பேரன்பு படத்துல அஞ்சலி மம்முட்டிகூட நடிச்சாங்க. அந்தப் படத்தோட ஷூட்டிங் அப்போ ஒருநாள் டைரக்டர் ராம்கிட்ட, மம்முட்டி, “இந்த பொண்ணு பயங்கர டெடிகேட். செமயா பெர்ஃபார்ம் பண்றாங்க”னு சொல்லியிருக்காரு. இதை ராம், அஞ்சலிக்கிட்ட சொன்னதும் கால் தரைல படமா பறந்துட்டே இருந்துருக்காங்க. ஆனால், மம்முட்டி சொன்னதுல நமக்கு பெரிய ஆச்சரியம் ஒண்ணும் இல்லை. அஞ்சலியோட நடிப்புத் திறமையை ‘கற்றது தமிழ்’ன்ற முதல் படத்துலயே பார்த்து நாமலாம் வியந்துட்டோம். இன்னைக்கு டாப்ல இருக்குற மற்ற நடிகைகள் மாதிரி அஞ்சலியையும் இன்னும் அதிகமா கொண்டாடணும்னு எப்பவும் தோணும். அதுக்கு காரணம் அஞ்சலி பண்ண கேரக்டர்ஸ்தான். தன்னோட கரியர்ல அஞ்சலி பண்ண தரமான 5 கேரக்டர்களைப் பற்றிதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
கற்றது தமிழ் – ஆனந்தி
ராம் எடுத்த கற்றது தமிழ் படத்தோட ஹீரோ யாருனு கேட்டா, ‘யுவன் ஷங்கர் ராஜா’னுதான் சொல்லத்தோணும். ஆனால், அதையும் தாண்டி நம்மள கவனிக்க வைக்கிறது ரெண்டு பேர். ஒண்ணு, பிரபாகரனா நடிச்ச ஜீவா. இன்னொன்னு, ஆனந்தியா நடிச்ச, அஞ்சலி. கற்றது தமிழ்ல அஞ்சலி, அஞ்சலியா ஒரு ஃப்ரேம்லகூட நமக்கு தெரியமாட்டாங்க. ஆனந்தியாவே வாழ்ந்திருப்பாங்க. யாருடா இந்தப் பொண்ணுனு படம் வந்து பல வருஷம் கழிச்சு புதுசா படம் பார்க்குறவங்களையும் வியக்க வைச்சிருவாங்க. ‘அம்மா இல்லாத இந்த நேரத்துல என் கையால உனக்கு சமைக்க முடிஞ்சது வெறும் ஒரு கப் சுடு தண்ணிதான். பிளீஸ் குடிச்சிடு”னு ஆனந்தி சொல்லும்போது, சுடு தண்ணி வழியாக்கூட காதலை சொல்ல முடியுமானு நினைச்சேன்.
ஆனந்தி சுடு தண்ணி கொடுத்ததுக்கு அப்புறம், நாக்கு பொத்துப்போகும்போதுலாம் ஆனந்தியும் ஆட்டோமெடிக்கா கூடவே நியாபகம் வருவாங்க. சின்ன வயசுல ‘நெஜமாதான் சொல்றியா?’னு கேக்குறதுல இருந்து காடு, மலை கடந்து தேடி வந்தவன்கிட்ட ‘இங்க எப்படி வந்த’னு கேக்குறது வரைக்கும், ரயில்வே தண்டவாளத்துல விளையாடுனதுல இருந்து ரயில்வே தண்டவாளத்துலயே அவங்க வாழ்க்கை முடியுறது வரைக்கும் ஆனந்தி ரோல்ல அஞ்சலி அப்படி பொருந்தியிருப்பாங்க. “ஒரு கேரக்டர்ல நாம நடிக்கிறோம்னு தெரியக்கூடாது. அந்தக் கேரக்டராவே வாழ்ந்திடணும்”னு அஞ்சலி சொல்லுவாங்க. அதுக்கு இந்த கேரக்டர் ஒரு எக்ஸாம்பிள். ஆனந்தி எப்பவுமே…Divine piece of god!தான்.
