டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் வரலாறு படைத்திருக்கிறது. #IndVsPak
#IndVsPak உலகக் கோப்பை
50 ஓவர், டி20 உலகக் கோப்பை என மொத்தம் சேர்த்து 12 முறை இந்திய அணியிடம் தோல்வியடைந்திருந்த பாகிஸ்தான், முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. 1992-ம் ஆண்டு முதல் கடந்த 29 ஆண்டுகளில் 12 முறை இந்திய அணியோடு உலகக் கோப்பை போட்டிகளில் மோதிய பாகிஸ்தான் ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. அந்தக் குறையை 2021 டி20 உலகக் கோப்பை போட்டி மூலம் நீக்கிக் கொண்டது பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பன்ட் 39 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
IndVsPak போட்டியின் 4 முக்கிய தருணங்கள்
பவர்பிளே திணறல்
கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி என இந்தியாவின் டாப் ஆர்டர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஷாகின் அஃப்ரிடி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்தியா 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இன் ஸ்விங்கில் மிரட்டிய ஷாகீன் அஃப்ரிடி முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மாவை வெளியேற்றினார். அடுத்த ஓவரில் கே.ராகுலை வீழ்த்தி மிரட்டினார். மறுமுனையில் பந்துவீசிய ஹசன் அலி, சூர்யகுமார் யாதவை வெளியேற்றினார்.
மிடில் ஆர்டர் சிக்கல்
பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கைகோர்த்த விராட் கோலி – பன்ட் ஜோடி 6.2 ஓவர்களில் 53 ரன்கள் சேர்த்தது. ஹசன் அலி வீசிய 12-வது ஓவரில் பன்ட், இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டாலும், அடுத்து பந்துவீசிய ஷதாப் கான் ஓவரில் வீழ்ந்தார். பன்ட் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. 13 ஓவர்களில் 84 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இந்தியா இருந்தது.
ஸ்டிரைக் ரேட்
பன்ட் ஆட்டமிழந்ததும் ஃபார்ம் இன்றித் தவித்து வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னதாக ஜடேஜாவை புரமோட் செய்தது இந்திய அணி. கோலி களத்தில் இருக்கும் நிலையில், வலது கை – இடது கை பேட்டிங் கூட்டணிக்காக இந்தக் கணக்குப் போடப்பட்டிருக்கலாம். ஆனால், இது கைகொடுக்கவில்லை. தான் சந்தித்த 12-வது பந்தில்தான் முதல் பவுண்டரியை ஜடேஜா அடித்தார். அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். ஸ்லோபால் வீசுவதில் வல்லவரான ரவுஃப், 17வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். டெத் ஓவர்களில் கெய்ல், டிவிலியர்ஸ், ரஸலுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்டிரைக் வைத்திருக்கும் விராட் கோலியை, 19வது ஓவரில் ஷாகீன் அஃப்ரிடி வெளியேற்றினார். கோலி, 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை டி20 போட்டியில் விராட் கோலி அவுட் ஆவது இதுவே முதல்முறை. கடைசி ஓவரை வீசிய ரவுஃப் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க இந்திய அணியால் 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் ஸ்டிரைக் ரேட் கூட 138-ஐத் தாண்டவில்லை. இந்தியா ரன் குவிக்காமல் போனதற்கு இது முக்கிய காரணம்.
மெதுவான தொடக்கம் டு அசத்தல் ஃபினிஷ்
152 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான், பவர் பிளே ஓவர்களில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விளையாடியது. ரிஸ்வான் – பாபர் ஆஸம் ஜோடி விக்கெட்டை இழக்காமல் பவர் பிளே முடிவில் 43 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாவது பவுலிங் செய்யும் அணிக்கு Due Factor எனப்படும் பனிப்பொழிவு முக்கியமான தலைவலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது போலவே, இந்தப் போட்டியில் இந்திய அணியை ரொம்பவே சோதித்தது. முதல் 8 ஓவர்களுக்குள் விக்கெட் வீழ்த்தியிருந்தால், பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், விக்கெட் எதுவும் இழக்காமல் பனிப்பொழிவைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது பாகிஸ்தான்.
பவர்பிளேவின் கடைசி ஓவர், அடுத்த இரண்டு ஓவர்கள் பவுண்டரி எதுவும் இல்லாமல் கட்டுக்கோப்பாக இந்தியா பந்துவீசியது. ஜடேஜா வீசிய ஒன்பதாவது ஓவரில் ஒரு சிக்ஸர், வருண் சக்கரவர்த்தி வீசிய 10வது ஓவரில் ஒரு பவுண்டரி என மெதுவாக ரன் ரேட் வேகத்தை பாபர் ஆஸம் அதிகரிக்கத் தொடங்கினார். பனிப்பொழிவும் கைகொடுக்க பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் சேர்ந்து விக்கெட்டை இழக்காமலேயே மேட்சை முடித்து வைத்தனர். டி20 வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் முதல் 10 விக்கெட் வெற்றி இதுதான். அதேபோல், பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்பதும் இதுதான் முதல்முறை.
Also Read -T20 Worldcup: மெண்டார் தோனி வரவால் ரவி சாஸ்திரிக்கு என்ன ரோல்… விவாதிக்கும் ரசிகர்கள்!