கிறிஸ் கிரீவ்ஸ்

Chris Greaves: அமேசான் டெலிவரி பாய் டு ஸ்காட்லாந்தின் ஹீரோ – கிறிஸ் கிரீவ்ஸின் கதை! #BANvSCO

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதித்திருக்கிறது ஸ்காட்லாந்து அணி. அந்த அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீவ்ஸ், அமேசான் டெலிவரி பாயாக வேலை பார்த்திருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை

கிறிஸ் கிரீவ்ஸ்
கிறிஸ் கிரீவ்ஸ்

இந்தியாவில் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கொரோனா அதிகரிப்பால், ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெறுகிறது. தொடரின் பி பிரிவு லீக் போட்டியில் வங்கதேச அணியை ஸ்காட்லாந்து எதிர்க்கொண்டது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 12 ஓவர்களில் 53 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏழாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய கிரிஸ் கீரீவ்ஸ், 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களோடு 28 பந்துகளில் 40 ரன்கள் அடிக்க, அந்த அணி 140 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது. பேட்டிங்கில் கலக்கிய கிரீவ்ஸ், சிறப்பாகப் பந்துவீசி ஷகிப் அல்ஹசன், முஷிஃபிகுர் ரஹீம் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டநாயகனாக ஜொலித்தார். சர்வதேச டி20 தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான இந்த வெற்றியே, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கெதிராக ஸ்காட்லாந்து பதிவு செய்த முதல் வெற்றியாகும்.

கிறிஸ் கிரீவ்ஸ்

ஸ்காட்லாந்தின் கிராமப்புறம் ஒன்றில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த கிரீவ்ஸ், கிரிக்கெட்டின் மீது தீராக் காதல் கொண்டிருந்தவர். ஸ்காட்லாந்து தேசிய அணிக்காகக் கடந்த மாதத்தில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர், கடந்த சில மாதங்கள் முன்பு வரை அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்திருக்கிறார். போட்டிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கோயெட்சர், “கிரீவ்ஸை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தநிலைக்கு வர அவர் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். அமேசான் நிறுவனத்துக்காக பார்சல்களை அவர் டெலிவரி செய்யும் வேலையில் இருந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அவர் அந்த வேலையில் இருந்தார். ஆனால், இப்போது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதை உங்களிடம் கூறுவது குறித்து அவர் அதிருப்தியடையலாம். மார்க் வாட், கிரீவ்ஸ் போன்ற அதிகம் வெளியில் தெரியாத வீரர்களிடமிருந்து இப்படியொரு ஆட்டத்தைப் பார்க்கவே ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு தியாகங்களைச் செய்தே அவர்கள் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்’’ என்றார்.

கிறிஸ் கிரீவ்ஸ்
கிறிஸ் கிரீவ்ஸ்

கிரீவ்ஸ், இங்கிலாந்து அணிக்காக விளையாடவும் முயற்சி செய்திருக்கிறார். உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மேட் பிரையரை கிரீவ்ஸ் ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். தன்னிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட்டும் இருப்பதால், அந்த நாட்டு அணிக்காக விளையாட முயற்சி செய்ய இருப்பதாகவும், அதற்காக உதவ வேண்டும் என்றும் பிரையரிடம் அவர் கேட்டிருக்கிறார். அப்போது, உதவுவதாக உறுதியளித்த பிரையர், கிரீவ்ஸிடம் இ-மெயில் ஐடியைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால், தன்னிடம் இ-மெயில் ஐடி இல்லாததால், தனது தாயின் இ-மெயில் ஐடியைக் கொடுத்திருக்கிறார். அவரிடமிருந்து இ-மெயில் வரும் என்று எதிர்பார்க்காத நிலையில், அவருக்கு பிரையரிடமிருந்து உதவி கிடைத்திருக்கிறது. மேட் பிரையர் மூலம் துர்ஹாம் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பயிற்சி பெரும் வாய்ப்பு கிரீவ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பே ஸ்காட்லாந்து அணியில் விளையாடும் கிரீவ்ஸின் கனவை நனவாக்கியிருக்கிறது.

Also Read – IPL Final: கிளாசிக் டூப்ளஸிஸ்; `லார்ட்’ தாக்குர்; அசத்தல் ஜடேஜா – #CSKvKKR மேட்சின் 4 வாவ் மொமண்ட்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top