அங்காடித்தெரு – கனி
சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகளில் ஊழியர்கள் எப்படிலாம் நடத்தப்படுறாங்கன்றதை தைரியமா சொன்ன படம் அங்காடித்தெரு. அந்தப் படத்துல கனின்ற கேரக்டர்ல அஞ்சலி நடிச்சிருப்பாங்க. திருநெல்வேலி பாஷை பேசுற பொண்ணா புதுசா வர்ற பசங்கக்கிட்ட அட்ராசிட்டி பண்ணிக்கிட்டு, சூப்பர்வைஸர்கிட்ட அடி வாங்கிட்டு, உன் பேரை சொல்லும்போதேனு காதல் பண்ணிட்டு வாழுற ஒரு கேரக்டர். உண்மையிலேயே அங்க வேலை பார்க்குற பெண்களோட மனநிலையை, சூப்பர்வைஸர் உடல்ரீதியா துன்புறுத்துறதை வீட்டுக்காக பொறுத்துக்கிட்டு வேலை பார்க்குறதை தன்னோட நடிப்பு மூலமா துல்லியமா வெளிப்படுத்தியிருப்பாங்க. ஜோதிலிங்கம், கனியை போட்டுக்குடுக்குற சீன் ஒண்ணு வரும். அப்போ, எப்படி கருங்காலிக்கிட்ட இருந்து தப்பிச்சேன்னு சொல்ற சீன்லலாம் நம்மளயும் அழ வைச்சிருப்பாங்க. இந்தப் படத்துக்கு சரியான தேர்வு, அஞ்சலி. அவங்க நடிச்சதுல ஒன் ஆஃப் தி பெஸ்ட் கேரக்டரும்கூட. கற்றது தமிழ், அங்காடித்தெரு – இந்த ரெண்டு படத்துக்குமே ஃபிலிம் ஃபேர் அவார்ட் வாங்குனாங்க.
எங்கேயும் எப்போதும் – மணிமேகலை
கற்றது தமிழ், அங்காடித்தெரு – இந்த ரெண்டு படத்துக்கும் அப்படியே ஆப்போசிட்டான கேரக்டர்ல அஞ்சலி இந்தப் படத்துல கலக்கியிருப்பாங்க. ரொம்பவே போல்டான, எல்லாத்தையும் ஓப்பனா பேசுற, சமூகத்தைப் பத்தி சிந்திக்கிற ஒரு பொண்ணா நடிச்சிருப்பாங்க. அஞ்சலியே ஒரு இண்டர்வியூல, “என்னோட ரியல் லைஃப்க்கு பொருந்திப்போற ஒரு கேரக்டர்னா அது மணிமேகலைதான். நான் எப்பவுமே ஓப்பன் டைப். மனசுல எதையும் வைச்சுக்க மாட்டேன். வெளிய சொல்லிடுவேன்”னு சொல்லுவாங்க. மணிமேகலை கேரக்டர பார்த்தா, நமக்கும் இப்படி ஒரு காதலி கிடைச்சா நல்லாருக்கும்ல? அப்படினு தோணும். அந்தப் படத்துல சப்பியா ரொம்பவே அழகாவும் இருப்பாங்க. அந்தப் படத்துல நம்மளோட மனசை டக்னு பிடிச்சிக்கிறதும் அஞ்சலிதான். ஜெய்யை வம்பிழுக்குற காட்சிலாம் ஜோடின்னா, இதாய்யா ஜோடினு சொல்ல வைக்கும். கிளைமேக்ஸ்ல அஞ்சலி வெடிச்சு அழுற சீன்லாம், நம்மள அப்படியே உடைச்சிரும். நீ நடிகையா… நடிகை!
