மதுரை

Madurai: சர்ச்சையான அரசுப் பேருந்து ஓட்டுநர் மீதான தாக்குதல்… மதுரை சம்பவத்தின் பின்னணி என்ன?

மதுரை, காளவாசல் அருகே பேருந்து ஓட்டுநருக்கும் கார் ஓட்டுநருக்கும் இடையே நடந்த பிரச்னை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அரசியல் சலசலப்புக்கு காரணம் என்ன?

மதுரையில் என்ன நடந்தது?

மதுரை காளவாசல் சந்திப்பு வழியாக திருப்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று கடந்த 21-ம் தேதி சென்றுகொண்டிருந்தது. காளவாசல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இன்னோவா கார் ஒன்று பேருந்தை முந்தி செல்ல பலமுறை ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், சாலை போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவும் குறுகலாகவும் இருந்ததால் பேருந்து ஒட்டுநரால் வழிவிட முடியவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கார் முந்தி சென்றபோது பஸ் மீது உரசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆத்திரமடைந்த இன்னோவா டிரைவர் பேருந்தை வழிமறித்து பேருந்தின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை அவதூறாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாக்கவும் செய்திருக்கிறார். இந்த சம்பவத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். அதுமட்டுமில்லாமல் வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பேருந்தின் பின்னால் வந்த பிற அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் கார் ஓட்டுநரை கைது செய்யக்கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன எண் மூலம் கார் ஓட்டுநரை கண்டுபிடித்தனர். சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சுரேஷையும் போலீசார் கைது செய்தனர்

அரசியல் சலசலப்பு

பேருந்து ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை இன்னோவா டிரைவர் சுரேஷ் காரின் மீது ஏறி நின்று தாக்கிய வீடியோ வைரலானதை பா.ஜ.க நிர்வாகிகள், அ.தி.மு.க-வினர் தங்களது பக்கங்களில் பகிர்ந்து, தி.மு.ககாரர்கள் ரவுடியிசம் செய்கிறார்கள், அராஜகம் செய்கிறார்கள் என்ற தொனியில் செய்திகளை பரப்ப ஆரம்பித்தனர். தி.மு.க-வினர் பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ். பி. செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து, “11.05 க்கு மண் அள்ளும்போது எந்த அதிகாரியும் தடுக்கமாட்டான். மீறி தடுத்தா அவன் இருக்க மாட்டானு சொல்லும்போதே சுதாரிச்சு இருக்கனும். தி.மு.க ஆட்சியில் தி.மு.க-காரன ஓவர்டேக் பண்ணவிடாம வண்டி ஓட்டுன அவன் கையை வெட்டுடா தி.மு.க ரவுடியிசத்தால் தமிழகம் இனி மெல்லச் சாகும்” என்று பதிவிட்டிருந்தார்.

காவல்துறை விளக்கம்

அரசுப் பேருந்து ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனை தாக்கியவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரைக் கிடைக்கவில்லை. ஓட்டுநரின் கை வெட்டப்படவில்லை, மாறாக சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பேருந்து ஓட்டுநருக்கும் கார் ஓட்டுநருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கார் டிரைவர் சுரேஷ் கல்லால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியும், பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதில் அவருக்கு வலது கை விரலில் காயத்தையும் ஏற்படுத்தியுள்ளார். பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சுரேஷ் என்பவர் எந்த அமைப்பையும் சாராதவர்” என்று தெரிவித்துள்ளனர்.

Also Read : கேரளாவை உலுக்கிய அனுபமா வழக்கு; தாயின் ஓராண்டு போராட்டம் #Timeline

Kerala Illegal Adoption Case: கேரளாவை உலுக்கிய அனுபமா வழக்கு; தாயின் ஓராண்டு போராட்டம் #Timeline

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top