே பெயரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எந்த அம்மைத் தழும்புகளால் ஆரம்ப காலத்தில் திரையுலகில் நிராகரிக்கப்பட்டாரோ, அதே தழும்புகளைத் தனி அடையாளமாக்கி முத்திரை பதித்தவர். நடிகர் நாகேஷ் பிறந்தது 1933-ம் ஆண்டு செப்டம்பர் 27; மறைந்தது 2009 ஜனவரி 31-ம் தேதி. தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தனது நகைச்சுவையாலும் பிரத்யேக நடனத்தாலும் விருந்து படைந்த நடிகர் நாகேஷூக்கு கமல்ஹாசனின் `நம்மவர்’ படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது. மகளைப் பறிகொடுத்த சோகத்தில் பத்து நிமிடங்கள் இவர் புலம்பும் காட்சி கண்ணீரை வரவழைத்துவிடும்.
நடிகர் நாகேஷ் வாழ்வில் நடந்த 3 சம்பவங்கள்!
நகேஷ் – தாயாரின் பிரிவு
சென்னையில் ரயில்வே குமாஸ்தே வேலையை சினிமாவுக்காக உதறிய நாகேஷின் ஆரம்ப நாட்கள் ரொம்பவே சிரமமானது. பின்னாட்களில் சினிமாவில் வாய்ப்புக் கிடைத்து சம்பாதிக்கத் தொடங்கிய பின்னரும் தனது தாய்க்கு எழுதிய கடிதங்களில் தான் சிரமப்பட்டு வருவதாகவே குறிப்பிட்டிருக்கிறார். இதற்குக் காரணம், சிறுவயது முதலே பல சிரமங்களுக்கிடையே தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது தாயார் முன்பு ஒரு பெட்டியில் பணக் கட்டுகளை அடுக்கிக் கொண்டு போய், அதைத் திறந்து காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் நாகேஷ். அந்த நாளும் வந்தது, ஒரு டிரங்குப் பெட்டியில் 500 ரூபாய் நோட்டுகள் சில லட்சங்களை அடுக்கிக் கொண்டு காரில் சென்னையில் இருந்து தாராபுரம் புறப்படுகிறார் நாகேஷ். அவர் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும்போது, தாயார் இறந்த செய்தி சென்னைக்கு தந்தியாக வருகிறது. அந்த காலத்தில் போன் வசதி இல்லாததால், இந்த செய்தி தெரியாமலேயே தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காரில் சென்றுகொண்டிருக்கிறார் நாகேஷ். மகனுக்காகக் காத்திருந்து பார்த்துவிட்டு காலை 7 மணியளவில் நகேஷ் தாயாரின் சிதைக்கு தீ முட்டியிருக்கிறார்கள். அந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் சுடுகாட்டுக்குச் சென்ற நாகேஷ், கடைசியாக ஒருமுறை கூட தாயாரின் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று கதறியிருக்கிறார். ஒருவேளை தாம் நன்றாக இருப்பதைத் தாயாரிடம் சொல்லியிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டாரே என்று வேதனையில் வெம்பியிருக்கிறார். அந்த வேகத்தில் சென்னை திரும்பி வந்த நாகேஷ், 17 நாட்கள் தூக்கமே இல்லாமல் ஒரு படத்துக்கு 2 மணி நேரம் கால்ஷீட் என 6 படங்களில் தீயாய் வேலை செய்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிரமை பிடித்தவர்போல் இருப்பார் நாகேஷ் என்று ஒருமுறை நடிகர் சிவக்குமார் இந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
நாகேஷ் – திருவிளையாடல் `தருமி’
சிவாஜியோடு நாகேஷ் ஏழைப் புலவன் `தருமி’ வேடத்தில் நடித்த திருவிளையாடல் படம் தலைமுறைகள் கடந்தும் கொண்டாடப்படும். அந்தப் படத்தில் தனது காட்சிகளை ஒன்றரை நாட்களில் முடித்துக் கொடுத்திருக்கிறார் நாகேஷ். அந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த நடிகர் சிவாஜி, நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறான். அவனது காட்சிகளை நீக்கிவிடாதீர்கள் என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அன்புக் கட்டளை இட்டாராம்.
படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னர் நாகேஷின் கால்ஷீட் கேட்டு இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் மேனேஜர் நாகேஷைத் தொடர்புகொண்டிருக்கிறார். நாகேஷ் புகழின் உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் அவரின் குடும்பத்தில் ஒரு கொலை நடக்கவே விசாரணை என குடும்பமே அலைந்துகொண்டிருந்த நேரம். அப்போது தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த மேனேஜரிடம், விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் என அலைந்துகொண்டிருக்கிறேன். ஒருவேளை சிறைக்கு செல்லக்கூட நேரிடலாம். அதனால், வேறு ஒருவரை வைத்து அந்த காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளுங்கள் என்று நாகேஷ் சொல்லியிருக்கிறார். ஆனால், நாகேஷ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஏ.பி.என், நாகேஷ் நடிப்பில்தான் அந்த கேரக்டர் உருவாக வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், விடுதலையான பிறகு அந்த காட்சிகளை ஷூட் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். அந்த நம்பிக்கையால் நெகிழ்ந்துபோன நாகேஷ், திட்டமிட்டபடி அதை நடித்துக் கொடுத்திருக்கிறார்.
கௌரவம் கோர்ட் சீன்
நடிகர் சிவாஜி புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் கௌரவம் படம் தயாராகிக் கொண்டிருந்தது. கோர்ட் சீனில் இங்கிலீஷ் டயாலாக்குகளோடு சிவாஜி வசனம் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த சீனை முடித்து வந்த சிவாஜியின் நடிப்பை எல்லாரும் பாராட்டியிருக்கிறார்கள். அப்போது அமைதியாக இருந்த நாகேஷிடம், என்னடா எல்லாரும் நடிப்பு பத்தி சொல்லிட்டு இருக்காங்க. நீ எதுவுமே சொல்லாம நிக்குற’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு நாகேஷ்,மன்னிக்கணும். இந்த சீன்ல உங்க நடிப்பு சுமார்தான்’ என்று சொல்லவும் அங்கு இருந்தவர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். `வழக்கமாக இங்கிலீஷ் டயலாக்லாம் நல்லா பேசுவீங்க. ஆனா, இப்போ எதோ சரியில்ல. இவனும் அதான் நினைக்கிறான்’ என அருகில் இருந்த ஒய்.ஜி.மகேந்திரனையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் நாகேஷ். மகேந்திரனின் முதல் படம் இது.
நாகேஷின் விமர்சனத்துக்கு சிவாஜி என்ன சொல்லப்போகிறாரோ என செட்டில் இருந்தவர்கள் பதறிய நிலையில், நம்ம இங்கிலீஷ் அவ்ளோதான். நான் என்ன மகேந்திரனோட அம்மா நடத்துற ஸ்கூல்லயா படிச்சேன். அங்க எல்லாம் நம்மளை சேர்த்துக்குவாங்களா’ என்று இயல்பாகப் பேசிவிட்டு, ஒளிப்பதிவாளர் வின்சென்டிடம் சென்று இன்னொரு டேக் எடுக்கலாமா என்று கூறியிருக்கிறார். இரண்டாவது எடுத்த ஷாட்டில் சிவாஜி அசத்தவே, அவரை ஓடிச் சென்று கட்டியணைத்த நாகேஷ்,அதான் சிவாஜியண்ணா’ என்று பாராட்டியிருக்கிறார்.
Also Read – சினிமாவைத் தாண்டி தனுஷூக்கும் பாபா பாஸ்கருக்குமிடையே இருக்கும் ரிலேஷன்ஷிப்!