கலகலப்பு – மாதவி
ரொம்பவே ஆர்டிஸ்டிக்கான, சீரியஸான ரோல்கள்தான் அஞ்சலி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஆனால், அஞ்சலிக்கு கமர்ஷியல், குத்துப்பாட்டு, ஐட்டம் டான்ஸ்னு எல்லாத்துலயும் கலக்கணும்னு ஆசை. அந்த ஆசைக்கு தீனி போடுற மாதிரி அவங்களுக்கு கிடைச்ச கேரக்டர்தான் கலகலப்புல வந்த மாதவி. படத்துல அவங்க சீரியஸா, கொஞ்சம் கிளாமராதான் இருப்பாங்க. ஆனால், அவங்க பண்ற, பேசுற விஷயங்கள் எல்லாம் செம ஃபன்னியா இருக்கும். கலகலப்புல அஞ்சலி நடிச்ச சீன்ஸ்லாம் இன்னும் மீம் டெம்ப்ளேட்டா சோஷியல் மீடியால சுத்திட்டுதான் இருக்கு. எனக்கு காமெடியும் வரும்னு அஞ்சலி காமிச்ச படம், கலகலப்பு.
இறைவி – பொன்னி
ஆண்களோட பதற்றம், அந்தப் பதற்றத்துல எடுக்குற முடிவுகளால பெண்கள் தங்களோட வாழ்க்கைல எவ்வளவு பாதிக்கப்படுறாங்கனு பேசுன படம் இறைவி. இந்தப் படத்துல வர்ற எல்லா கேரக்டர்ஸூம் செமயா நடிச்சிருப்பாங்க. குறிப்பா எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிகனா மிகப்பெரிய பிரேக் கொடுத்தப்படம். அந்தப் படத்துலயும் அஞ்சலியோட கேரக்டர் ரொம்ப எதார்த்தமான தினம் தினம் நாம சந்திக்கிற பெண்கள் கூட்டத்துல இருக்குற ஏதோ ஒரு பெண்ணோட கதைதான். பொன்னி, கல்யாண வாழ்க்கை சம்பந்தமா நிறைய கனவுகளோட இருக்கு பொண்ணு. அதாவது, சினிமால காட்டுற மாதிரியான ஒரு வாழ்க்கை தனக்கு கிடைக்கும்னு எதிர்பார்க்குற பொண்ணு. அதையும் கியூட்டா ஆரம்பத்துல மழைல கைய நனைச்சுக்கிட்டே வெளிப்படுத்துவாங்க. ஆனால், கல்யாணம் ஆனப்புறம் வாழ்க்கையே மாறிப்போகும். கனவுலாம் உடைஞ்சு போகும். அந்த சோகத்தையும் வெளிப்படுத்தியிருப்பாங்க. ரொம்ப நாள் கழிச்சு கணவன் வரும்போது அவன் மேல இருக்குற கோவத்தையும் கொட்டித்தீர்ப்பாங்க. கடைசீல வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் நினைச்சு அழுதுட்டு, மழைல இறங்கி நடப்பாங்க. இப்படி பிரில்லியண்டா அந்த கேரக்டரை ஹேண்டில் பண்ணியிருப்பாங்க.
தரமணி, பேரன்பு, வத்திக்குச்சி, நாடோடிகள் 2 படங்கள்லயும் அஞ்சலியோட கேரக்டர்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். இந்த கேரக்டர்களை செலக்ட் பண்ணதுக்காகவே அஞ்சலியைக் கொண்டாடலாம். ‘தியேட்டரை விட்டு வெளிய போகும்போது என்னோட முகம் மக்கள் மனசுல இருக்குற மாதிரியான கேரக்டர்ஸ் பண்ணதான் எனக்கு விருப்பம்’னு அஞ்சலி சொல்லுவாங்க. இந்த மாதிரி இன்னும் பல கேரக்டர்கள் அஞ்சலிக்கு கிடைக்க வாழ்த்துகள்!
Also Read – நயன் – விக்கி ஜோடிக்கு சீனியர் இந்த 5 ஜோடிகள்தான்!